தண்டனைக்கு பின்.. நாடாளுமன்றம் சென்ற ராகுல்.. பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அமளி.. சபை ஒத்திவைப்பு
டெல்லி: மோடி பெயர் குறித்த சர்ச்சையால் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் நேற்று 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் அவரது எம்பி பதவி பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இன்று ராகுல் காந்தி நாடாளுமன்றம் சென்றார். அவர் பேச அனுமதி கோரியநிலையில் மறுக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ், திமுகவினர் ராகுல் காந்திக்கு ஆதரவாக கோஷமிட்ட நிலையில் சபை ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பிரசாரத்தில் பேசினார். அப்போது‛மோடி' என்ற பெயரை குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை கிளப்பியது.
மேலும் பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் ராகுல் காந்தி செயல்படுவதாக பாஜகவினர் குற்றம்சாட்டிய நிலையில் அவர் மீது நடவடிக்கை கோரினர். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2 ஆண்டு சிறை தண்டனை
இந்நிலையில் தான் குஜராத் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான புர்னேஷ் மோடி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். அவதூறு வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி எனக்கூறிய நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது. மேலும் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கி 30 நாட்கள் தண்டனையை நிறுத்தி வைத்தது.

தகுதி நீக்க நடவடிக்கை
இந்த தண்டனையால் ராகுல் காந்தியின் நேற்று லோக்சபாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதாவது அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி மக்கள் பிரதிநிதியாக உள்ளவர் 2 ஆண்டு அல்லது அதற்கு மேலாக சிறை தண்டனை பெறும் பட்சத்தில் பதவி நீக்கம் செய்ய வாய்ப்பு வழங்குகிறது. அதனடிப்படையில் அவரது பதவி பறிக்கப்பட்டது. மேலும் சூரத் நீதிமன்ற தீர்ப்பபை எதிர்த்து ராகுல் தரப்பில் மேல்முறையீடு செய்ய உள்ளார்.

நாடாளுமன்றம் வந்த ராகுல்
முன்னதாக தண்டனை அறிவிப்புக்கு பிறகு முதல் முதலாக ராகுல் காந்தி இன்று நாடாளுமன்றம் வந்தார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சி எம்பிக்கள் ஆலோசனை நடத்தினர். இதில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது ராகுல் காந்தி விவகாரத்தில் பாஜகவினரை எதிர்கொள்வது பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அக்கட்சியின் தேசிய தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் பேரணி சென்றனர் மேலும் வரும் நாட்களில் அனைத்து கட்சிகளையும் இணைத்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமளியால் சபை ஒத்திவைப்பு
இதையடுத்து வழக்கம்போல் நாடாளுமன்றத்தின் 2வது அமர்வின் இன்றைய கூட்டம் நடந்தது. நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு பேச அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து ராகுல் காந்திக்கு பேச அனுமதி வழங்காததை கண்டித்து காங்கிரஸ், திமுக எம்பிக்கள் கோஷத்தோடு வலியுறுத்தினர். அதேபோல் பாஜகவினரும் எதிர்கோஷமிட்டனர். மேலும் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை தேவை எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனால் கூச்சல் குழப்பத்தால் அமளி ஏற்பட்டது.

சபைகள் ஒத்திவைப்பு
இருப்பினும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பைனான்ஸ் திருத்த சட்ட மசோதா 2023யை தாக்கல் செய்தார். இதையடுத்து நாடாளுமன்றத்தின் லோக்சபாநடவடிக்கைகள் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் நாடாளுமன்ற ராஜ்யசபாவிலும் காங்கிரஸ் இதே கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால் ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications