பிரதமர் வீடு முற்றுகை.. ஆம் ஆத்மி போராட்டத்தால் டெல்லியில் பரபரப்பு! போலீஸ் அனுமதி மறுப்பு
டெல்லி: டெல்லி முதலமைச்சரும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தலைவர்களில் ஒருவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று பிரதமர் மோடியின் வீட்டை முற்றுகையிட ஆம் ஆத்மி கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு வழக்கில், கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை தொடர் சம்மனை அனுப்பியிருந்தது. ஆனால், தங்களை முடக்க மத்திய அரசு, விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக கூறி கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக மறுத்து வந்தார். 8வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டபோது, அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடி, அமலாக்கத்துறை தன்னை கைது செய்யக்கூடாது என்று கேட்டிருந்தார். ஆனால், நீதிமன்றம் இவரது கோரிக்கைக்கு செவி சாய்க்க மறுத்துவிட்டது.

இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை கெஜ்ரிவால் வீட்டில் அதிரடி ரெய்டு நடத்திய அமலாக்கத்துறை, இரண்டு மணி நேர விசாரணைக்கு பின்னர் அவரை கைது செய்தது.
சில நாட்களுக்கு முன்னர் ஜார்க்கண்ட் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இக்கட்சி இந்தியா கூட்டணியில் இருக்கிறது. அதேபோல ஏற்கெனவே டெல்லியின் மூன்று அமைச்சர்கள் பல்வேறு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், டெல்லி முதலமைச்சரும், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆம் ஆத்மி மட்டுமல்லாது, இந்தியா கூட்டணி கட்சிகளிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த கைது நடவடிக்கைக்கு மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று பிரதமரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஆம் ஆத்மி கட்சியினர் முடிவெடுத்துள்ளனர். ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்திருக்கிறது. லோக் கல்யாண் மார்க் மெட்ரோ ரயில் நிலையம் மூடப்பட்டிருக்கிறது.
இது குறித்து டெல்லி போலீஸ் கமிஷ்னர் தேவேஷ் குமார் மஹ்லா கூறுகையில், "பிரதமர் இல்லம் அமைந்திருக்கும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. போராட்டக்காரர்களை கண்காணிக்க 50 ரோந்து வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளார்.
போராட்டம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மாநில ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் கூறுகையில், "இன்று டெல்லி ஷஹீதி பூங்காவில் இருந்து 'மக்கள் இயக்கம்' தொடங்கும். பஞ்சாபில் அம்மாநில முதல்வர் பகவந்த் மான் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியின் எம்எல்ஏக்கள், நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஒன்று கூடி பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மைகளை எரித்து போராட்டத்தை நடத்துவார்கள். ஹோலி கொண்டாடிய கையோடு நாங்கள் பிரதமர் வீட்டை முற்றுகையிடுவோம். மோடியின் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆம் ஆத்மி உறுதியாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
முன்னதாக வீடியோவை வெளியிட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி, "சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்" என கெஜ்ரிவால் கூறியதாக தெரிவித்திருந்தார். அதாவது, "சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன். எந்த சிறையும் என்னை நிரந்தரமாக அடைத்து வைத்திருக்க முடியாது. சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன். நான் கடுமையான நெருக்கடிகளை சந்தித்திருக்கிறேன், இந்த கைது என்னை ஆச்சரியப்படுத்தவில்லை" என கெஜ்ரிவால் கூறியதாக வீடியோவில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது ஏன்?: கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார்.
இந்த குற்றச்சாட்டில், மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த முறைகேடுகள் குறித்து அரசின் தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஆளுநர் சக்சேனா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கேட்டு கொண்டார். அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். மறுபுறம் அமலாக்கத்துறையும் சட்டவிரோத பண பரிமாற்றம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. தொடர்ச்சியாக சம்மன் அனுப்பப்பட்டு அதன் பின்னர்தான் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications