“காங்கிரஸ் கட்சி முஸ்லிம் லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸாக மாறிவிட்டது" - பிரதமர் மோடி தாக்கு!
டெல்லி: "காங்கிரஸ் MMC - முஸ்லிம் லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸாக மாறிவிட்டது. இப்போது காங்கிரஸின் முழு அஜெண்டாவும் இதைச் சுற்றியே உள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள் பெரிய பிளவு ஏற்படக்கூடும்." என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். பீகார் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசினார் மோடி.
பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக - ஜேடியுவின் தேசிய ஜனநாயக கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது. பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியதும், ஆரம்பம் முதலே பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி பாஜக, ஜேடியு கூட்டணி 205 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 91 இடங்களிலும், ஜேடியு 86 இடங்களிலும், எல்ஜேபி 19 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. அதே வேளையில் காங்கிரஸ், ஆர்ஜேடி அங்கம் வகிக்கும் மகாபந்தன் கூட்டணி 33 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.
பீகார் சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதனையடுத்து அக்கட்சியின் வெற்றியை நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திலும் ஏராளமான தொண்டர்கள் ஒன்று கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி பாஜக தலைமை அலுவலகத்துக்கு வந்த நிலையில், அவரை பாஜக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, "மாபெரும் வரலாற்று தீர்ப்பை கொடுத்து, பீகார் மக்கள் அனைத்து தேர்தல் சாதனைகளையும் முறியடித்துவிட்டனர். பழைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளனர். மறைந்த ஜெய்பிரகாஷ் நாராயணன், கர்பூர் தாகூரை வணங்குகிறேன். இனி ஒருபோதும் ஆர்ஜேடி அரசு மீண்டும் வரப்போவது கிடையாது.
நாங்கள் மக்களின் சேவகர்கள். எங்களின் கடின உழைப்பு மூலம் மக்களை மகிழ்ச்சி அடைய வைத்தோம். மக்களின் மனங்களை வென்றுள்ளோம். இதனால் தான் மீண்டும் ஒரு முறை என்.டி.ஏ கூட்டணி அரசை மக்கள் கொண்டு வந்துள்ளனர். மாபெரும் வரலாற்று வெற்றியை அளித்துள்ள பீகார் மக்களின் நலனுக்காக என்.டி.ஏ கூட்டணி அரசு பாடுபடும்.
அவர்கள் முஸ்லிம் யாதவர்கள் கூட்டணியால் வெல்ல முயன்றனர். காங்கிரஸ் எம்எம்சி - முஸ்லிம் லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸாக மாறிவிட்டது. இப்போது காங்கிரஸின் முழு அஜெண்டாவும் இதைச் சுற்றியே உள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள் இருப்பவர்கள் இந்த எதிர்மறையால் அதிருப்தி அடைந்துள்ளனர். காங்கிரஸில் பெரிய பிளவு ஏற்படக்கூடும்.
நாம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஓட்டுகளால் அவர்களை வீழ்த்தியுள்ளோம். பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளை வணங்குகிறேன். என்.டி.ஏ கூட்டணி கட்சிகளுக்கு வாழ்த்துகள். கடந்த ஆறு தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மொத்த எம்எல்ஏக்களை விட இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகம்." எனப் பேசியுள்ளார்.
முன்னதாக பிரதமர் மோடி வெளியிட்ட ட்வீட்டில் பீகார் தேர்தல் வெற்றியின் மூலம் சமூக நீதி, நல்லாட்சி வென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "நல்லாட்சி வென்றுள்ளது. வளர்ச்சி வென்றுள்ளது. மக்கள் நல உணர்வு வென்றுள்ளது. சமூக நீதி வென்றுள்ளது. 2025 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரலாற்று சிறப்புமிக்க மற்றும் ஈடு இணையற்ற வெற்றியை அளித்ததற்காக பீகார் மக்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி.
இந்தத் தீர்ப்பு மக்களுக்குச் சேவை செய்வதற்கும் பீகாருக்காக பணியாற்றுவதற்கும் எங்களுக்குப் புதிய வலிமையைத் தந்துள்ளது. வரவிருக்கும் காலங்களில் பீகாரின் முன்னேற்றத்திற்காகவும், அதன் உள்கட்டமைப்புக்காகவும், பீகாரின் கலாச்சாரத்திற்காகவும் இன்னும் அதிகமாகப் பாடுபடுவோம். மாநிலத்தின் இளைஞர் சக்தி, மற்றும் பெண் சக்தி வளமான வாழ்க்கையை நடத்துவதற்கான பல வாய்ப்புகள் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநிலத்திற்கு முழுமையான வளர்ச்சியை வழங்கியுள்ளது. எங்களுடைய செயல்பாட்டுகளின் அடிப்படையிலும், மாநிலத்தை மேலும் புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லும் தொலைநோக்குத் திட்டத்தின் அடிப்படையிலும் மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். இந்த இணையற்ற வெற்றிக்காக முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை சேர்ந்த எங்கள் கூட்டாளிகளான சிராக் பாஸ்வான், ஜிதன் ராம் மஞ்சி மற்றும் உபேந்திர குஷ்வாஹா ஆகியோருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications