விகே பாண்டியன் மனைவி சுஜாதா மீது பாஜக அளித்த பரபர புகார்.. உடனே இடமாற்றம் செய்த தேர்தல் ஆணையம்!
டெல்லி: பாஜக புகார் அளித்து சில மணி நேரத்தில் ஒடிசாவின் மிஷன் சக்தி துறையின் செயலாளரும், பிஜேடி கட்சியின் விகே பாண்டியனின் மனைவியுமான சுஜாதா கார்த்திகேயனை பணியிட மாற்றம் செய்யத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது. அங்கு இப்போது பிஜு ஜனதா தளம் ஆட்சியில் இருக்கும் நிலையில், பாஜக கடும் போட்டியைக் கொடுத்து வருகிறது.

பிஜு ஜனதா: அங்கு ஆளும் பிஜு ஜனதா தள கட்சியில் முக்கிய தலைவராக இருப்பவர் வி.கே.பாண்டியன். ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த வி.கே.பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கடந்தாண்டு நவம்பரில் பிஜு ஜனதா தள கட்சியில் இணைந்தார். அதன் பிறகு தீவிர அரசியலில் இவர் கவனம் செலுத்தி வருகிறார். அதேநேரம் அவரது மனைவியான சுஜாதா கார்த்திகேயன் ஒடிசாவின் மிஷன் சக்தி துறையின் செயலாளராக இருக்கிறார்.
ஒடிசாவில் வி.கே.பாண்டியன் மீது தக்காளி வீச்சு! காங்கிரஸ்தான் காரணம்.. பிஜு ஜனதா தளம் குற்றச்சாட்டு
இதற்கிடையே அவரது பதவியை வைத்து சுய உதவிக் குழுக்களில் இருக்கும் பெண்களை அரசியல் ஆதாயங்களுக்காகச் சுஜாதா தவறாக வழிநடத்துவதாக பாஜக புகார் அளித்தது.
நவீன் பட்நாயக்: சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் செயல்முறையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் முதல்வர் நவீன் பட்நாயக் கடந்த 2001 மார்ச் 8ஆம் தேதி தொடங்கியது தான் மிஷன் சக்தி திட்டம்.. ஆளும் கட்சியில் இருக்கும் முக்கிய தலைவர் ஒருவரின் மனைவி இந்தத் திட்டத்தின் பொறுப்பாளராக இருப்பதால் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்திருந்தது.
சுஜாதா வெளிப்படையான, அப்பட்டமான முறையில் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறார் என்றும் அரசு மற்றும் ஆள் பலத்தின் மூலம் வாக்காளர்களை பிஜு ஜனதா தளத்திற்கு ஆதரவாக வழிநடத்துவதாகவும் பாஜக புகார் அளித்திருந்தது. இதனால் சட்டமன்றத் தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல் முடியும் வரை சுஜாதாவுக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படக்கூடாது என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

புகார்: மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ராஜீவ் சந்திரசேகர், ராஜ்யசபா எம்பி சுதன்ஷு திரிவேதி மற்றும் கட்சியின் மூத்த தலைவர் ஓம் பதக் ஆகியோர் தலைமையிலான குழு, இந்த புகாரைத் தேர்தல் ஆணையத்திடம் அளித்தது. விகே பாண்டியன் அரசு நிர்வாகத்தில் பணிபுரிந்தவர் என்பதால் அவருக்கும் அங்குச் செல்வாக்கு அதிகம் இருப்பதாகவும் இந்தச் சூழலில் மனைவியும் முக்கிய பதவியில் இருப்பதால் விகே பாண்டியன் தனது மனைவி மூலம் தனது நிர்வாக அனுபவத்தையும் பயன்படுத்தித் தேர்தலில் செல்வாக்கு செலுத்துவார் என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
விருப்ப ஓய்வு: இது தொடர்பாக பாஜக அளித்துள்ள புகாரில், "நவம்பர் 2023 இல், ஐஏஎஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற பிறகு, பாண்டியன் பிஜு ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். அங்கு அவர் கேபினட் அமைச்சர் பதவியுடன் கூடிய மாநிலத்தின் முதன்மைத் திட்டமான 5T டிரான்ஸ்பர்மேஷன் திட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்... பீகார் முதல்வர் மற்றும் பிஜேடி கட்சிக்கும் அவருக்கும் இருக்கும் உறவையும் நாம் கவனிக்க வேண்டும்
இந்தச் சூழலில் பணியில் இருக்கும் ஐஏஎஸ் சுஜாதா தனது வேலைக்கு நேர்மையாக இருக்காமல் தனது கணவர் சொல்வதைக் கேட்டு பிஜேடியின் ஏஜெண்டாக செயல்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எனவே தேர்தல் முடியும் அவரை விடுப்பில் அனுப்பி வைக்க வேண்டும்.. அல்லது மக்களைச் சந்திக்காத ஒரு பணிக்கு அவரை மாற்ற வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.
பணியிட மாற்றம்: பாஜக இந்த புகாரை அளித்த சில மணி நேரத்தில் சுஜாதா கார்த்திகேயனை மக்களுடன் நேரடித் தொடர்பு இல்லாத வேறு துறைக்கு உடனடியாக இடமாற்றம் செய்யத் தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இந்த இடமாற்ற உத்தரவை ஒடிசா மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். சுஜாதாவின் புதிய நியமனம் குறித்த அறிவிப்பை ஓரிரு நாட்களில் ஒடிசா அரசு வெளியிடும் என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications