பிரதமரின் ஆய்வகத்தில் அக்னிபாத் ஒரு சோதனை.. இந்தியாவுக்கும், இளைஞர்களுக்கும் ஆபத்து - ராகுல் காந்தி
டெல்லி: அக்னிபாத் திட்டம் பிரதமரின் ஆய்வகத்தில் நடக்கும் ஒரு பரிசோதனை முயற்சி என்றும், இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இளைஞர்களின் எதிர்காலத்துக்கும் ஆபத்து என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருக்கிறார்.
இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னிவீர் என்ற பெயரில் புதிய துறையை உருவாக்கி இருக்கும் மத்திய அரசு, அக்னிபாத் என்ற திட்டத்தை தொடங்கி இருக்கிறது.
இத்திட்டத்தை நாடு முழுவதும் இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்துள்ளது. எதிர்கட்சிகளும், முன்னாள் ராணுவ அதிகாரிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்
அக்னிபாத் எதிர்ப்பு போராட்ம்- 62 இடங்களில் 2132 ரயில்கள் ரத்து: வைகோ கேள்விக்கு ராஜ்யசபாவில் பதில்

அக்னிபாத்
இத்திட்டத்தின் மூலம் 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் கீழ் அக்னி வீர் என்ற பெயர் கொண்ட வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள். 17.5 முதல் 21 வயதுக்கு உட்பட்ட 45 ஆயிரம் பேருக்கு இத்திட்டத்தின் கீழ் பணி வழங்கப்பட இருக்கிறது. இவர்களுக்கு 6 மாத பயிற்சியளிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஒப்பந்த பணி வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்கு பின் 25% பேருக்கு மட்டும் 15 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் மீண்டும் பணி வழங்கப்படும். மீதம் உள்ள 75 சதவீதம் பேர் எந்தவிதமான ஓய்வூதிய பலனும் இன்று பணியிலிருந்து நீக்கப்படுவார்கள். எதிர்ப்பை தொடர்ந்து இந்த வயது வரம்பு 23 ஆக அதிகரிக்கப்பட்டது.

இளைஞர்கள் எதிர்ப்பு
இந்த புதிய திட்டத்துக்கு ராணுவத்துக்கு தயாராகி வரும் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தெலுங்கானா, உபி, பீகாரில் ரயில்களுக்கு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் தீ வைத்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் பணிகள் நடைபெறவில்லை. ராணுவ பணிக்காக 2 ஆண்டுகளாக பலர் காத்துள்ள நிலையில், ராணுவம் வயது வரம்பை தளர்த்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.

ராணுவம் விளக்கம்
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி, "ஒழுக்கமே எங்களின் அடிப்படை. ஒழுக்கக்கேடான செயல்களுக்கு இங்கு இடமில்லை. அக்னிபாத்தை திரும்பப்பெற முடியாது. உயரமான இடங்களில் பாதுகாப்பு பணியில் வயதானவர்களை ஈடுபடுத்துவதால் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே இளைஞர்களை தேர்வு செய்கிறோம். அக்னிவீரர்கள் உயிரிழந்தால் இழப்பீடாக ரூ.ஒரு கோடி வழங்கப்படும்." என்றார்.

ஆட்கள் தேர்வு
ஒரு பக்கம் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்க மறுபக்கம், அக்னிபாத் திட்டத்தின்கீழ் ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படைகளுக்கும் தனித்தனியாக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. இது வரை நடைபெற்ற ஆட்கள் தேர்வில் லட்சக்கணக்கானோர் அக்னிவீர் பணிக்காக விண்ணப்பித்து உள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்து இருக்கிறது.

ராகுல் காந்தி
இந்த திட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, "ஆண்டுதோறும் 60,000 வீரர்கள் ராணுவத்திலிருந்து ஓய்வுபெறுகின்றனர். இவர்களில் 3000 பேருக்கு மட்டுமே அரசு வேலை கிடைக்கிறது. 4 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் ஓய்வுபெறும் அக்னிவீரர்களின் எதிர்காலம் என்ன? பிரதமரின் ஆய்வகத்தில் நடக்கும் ஒரு பரிசோதனை முயற்சி அக்னிபாத். இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இளைஞர்களின் எதிர்காலத்துக்கும் ஆபத்து." என்று குற்றம்சாட்டி இருக்கிறார்.