நீங்கள் அதிகார போதையில் மிதக்கிறீர்கள்: அரவிந்த் கெஜ்ரிவாலை விளாசித் தள்ளிய அன்னா ஹசாரே.. என்னாச்சு?
டெல்லி: 'மதுபானக் கொள்கை தொடர்பாக செய்திகளில் வெளியாகும் தகவல் எனக்கு கடும் வேதனை அளிப்பதாகவும், நீங்கள் அதிகார போதையில் மிதப்பதாக தெரிவதாகவும்' அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லியில் மதுபானக் கொள்கை அமல்படுத்தப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
டெல்லி ஆளுநர் வினய்குமார் சக்சேனா இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் வீடு உள்பட 31 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது.

டெல்லி அரசியல் களம்
தொடர்ந்து மணிஷ் சிசோடியா உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் டெல்லி அரசியலில் மட்டும் அல்லாது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆம் ஆத்மியை கண்டு பாஜக அஞ்சுவதாகவும், இதன் விளைவே பாஜகவின் இந்த நடவடிக்கைகளுக்கு காரணம் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் மத்தியில் ஆளும் பாஜகவை விமர்சித்து வருகிறார். இந்த விவகாரங்களால் டெல்லி அரசியலில் கடந்த சில வாரங்களகவே பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சம் இன்றி சென்று கொண்டிருக்கிறது.

அதிகார போதையில் மிதப்பது போல் தெரிகிறது
இந்த நிலையில், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்து நான்கு பக்கங்கள்கொண்ட ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அன்னா ஹசாரே கூறியிருப்பதாவது:- மதுவை போல அதிகாரமும் போதை தரும். நீங்கள்(கெஜ்ரிவால்) தற்போது அதிகார போதையில் மிதப்பது போல் தெரிகிறது. கெஜ்ரிவால், நீங்கள் முதல்வரான பிறகு நான் எழுதும் முதல் கடிதம் இது. ஏனென்றால், கடந்த சில நாட்களாக உங்கள் அரசின் மதுபானக் கொள்கை தொடர்பாக செய்திகளில் வெளியாகும் தகவல் எனக்கு கடும் வேதனையை அளித்துள்ளது.

அனைத்தையும் மறந்துவிட்டீர்கள்
உங்களின் ஸ்வராஜ் புத்தகத்தில் மதுபானக் கொள்கை குறித்த உங்களின் கொள்கைகளை குறிப்பிட்டு இருந்தீர்கள். அதில் என்னை முன்னுரை கூட எழுத வைத்தீர்கள். அந்த புத்தகத்தில், வசிக்கும் மக்களின் ஒப்புதல் இன்றி எந்த மதுக்கடைகளும் திறக்ககூடாது என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். ஆனால், முதல்வரான பிறகு இது அனைத்தையும் மறந்து விட்டீர்கள் போல் தெரிகிறது. ஆம் ஆத்மி கட்சி நீங்ளும் மணிஷ் சிசோடியா உள்பட சிலராலும் உருவாக்கப்பட்டது.

மக்களுக்கு எதிரான மதுபானக் கொள்கை
தற்போது பிற கட்சிகளிடம் இருந்து எந்த வித்தியாசமும் ஆம் ஆத்மியிடம் இல்லை. இதுபோன்ற தவறான மதுபானக் கொள்கை இந்தியாவில் எங்கும் வகுக்கப்படவில்லை. டெல்லியில் மூலை முடுக்கெல்லாம் மதுபானக் கடைகள் வந்து விட்டன. ஒரு பெரிய இயக்கத்தின் மூலமாக உருவான கட்சிக்கு இது பொருத்தமாக இல்லை. வலுவான லோக்பால், ஊழலுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வருவதற்கு பதிலாக நீங்கள், மக்களுக்கு எதிரான மதுபானக் கொள்கையை கொண்டு வந்துள்ளீர்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

பக்க பலமாக கெஜ்ரிவால்
ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வர வலியுறுத்தி கடந்த 2011-ஆம் ஆண்டு அன்னா ஹசாரே மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுத்தார். இந்த போராட்டத்தில் அன்னா ஹசாரேவுக்கு பக்க பலமாக கெஜ்ரிவாலும் இருந்து வந்தார். பிறகு அடுத்த ஆண்டே டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை துவக்கி போட்டியிட்ட கெஜ்ரிவால் ஆட்சியை பிடித்தார்.

பரபரப்பு
அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு அவரைப்பற்றி பெரிதாக அண்ணா ஹசாரே பேசுவதை தவிர்த்தார். இந்த நிலையில், மதுபானக் கொள்கையை கடுமையாக சாடி தற்போது கடிதம் எழுதியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications