நெகிழ்ச்சி.. லாலு பிரசாத் யாதவ் காலில் விழுந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
டெல்லி: அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் பாட்னாவில் நாளை எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கிடையே தான் இன்று திடீரென பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் காலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விழுந்த நிலையில் பின்னணியில் உள்ள தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதையடுத்து பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார். அதன்பிறகு 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றது. 2வது முறையாக நரேந்திர மோடி பிரதமாக பதவியேற்று செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் பாஜகவை வருகிற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்பில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
குறிப்பாக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதனால் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு அவர் அழைப்பு விடுத்து இருந்தார். இந்த கூட்டம் ஜூன் 12ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி வெளிநாடு சென்றது, தமிழக முதல்வர் முக ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட சில தலைவர்களுக்கு அந்த நாளில் வேறு நிகழ்ச்சிகள் இருந்தன.
இதனால் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி இந்த கூட்டம் நாளை பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிரா மாஜி முதல்வர் உத்தவ் தாக்கரே, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்கின்றனர்.
மேலும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், அவரது மகனும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்கின்றனர். உள்பட பாஜகவை எதிர்க்கும் 20 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஆம்ஆத்மி கட்சி இந்த கூட்டத்தில் பங்கேற்வது இழுபறியாக உள்ளது.

இந்நிலையில் தான் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று பீகார் தலைநகர் பாட்னாவுக்கு சென்றார். அங்கு அவர் பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவை சந்தித்தார். லாலு பிரசாத் யாதவின் வீட்டுக்கு மம்தா பானர்ஜி சென்றபோது அவரை லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.
இதையடுத்து திடீரென மம்தா பானர்ஜி குனிந்து லாலு பிரசாத்தின் காலை தொட்டு வணங்கினார். லாலு பிரசாத் யாதவ் அவரை ஆசீர்வாதம் செய்தார். தன்னை விட அரசியலிலும், வயதிலும் மூத்தவர் என்ற முறையில் மம்தா பானர்ஜி லாலு பிரசாத்தின் காலில் விழுந்தார். அதன்பிறகு லாலு பிரசாத்தின் உடல்நலம் குறித்து மம்தா பானர்ஜி கேட்டறிந்தார். மேலும் அவர்கள் அரசியல் பற்றியும் விவாதித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே லாலு பிரசாத்தின் காலில் மம்தா பானர்ஜி விழுந்து ஆசீர்வாதம் பெற்ற வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications