ஊழலில் புதிய சாதனை.. ஆம் ஆத்மி மீது குற்றச்சாட்டு.. மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அதிரடி!
டெல்லி: டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி அரசு ஊழல் செய்வதில் புதிய சாதனை படைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் விமர்சித்துள்ளார்.
டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி அரசின் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, முறையற்ற வகையில் மதுபான லைசென்ஸ் வழங்குவதில் சலுகைகள் காட்டியதாகவும், இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதேபோல் லைசென்ஸ் வழங்குவதில் புதிய நடைமுறை மூலம் மதுபான விற்பனை டெல்லி அரசிடமிருந்து கைமாறி நான்கு கார்ப்பரேஷன் வசம் சென்றது.

துணை நிலை ஆளுநர் பரிந்துரை
இந்த நான்கு கார்ப்பரேஷன் பகுதியிலும் டெல்லி மதுபான விற்பனையில் மொத்தமாக 50 சதவிகிதம் விற்பனை நடைபெறுகிறது. இவை அனைத்தும் இப்போது தனியார் வசம் சென்றுள்ளது. இப்புதிய கொள்கைக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது குறித்து இரு கட்சிகளும் துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவிடம் புகார் அளித்தன. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா பரிந்துரைத்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசிய அளவில் ஆம் ஆத்மி வளர்வது பாஜகவுக்கு பிரச்னையை ஏற்படுத்துகிறது. இதனால் ஊழல் குற்றச்சாட்டுகள் என்ற பெயரில் அமைச்சர்கள் கைது செய்யப்படுகிறார். விரைவில் மனீஷ் சிசோடியாவும் கைது செய்யப்படுவார். ஆனால் நாங்கள் சிறை செல்ல அஞ்ச மாட்டோம் என்று தெரிவித்திருந்தார்.

அனுராக் பதிலடி
இதற்கு மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பதில் அளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆம் ஆத்மி கட்சியில் ஊழல்வாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளது. பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலால் பதிலளிக்க முடியவில்லை. ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள அமைச்சர்கள் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். ஊழல்வாதிகள் ஆட்சியில் இருக்க உரிமை இல்லை.

ஊழல்வாதிகள்
ஏற்கனவே ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவையில் உள்ள சத்யேந்திர ஜெயின் நினைவை இழந்து சிறையில் இருக்கிறார். இதேபோல் மனீஷ் சிசோடியாவும் நினைவை இழப்பாரா? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்ட போது ஊழலற்ற நிர்வாகம் என்று உறுதி அளித்தீர்கள். ஆனால் இப்போது ஆம் ஆத்மி அரசில் இருந்து அடுத்தடுத்து ஊழல் குற்றச்சாட்டுகள் வெளி வந்துள்ளன. ஊழலில் ஆம் ஆத்மி புதிய சாதனைகளை படைத்துள்ளது என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications