என்னை காப்பாற்ற வேறவழியே இல்லை.. புலம்பிய கே.டி. ராஜேந்திர பாலாஜி இன்று பாஜகவில் இணைகிறார்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் இன்று பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக, பா.ஜ.க) இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக ஆட்சிக் காலத்தில் சர்ச்சைகளுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாமல் பேசி வந்தவர் ராஜேந்திர பாலாஜி. பா.ஜ.க.வுக்கு ஆதரவான கருத்துகளை அதிமுகவில் அதிகமாக பேசியவரும் அவர்தான்.

ஒருகட்டத்தில் மோடி எங்கள் டாடி என்ற வசனத்தை உதிர்த்தார். இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினை ஒருமையில் விமர்சித்தும் சர்ச்சையில் சிக்கினார். இதனிடையே கடந்த 2011-13 ஆம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக ராஜேந்திர பாலாஜி மீது மகேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

சொத்து குவிப்பு வழக்கு

சொத்து குவிப்பு வழக்கு

அதாவது வருமானத்துக்கு அதிகமாக ரூ7 கோடி சொத்து குவித்தார் ராஜேந்திர பாலாஜி என்பது வழக்கு. இது தொடர்பான மனுவில், ராஜபாளையம் அருகே தேவதானத்தில் 74 லட்சம் ரூபாய் மதிப்பிலான 35 ஏக்கர் நிலத்தை ராஜேந்திர பாலாஜி வாங்கினார்; இந்த நிலத்தின் உண்மையான மதிப்பு 6 கோடி ரூபாய்; திருத்தங்கல் பகுதியில் 23.33 லட்சத்துக்கு 2 வீட்டுமனைகளும்,4.23 லட்சத்திற்கு 75 சென்ட் நிலமும் ராஜேந்திர பாலாஜி வாங்கினார். அதன் சந்தை மதிப்பு 1 கோடிக்கு அதிகமாகும் என்றும் ஆவணங்களுடன் மகேந்திரன் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில் நீதிபதி சத்தியநாராயணன், ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். மற்றொரு நீதிபதியான ஆர். ஹேமலதா, நீண்ட இடைவெளிக்குப் பின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவதால் பலன் எதுவும் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். இரு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பு வழங்கியதால் மூன்றாவது நீதிபதியாக நிர்மல்குமார் நியமிக்கப்பட்டார். இந்த வழக்கில் கடந்த 5-ந் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி நிர்மல்குமார், ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கை போலீசார் தொடர்ந்து விசாரிக்க தடை இல்லை என அதிரடியாக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 19-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனால் ராஜேந்திர பாலாஜிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

ஆவின் ஊழல் நெருக்கடி

ஆவின் ஊழல் நெருக்கடி

மேலும் பால்வளத்துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி பதவி வகித்த போது, அவரது வீட்டுக்கு தீபாவளி நேரத்தில் ஒன்றரை டன் ஆவின் இனிப்புகள் இலவசமாக கொடுக்கப்பட்டது; ஆவின் ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன என தற்போதைய பால்வளத்துறை அமைச்சர் நாசர் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கோவை ஆவின் நிர்வாகத்தில் மட்டும் ரூ100 கோடி அளவுக்கு ஊழல்கள் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின. தமிழகத்தில் ஆவின் ஊழல்தான் இனி பரபரப்பாக பேசப்படும் என தலைமை செயலக வட்டாரங்களும் தெரிவித்திருந்தன.

திடீர் டெல்லி பயணம்

திடீர் டெல்லி பயணம்

ஒரு பக்கம் சொத்து குவிப்பு வழக்கு; இன்னொரு பக்கம் ஆவின் ஊழல் வழக்கு என ராஜேந்திர பாலாஜிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அளவுக்கு அதிகமாக பேசிவந்த ராஜேந்திர பாலாஜி கப்சிப் என அமைதி காத்து வந்தார். இந்த நிலையில்தான் திடீரென ராஜேந்திர பாலாஜி நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்து அந்த கட்சியில் இன்று ராஜேந்திர பாலாஜி இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக டெல்லியில் கருத்து தெரிவித்திருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சொந்த கட்சியில் மதிப்பும் மரியாதையும் கிடைக்காத தலைவர்கள் பாஜகவை நாடி வருகிறார்கள். பாஜகவின் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு யார் வந்தாலும் வரவேற்போம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ராஜேந்திர பாலாஜி சொன்னது என்ன?

ராஜேந்திர பாலாஜி சொன்னது என்ன?

இதனிடையே ராஜேந்திர பாலாஜியின் டெல்லி பயணம் தொடர்பாக அதிமுக வட்டாரங்களில் நாம் விசாரித்தோம். அப்போது, தம் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்வது தொடர்பாக டெல்லி செல்கிறேன் என ஒருசிலரிடம் ராஜேந்திர பாலாஜி கூறியிருக்கிறார். தமக்கு நெருங்கமான குடும்ப நண்பர்களிடம் வட இந்திய கோவில்களுக்கு யாத்திரை போகிறேன் என கூறியிருக்கிறார். மேலும் சிலரிடம் டெல்லியில் சில தலைவர்களை பார்க்கப் போகிறேன் எனவும் கூறியிருந்தார். அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் டெல்லி செல்லும் முன்பு பேசிய ராஜேந்திர பாலாஜி, ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் திமுக அரசின் நடவடிக்கைகளில் இருந்து தப்ப டெல்லி சென்று பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை சந்தித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் கரூர் விஜயபாஸ்கர் மீது திமுக அரசு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு பதிவு செய்ததை எதிர்த்து அதிமுக போராட்டம் நடத்தியது. ஆனால் எனக்கு ஆதரவாக எந்த குரலும் வரவில்லையே.. என்னை காப்பற்ற இருக்கும் வழிகளைத்தானே தேட முடியும் என மிகவும் வேதனையுடன் கூறியிருக்கிறார்.

முதல் விக்கெட்

முதல் விக்கெட்

அண்மையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 10 பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. மத்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கையே அதிமுக தலைவர்களை பாஜக பக்கம் வளைக்கத்தான் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் டெல்லியில் ராஜேந்திர பாலாஜி முகாமிட்டிருக்கிறார். பாஜக நினைத்தபடியே அதிமுகவின் முதல் விக்கெட்டாக ராஜேந்திர பாலாஜி வளைக்கப்படுகிறார் என்கின்றன டெல்லி தகவல்கள். இவரைத் தொடர்ந்து மேலும் பல மாஜி அதிமுக அமைச்சர்கள் அடுத்தடுத்து பாஜகவுக்கு தாவக் கூடும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+