விரைவில் தடுப்பூசிக்கு ஒப்புதல், இரு பரீட்சார்த்த சோதனை - கொரோனாவை ஒழிக்க அரசின் அதிரடி திட்டம்
டெல்லி: இந்தியாவில் விரைவில் கொரோனா தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், வரும் வெள்ளிக்கிழமை முதல் தடுப்பு மருந்து பரீட்சார்த்த சோதனை நடைபெறும் என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் ஃபைஸர், மாடர்னா, பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் என மூன்று தடுப்பு மருந்துகள் தற்போது வரை மூன்று கட்ட மருத்துவ சோதனைகளை முடித்துள்ளன.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற பல நாடுகளும் இவற்றில் ஏதேனும் ஒரு தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளன. அந்த நாடுகளில் தடுப்பு மருந்து வழங்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் தடுப்பு மருந்து
இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டிற்கு மிக விரைவில் அனுமதியளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தடுப்பு மருந்து விநியோகத்திற்குத் தேவையான ஆய்த்த பணிகளை இந்தியா தற்போது மேற்கொண்டு வருகிறது.

பரீட்சார்த்த சோதனை
முதல் பரீட்சார்த்த சோதனை கடந்த டிசம்பர் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் நாட்டிலுள்ள நான்கு மாநிலங்களில் நடைபெற்றது. இதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. இந்நிலையில், இரண்டாவது சோதனை அனைத்து மாநிலங்களிலும் வரும் 2ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது, இன்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச உயர் அதிகாரிகளுடன் மத்திய சுகாதார செயலாளர் ஒரு உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

பரீட்சார்த்த சோதனை என்றால் என்ன
ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல இடங்களில் இந்த சோதனை நடைபெறும். இதில் பொதுமக்களுக்கு டம்மி தடுப்பு மருந்துகள் வழங்கப்படும். தடுப்பு மருந்தின் விநியோகத்தின்போது ஏற்படும் சிக்கலைக் கண்டறிந்து, சரி செய்ய இதுபோன்ற சோதனைகள் நடைபெறும்.

விநியோக முறையில் திருப்தி
இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்தியா கொரோனா தடுப்பு மருந்து விநியோகத்திற்குத் தயாராகா இருக்கிறது என்பதையே இந்த சோதனைகள் காட்டுகின்றன. முதல் சோதனையில் பங்கேற்ற நான்கு மாநிலங்களும் கொரோனா தடுப்பு மருந்து விநியோகத்திற்கு நாங்கள் உருவாக்கியுள்ள அமைப்பு முறைகளில் திருப்தி அடைந்தனர்" என்று தெரிவித்துள்ளது.

புத்தாண்டில் தடுப்பு மருந்திற்கு அனுமதி
இந்தியாவில் மிக விரைவில் தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டிற்கு அனுமதியளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பு மருந்து ஒப்புதல் குறித்த நிபுணர் குழுவின் முக்கிய கூட்டம் நாளை கூடுகிறது. இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரிய தலைவர் டாக்டர் வி.ஜி. சோமானி, தடுப்பு மருந்து குறித்து புத்தாண்டில் நல்ல செய்தி வரும் என்று தெரிவித்திருந்தார்.

எந்த தடுப்பு மருந்திற்கு ஒப்புதல்
நாளை சீரம், பாரத் பயோடெக், ஃபைசர் ஆகிய மூன்று நிறுவனங்களின் தடுப்பு மருந்துகள் பரிசீலனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்திற்கு முதலில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், ஃபைசர் இன்னும் அதன் ஆய்வு முடிவுகளை அளிக்கவில்லை. பாரத் பயோடெக் இன்னும் மூன்றாம்கட்ட சோதனைகளை முடிக்கவில்லை. இதனால் இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்திற்கே முதலில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,












Click it and Unblock the Notifications