டெல்லியில் ஜூலை 18-ல் அமித்ஷா தலைமையில் போதைப் பொருள் தடுப்புக்கான ஒருங்கிணைப்பு மையத்தின் கூட்டம்!
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் போதைப்பொருள் தடுப்புக்கான ஒருங்கிணைப்பு மையத்தின் 7-வது உயர்நிலைக் கூட்டம் ஜூலை 18-ந் தேதி நடைபெற உள்ளது.
போதைப்பொருள் தடுப்புக்கான ஒருங்கிணைப்பு மையம் என்ற அமைப்பு மாநிலங்கள், மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே சிறந்த ஒத்துழைப்புக்காக 2016-ல் அமைக்கப்பட்டது. 2019-ல் இந்த அமைப்பு 4 நிலை உள்ளதாக மேலும் வலுப்படுத்தப்பட்டது.

மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இந்த போதைப்பொருள் தடுப்புக்கான ஒருங்கிணைப்பு மையத்தின் 7-வது உயர்நிலைக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தின் போது, தேசிய போதைப்பொருள் தடுப்புக்கு 'மனஸ்' என்ற உதவி மையத்தையும், ஸ்ரீநகரில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் மண்டல அலுவலகத்தையும் அவர் திறந்து வைப்பார். மேலும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் வருடாந்தர அறிக்கை 2023-ஐயும், போதைப்பொருள் இல்லாத இந்தியா என்பது குறித்த தகவல் தொகுப்பையும் அவர் வெளியிடுவார்.
போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தையொட்டி கடந்த ஆண்டு மத்திய அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் 2006-2013 காலத்தில் ரூ.768 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 2014-22 காலகட்டத்தில் ரூ.22,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் இது போதைப் பொருள் இல்லாத இந்தியாவை நோக்கிய மோடி அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்கள், மீண்டும் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான இயக்கம் 2022 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டு நாடு முழுவதும் சுமார் 6 லட்சம் கிலோ கிராம் போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் அமித் ஷா தெரிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு கர்நாடகா மாநிலம் பெங்களூரில், போதைப் பொருள் தடுப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான மண்டல மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 5 தென் மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். அந்த மாநாட்டின் போது ரூ.1235 கோடி மதிப்புடைய 9298 கிலோ போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications