பெயர் வரட்டும், உடனே செஞ்சுருவோம் - குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக மத்திய அமைச்சர் விளக்கம்
டெல்லி : வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பாக சம்யுக்த் கிஷான் மோர்சாவிடம் பெயர் பட்டியல் வந்தவுடன் மத்திய அரசு குழுவை அமைக்கும் என மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மாநிலங்களவையில் உறுதியளித்துள்ளார்.
3 வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வெற்றிகண்ட விவசாயிகள் அத்துடன் வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்தனர். இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என சம்யுக்த் கிஷான் மோர்ச்சா விவசாயிகள் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்தது.

இதனை தொடர்ந்து விவசாயிகளின் சங்க பிரதிநிதிகள், வேளாண் துறை அதிகாரிகளை கொண்ட குழு இதற்காக அமைக்கப்படும் என மத்திய அரசு அப்போது அறிவித்தது. பிரதமர் நரேந்திர மோடியும் குறைபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்குவது குறித்து ஆராய்ந்து அதனை நடைமுறைக்கு கொண்டு வர தனியாக ஒரு குழு அமைக்கப்படும் என உறுதியளித்தார். ஆனால், இதுவரை அதுபோன்ற குழு அமைக்கப்படவில்லை.
இந்த நிலையில், நேற்று மாநிலங்களவை கேள்வி நேரத்தில் திமுக எம்.பி. சண்முகம், வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பது தொடர்பாக குழுவை அமைக்க வேண்டும் என மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றார்.
அவர் தனது உரையில், "குழுவில் இடம்பெற வேண்டிய சம்யுக்த் கிஷான் மோர்ச்சா விவசாயிகள் கூட்டியக்கத்தின் பிரதிநிதிகளின் பெயர்கள் கிடைத்தவுடன் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பதற்கான குழுவை அமைப்போம்." என உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications