வேளாண் சட்டம் ரத்து.. பா.ஜ.க ஆதரவாளர் கங்கனா ரணாவத் என்ன இப்படி சொல்லீட்டாங்க.. வைரலாகும் போஸ்ட்!
டெல்லி: மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்காமல் இருந்தது. வேளாண் சட்டத்தை ஒன்றரை வருடத்திற்கு நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு கூறியது.

விவசாயிகள் போராட்டம்
ஆனால் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறினார்கள். விவசாயிகளை அடிக்கடி பேச்சுவார்தைக்கு அழைக்கும் மத்திய அரசு, வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதில் பிடிவாதமாக இருந்தது. இதனால் எதற்கும் சளைக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் அவ்வப்போது நாடு தழுவிய அளவில் 'பந்த்'திலும் பங்கேற்றனர்.

வேளாண் சட்டங்கள் வாபஸ்
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியதுடன், விவசாயிகளுக்கும் ஆதரவு கொடுத்தனர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி இன்று அதிரடியாக அறிவித்தார். விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து பாடுபடும் என்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் மோடி தெரிவித்தார்.

விவசாயிகள் வெற்றி
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தலை மனதில் வைத்துதான் மத்திய அரசு இந்த முடிவெடுத்துள்ளதாகவும், எப்படியோ விவசாயிகளிடம் மோடி அரசு மண்டியிட்டு விட்டது என்றும் விவசாயிகள் வெற்றி பெற்று விட்டதாகவும் எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன . அதே வேளையில் மோடியின் முடிவு ஏமாற்றம் அளிப்பதாக பாஜகவினர் சிலர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video

வெட்கக்கேடானது
இந்த நிலையில் பா.ஜ.க ஆதரவாளரும், அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருபவருமான நடிகை கங்கனா ரணாவத் வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட போஸ்டில், '' இது 'துக்ககரமான, வெட்கக்கேடானது மற்றும் முற்றிலும் நியாயமற்றது'' என்று கூறியுள்ளார். சமீபத்தில் பத்மஸ்ரீ விருது பெற்ற கங்கனா ரணாவத் ''இந்தியாவுக்கு 2014-ம் ஆண்டு தான் சுதத்ந்திரம் கிடைத்தது. 1947-ம் ஆண்டு கிடைத்த சுதந்திரம் பிச்சை'' என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications