பாரதிய ஜனதாவுக்கு பதில்.. பாரதிய ஜமீன் கட்சினு மாதிக்கோங்க! லோக்சபாவில் விளாசி தள்ளிய அகிலேஷ் யாதவ்
டெல்லி: வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த மசோதா குறித்து மத்திய அரசை கண்டித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், "பாரதிய ஜனதா கட்சியை, பாரதிய ஜமீன் கட்சி என மாற்றிக்கொள்ளுங்கள்" என்று விமர்சித்துள்ளார்.
இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாயானது மசூதி, இஸ்லாமியர்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்காக கடந்த 1995ம் ஆண்டு வக்பு வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தில்தான் பல முக்கிய திருத்தங்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது.

இந்த சட்ட திருத்த மசோதாவில் வக்பு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை, வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது, வாரியத்தின் அதிகாரத்தை ஒழுங்குபடுத்துவது உட்பட பல்வேறு முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளது.
மாற்றங்கள்: குறிப்பாக ஒரு சொத்து வக்பு வாரிய சொத்தா என்பதை முடிவு செய்வதற்கான வாரியத்தின் அதிகாரங்கள் தொடர்பாக தற்போதைய சட்ட பிரிவு 40ஐ இந்த மசோதா தவிர்க்க முயற்சிக்கிறது. வாரியத்தின் அதிகாரத்தை திருத்த மசோதா மட்டுப்படுத்தியுள்ளது. வக்பு வாரிய சொத்துக்களுக்கு உரிமை கோரும்போது அதனை ஆய்வு செய்து உறுதி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு: வாரியத்தில் உள்ள அனைத்து சொத்துக்களையும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் முன்னிலையில் முறைப்படி பதிவு செய்து அதன் விவரங்களை வக்பு வாரிய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற திருத்தமும் இடம்பெற்றுள்ளது. இப்படி பல திருத்தங்கள் வக்பு வாரியத்திற்கு எதிரான, சிறுபான்மை மக்களுக்கு எதிரானதாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
காங்கிரஸ்: காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், "ஒன்றிய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா, அரசியல் அமைப்பின் அடிப்படை கோட்பாடுகள் மீதான தாக்குதல். ராமர் கோயில் நிர்வாகத்தில் இந்து அல்லாதவர்கள் இடம்பெற முடியும் என்று யாராவது நினைத்துக்கூட பார்க்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளார்.
திமுக: இந்த திருத்த சட்ட மசோதா மீது உரையாற்றிய திமுக எம்பி கனிமொழி, "வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா, இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல மனித இனத்துக்கே எதிரானது. இந்தியா மதச்சார்பற்ற நாடு என்ற நம்பிக்கையை மக்கள் இழந்துவிடுவர். எதற்காக ஒரு மதத்தின் உரிமையில் மற்றொரு மதத்தினர் தலையிட வேண்டும்? அரசு சொத்துகள் வக்பு வாரியத்திடம் இருந்தால் அது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் முடிவு எடுக்கலாம் என்பது ஏற்கத்தக்கதல்ல" என்று விமர்சித்துள்ளார்.
ஓவைசி: இவர்களை தொடர்ந்து பேசிய அசாதுதீன் ஓவைசி, "இந்த மசோதா அரசியலமைப்பின் 14, 15 மற்றும் 25 வது பிரிவுகளின் கொள்கைகளை மீறுகிறது. இந்த மசோதா பாரபட்சமானது மற்றும் தன்னிச்சையானது. இந்த மசோதாவை கொண்டு வந்ததன் மூலம் நீங்கள் (மத்திய அரசு) தேசத்தை ஒன்றிணைக்காமல் பிளவுபடுத்தும் வேலையை செய்து வருகிறீர்கள். நீங்கள் முஸ்லிம்களின் எதிரி என்பதற்கு இந்த மசோதா ஒரு சான்று" என்று கூறியுள்ளார்.
அகிலேஷ் யாதவ்: அதேபோல சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இந்த மசோதா மீது சரமாரியான விமர்சனங்களை அடுக்கியுள்ளார். "தற்போது கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்களுக்கு பாஜக நியாயம் சொல்வதெல்லாம் ஒரு சாக்குதான். பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் ஏராளமான நிலங்கள் இருக்கின்றன. இவையெல்லாம் தனியார்மயப்படுத்தப்பட்டுவிட்டது. இப்போது இதனுடன் வக்பு வாரியத்தையும் இணைக்க முயல்கிறார்கள்.
பாரதிய ஜமீன் கட்சி: இந்த மசோதாவில், 'பாஜகவின் நலன் கருதி வெளியிடப்பட்டது' என்று ஏன் வெளிப்படையாக எழுதவில்லை? பாஜக ரியல் எஸ்டேட் நிறுவனம் போல் செயல்படுகிறது. பாரதிய 'ஜனதா' என்பதற்குப் பதிலாக 'ஜமீன்' என்று அக்கட்சி தனது பெயரை மாற்ற வேண்டும். வக்ஃப் வாரிய நிலங்கள் விற்கப்பட மாட்டாது என்று எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா முழுவதிலும் உள்ள வக்ஃப் வாரியங்கள் கிட்டத்தட்ட எட்டு லட்சம் ஏக்கர்களை சொந்தமாக வைத்துள்ளன, இது மிகப்பெரிய தனியார் நிலம் வைத்திருக்கும் அமைப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications