செம ட்விஸ்ட்! மோடிக்கு ஆதரவாக ஆந்திர முதல்வர்! நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்க்கட்சிகள் ஷாக்!
டெல்லி: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இந்நிலையில் தான் திடீர் ட்விஸ்ட்டாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் நடவடிக்கை எதிர்க்கட்சிகளுக்கு ஷாக் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
மணிப்பூரில் கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக வன்முறை நடந்து வருகிறது. பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் அரங்கேறி உள்ளது. இதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இது இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

மேலும் மணிப்பூர் வன்முறை குறித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிப்பார் என மத்திய அரசு கூறி வரும் நிலையில் பிரதமர் மோடி தான் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன. இதனால் நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் தொடர்ந்து முடங்கி வருகின்றன. இன்று 7 வது நாளாக லோக்சபா, ராஜ்யசபாக்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே தான் மத்திய அரசுக்கு எதிராக சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகள் லோக்சபாவில் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நோட்டீஸ் வழங்கின. இதனை சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்றுக்கொண்டுள்ளார். இதனால் விரைவில் நம்பிக்கையில்லா தீர்மானம் லோக்சபாவில் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கு ‛‛இந்தியா'' என்ற பெயரில் பாஜகவுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள 26 எதிர்க்கட்சிகள் வாக்களிக்க உள்ளனர்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்புக்கு முன்பு விவாதம் நடைபெற உள்ளது. இந்த விவாதத்தி்ல் மணிப்பூர் வன்முறை, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து விவாதிக்க வைக்கலாம் என்பதே காங்கிரஸ், திமுக உள்பட ‛‛இந்தியா'' கூட்டணியில் உள்ள 26 கட்சிகளின் தலையாய நோக்கமாக உள்ளது.
இந்நிலையில் தான் நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவளிக்க ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. அதாவது எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வாக்களிக்க உள்ளது.
லோக்சபாவில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் கீழ் ஆளும் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றால் 272 எம்பிக்களின் ஆதரவு வேண்டும். ஆனால் தற்போது நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் பாஜகவுக்கு 303 எம்பிக்கள் உள்ளனர். கூட்டணி கட்சிகளின் அடிப்படையில் பார்த்தால் என்டிஏ எனும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 331 எம்பிக்கள் உள்ளன.
இதனால் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது தோல்வியடையும். இத்தகைய சூழலிலும் கூட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவாக நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஓட்டளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் கூட 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார், பெங்களூர் என 2 முறை ஆலோசனைகள் நடத்தப்பட்டது. இதில் பெங்களூர் மீட்டிங்கில் தான் ‛‛இந்தியா'' என்ற கூட்டணி 26 கட்சிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது. அதேபோல் டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இதில் 38 கட்சிகள் பங்கேற்றன.
இந்த 2 கூட்டங்களிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பங்கேற்கவில்லை. இத்தகைய சூழலில் தான் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி தனது நிலைப்பாட்டை மாற்றி எதிர்க்கட்சிகளுக்கு ஷாக் அளிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவாக களமிறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications