கட்டுக்கட்டாக பணம் எரிந்த வழக்கு.. அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா திடீர் ராஜினாமா!
டெல்லி: அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். கடந்த ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியபோது அவரது வீட்டில் எரிந்த நிலையில் பணம் கைப்பற்றப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் யஷ்வந்த் வர்மா. இவரது வீட்டில் கடந்த ஆண்டு மார்ச் 14-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அவர் வீட்டில் இல்லை. குடும்பத்தினர் மட்டுமே இருந்தனர். தீ விபத்து பற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர்.
அப்போது ஒரு அறையில் கட்டுக்கட்டாக பணம் எரிந்து சாம்பலாகி கிடந்தது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதியிடம் ராஜினாமா கடிதம்
இதையடுத்து யஷ்வந்த் வர்மா பணியிடமாற்றம் செய்யப்பட்டார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து அவர் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த யஷ்வந்த் வர்மா ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு எழுதி உள்ளார்.
சுமையாக இருக்க விரும்பவில்லை
ராஜினாமா கடிதத்தில் அவர், ''நான் யாருக்கும் சுமையாக இருக்க விருமு்பவில்லை. இதனால் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி பதவியில் ராஜினாமா செய்கிறேன். இந்த ராஜினாமாவை உடனடியாக அமலுக்கு வரும்படி செய்ய வேண்டும் என வேதனையுடன் தெரிவித்து கொள்கிறேன். உண்மையில் இந்த பதவியில் பணியாற்றியது மரியாதைகுரிய ஒன்றாக கருதுகிறேன்'' என கூறியுள்ளார்.
ராஜினாமா செய்தது ஏன்?
முன்னதாக, யஷ்வந்த் வர்மா பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பினர் கூறினர். ஆனால் அவர் பதவி விலகவில்லை. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நியமித்த குழு தீவிர விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தது. யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய வேண்டி லோக்சபாவில் 146 எம்பிக்கள் கையெழுத்திட்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நீதிபதிகள் விசாரணை சட்டம் 1968ன் கீழ் நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்கும் நோக்கில் நாடாளுமன்ற லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா மூவர் குழு அமைத்துள்ளார்.
மூவர் குழு விசாரணை
இந்த குழுவில் உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசேகர், கர்நாடக உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.இவர்கள் நீதிபதி யஷ்வந்தர் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து வருகின்றனர்.
இந்த குழுவினர் யஷ்வந்த் வர்மாவிடம் இன்று முதல் விசாரணையை தொடங்க இருந்தனர். இதற்கிடையே தான் யஷ்வந்த் வர்மா தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன்மூலம் நீதிபதிகள் (விசாரணை) சட்டம், 1968இன் கீழ் அவருக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளனர்.
குற்றவியல் விசாரணை தொடரும்
நீதிபதி பதவியை ராஜினாமா செய்தாலும் கூட வழக்கு தொடர்பான குற்றவியல் விசாரணை தொடர உள்ளது. யஷ்வந்த் வர்மா வீட்டில் எரிக்கப்பட்ட பணத்தின் மொத்த மதிப்பு ரூ.15 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பணம் எங்கிருந்தது வந்தது? பின்னணி என்ன? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது யஷ்வந்த் வர்மாவுக்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications