ரியல் கேம்சேஞ்சர்..! குழந்தைகளுக்கு மிக விரைவில் வரும் வேக்சின்..Zydus Cadila-க்கு இத்தனை சிறப்புகளா
டெல்லி: 12-18 வயதுடைய சிறார்களுக்கு சைடஸ் காடிலா நிறுவனத்தின் கொரோனா வேக்சின் விரைவில் செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், நாட்டிலேயே சிறார்களுக்கான முதல் வேக்சினாக சைடஸ் காடிலா ஆகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை தற்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. தினசரி வைரஸ் பாதிப்பு 50 ஆயிரமாகக் குறைந்துள்ளது.
இதற்கிடையே 3ஆம் அலை பற்றிய அச்சமும் மக்களிடையே அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக அடுத்த கொரோனா அலையில் சிறார்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என்று சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளது கவலையை அதிகப்படுத்தியுள்ளது.

மத்திய அரசு தகவல்
இந்நிலையில், கொரோனா வேக்சின் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் நாட்டில் 18 வயதைக் கடந்த 94 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. 2 டோஸ்களாக தடுப்பூசி செலுத்த மொத்தம் 186 கோடி கொரோனா டோஸ்கள் தேவை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், 12 முதல் 18 வயதுள்ள சிறார்களுக்கு சைடஸ் காடிலா கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிறார்களுக்கான வேக்சின்
எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் நாட்டிலேயே சிறார்களுக்கு ஒப்புதல் பெறும் முதல் கொரோனா வேக்சினாக சைடஸ் காடிலா இருக்கும். ஒட்டுமொத்தமாக கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி பிறகு ஒப்புதல் கிடைக்கும் நான்காவது கொரோனா தடுப்பூசியாக சைடஸ் காடிலா இருக்கும். அதிக கொரோனா வேக்சின்களுக்கு ஒப்புதல் அளிப்பதன் மூலம் விரைவாக அனைவருக்கும் வேக்சின் செலுத்த முடியும் என்பது வல்லுநர்களின் கருத்து.

சைடஸ் காடிலா
கோவாக்சின் அடுத்து இந்தியாவில் உருவாக்கப்பட்டு வரும் 2ஆவது கொரோனா வேக்சின் இந்த சைடஸ் காடிலா நிறுவனத்தின் ZyCoV-D ஆகும். அகமதாபாத்தைச் சேர்ந்த இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் வேக்சின் மொத்தம் 3 டோஸ்களாக மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும். இதுவரை நாட்டில் பயன்பாட்டிலுள்ள அனைத்து வேக்சின்களும் 2 டோஸ்கள் மட்டுமே செலுத்த வேண்டிய நிலையில், ZyCoV-D மட்டும் மூன்று டோஸ்களாக செலுத்த வேண்டும். இதன் மூலம் அதிக காலத்திற்கு தடுப்பாற்றல் கிடைப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

என்ன தொழில்நுட்பம்
ZyCoV-D வேக்சின் டி.என்.ஏ-பிளாஸ்மிட் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இதிலுள்ள பிளாஸ்மிட் டி.என்.ஏ நமது உடலில் இருக்கும் தடுப்பாற்றலை தூண்டுகிறது. பிளாஸ்மிட் என்பது ஒரு செல்லில் இருக்கும் ஒரு சிறிய டி.என்.ஏ ஆகும், இதில் கொரோனா வைரசுக்கு வெளியே இருக்கும் புரதம் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் உடலில் கொரோனாவுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தி எளிதில் உருவாகும்.

சேமிப்பு
இந்த வேக்சின் மற்ற தடுப்பூசிகளை விட அதிக பலன் அளிப்பதாக அந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், இதனை 2 முதல் 8 டிகிரி வெப்பத்தில் கூட சேகரிக்கலாம். அவ்வளவு ஏன் இது அறை வெப்ப நிலையான 25 டிகிரியில் கூட குறிப்பிட்ட காலத்திற்கு வைத்திருக்கலாம். இதன் மூலம் குளிர்சாதன வசதி இல்லாத அனைத்து பகுதிகளிலும் மிக எளிதாக வீடுகளுக்கே கூட சென்று தடுப்பூசி வழங்க முடியும்,

எப்போது பயன்பாட்டிற்கு வரும்
இந்த வேக்சின் தற்போது மூன்றாம் கட்ட சோதனையில் உள்ளது. இதன் தடுப்பாற்றல் குறித்த தரவுகள் சில வாரங்களில் தெரிய வரும். அதைப் பொறுத்தே ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் இந்தத் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் தேவையான தரவுகளை அளித்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உற்பத்தி எப்படி
முதலில் அகமதாபாத்திலுள்ள தொழிற்சாலையில் மாதம் ஒரு கோடி டோஸ்களை உற்பத்தி செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2ஆவது மாதத்தில் இருந்து 2 கோடி டோஸ்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் சுமார் 24 கோடி டோஸ்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. இதுதவிர மற்ற நிறுவனங்களிடமும் வேக்சின் உற்பத்தி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த சைடஸ் காடிலா பயன்பாட்டிற்கு வரும்பட்சத்தில் மிக விரைவில் நாட்டிலுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முடியும்.












Click it and Unblock the Notifications