“காங். பிரிவினைவாதத்தை ஆதரிக்கிறதா?” ஓமர் அப்துல்லாவின் வாக்குறுதியை சுட்டிக்காட்டி அமித்ஷா கேள்வி
டெல்லி: ஜம்மு காஷ்மீர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், களம் சூடுபிடித்திருக்கிறது. காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சியுடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு அமித்ஷா 10 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மக்களவை தேர்தல் சலசலப்பு தற்போதுதான் ஓய்ந்திருக்கும் நிலையில், மாநில சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் அதன் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, தற்போது தேர்தல் நடத்தப்படுவதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

அதாவது முதல் கட்ட தேர்தல் செப்.18ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் ஆக.20ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசி நாள் ஆக.27ம் தேதி. அதேபோல ஆக.30 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். இரண்டாம் கட்ட தேர்தல் செப்.25ம் தேதி நடக்கிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் ஆக.29ம் தேதி தொடங்குகிறது. செப்.5ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். செப்.9 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.
மூன்றாம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு அக்டோபர் மாதம் 1ம் தேதி நடக்கிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் செப்.5ம் தேதி தொடங்குகிறது. செப்.12ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். செப்.17 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். மூன்று கட்டங்களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியாகின்றன.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர், ஜம்மு காஷ்மீர் சென்று, தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். குறிப்பாக ஜம்மு காஷ்மீரில், பாஜக வெறும் 20 தொகுதிக்குள் முடக்க வேண்டும் என்று காங்கிரஸ் தீவிரமாக முயன்று வருகிறது. ஆனால், தேசிய மாநாட்டு கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள், பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளன.
இப்படி இருக்கையில் இந்த வாக்குறுதிகளை முன்வைத்து காங்கிரஸுக்கு அமித்ஷா 10 கேள்விகளை எழுப்பியள்ளார். அதில், அதிகாரப் பேராசையைக்காக, தேசத்தின் ஒற்றுமையையும் பாதுகாப்பையும் பலமுறை பணயம் வைத்துள்ள காங்கிரஸ் கட்சி, ஜம்மு காஷ்மீர் தேர்தலில் அப்துல்லா குடும்பத்தின் 'தேசிய மாநாட்டு' கட்சியுடன் கூட்டணி வைத்து மீண்டும் தனது உள்நோக்கத்தை அம்பலப்படுத்தியுள்ளது என்று விமர்சித்துள்ளார்.
மேலும், "தேசிய மாநாட்டு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை வைத்து, காங்கிரஸ் கட்சிக்கும் ராகுல் காந்திக்கும் 10 கேள்விகளை எழுப்ப விரும்புகிறேன்.
1. ஜம்மு-காஷ்மீருக்கு தனிக் கொடி என்ற தேசிய மாநாட்டு கட்சியின் வாக்குறுதியை காங்கிரஸ் ஆதரிக்கிறதா?
2. 370 மற்றும் 35A சட்டப்பிரிவை மீட்டெடுக்கும் தேசிய மாநாட்டு கட்சியின் முடிவை ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் ஆதரிக்கின்றனவா? அதன் மூலம் ஜம்மு-காஷ்மீரை மீண்டும் பயங்கரவாதத்திற்குள் தள்ளுவதுதான் காங்கிரஸின் முடிவா?
3. பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதன் மூலம் பிரிவினைவாதத்தை மீண்டும் ஊக்குவிப்பதை காங்கிரஸ் ஆதரிக்கிறதா?
4. பாகிஸ்தானுடன் 'எல்ஓசி வர்த்தகம்' தொடங்கும் தேசிய மாநாட்டு கட்சியின் முடிவை, ராகுல் காந்தி ஆதரிக்கிறாரா?
5. பயங்கரவாதம், கல்வீச்சு போன்றவற்றில் ஈடுபட்டவர்களின் உறவினர்களை மீண்டும் அரசுப் பணிகளில் சேர்த்து, அதன் மூலம் பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் ஸ்டிரைக் ஆகியவற்றை கொண்டு வருவதை காங்கிரஸ் ஆதரிக்கிறதா?
6. காங்கிரஸ் கட்சியின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தக் கூட்டணி அம்பலப்படுத்தியுள்ளது. தலித்துகள், குஜ்ஜர்கள், பகர்வால்கள் மற்றும் பஹாடி சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வந்து, அவர்களுக்கு அநீதி இழைக்கும் தேசிய மாநாட்டு கட்சியின் வாக்குறுதியை காங்கிரஸ் ஆதரிக்கிறதா?
7. 'சங்கராச்சாரியார் மலை,' 'தக்த்-இ-சுலைமான்' என்றும், 'ஹரி மலை' 'கோ-இ-மாரன்' என்றும் அழைக்கப்படுவதை காங்கிரஸ் விரும்புகிறதா?
8. ஜம்மு காஷ்மீரின் பொருளாதாரத்தை மீண்டும் ஊழலில் தள்ளி, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களிடம் ஒப்படைக்கும் அரசியலை காங்கிரஸ் ஆதரிக்கிறதா?
9. ஜம்மு மற்றும் பள்ளத்தாக்குக்கு இடையேயான பாரபட்சமான தேசிய மாநாட்டு கட்சியின் அரசியலை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறதா?
10. காஷ்மீருக்கு சுயாட்சி வழங்கும் தேசிய மாநாட்டு கட்சியின் பிரித்தாளும் அரசியலை காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும் ஆதரிக்கிறார்களா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications