தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு ஏன்.. தமிழக அரசு மீது அண்ணாமலை பரபரப்பு புகார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சகம் நடிகர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். மத்திய அரசு கூட்டணியில் இருப்பவர்கள், இல்லாதவர்கள் என பார்த்துப் பாதுகாப்பு அளிப்பதில்லை என்றும் அச்சுறுத்தல் இருப்பவர்களுக்குப் பாதுகாப்பு தரப்படுகிறது என்றும் கூறினார். தவெக தலைவர் விஜய்க்கு அச்சுறுத்தல் உள்ளது என அறிந்தும் தமிழக அரசு பாதுகாப்பு அளிக்கவில்லை என்றும் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை கடந்த ஆண்டு ஆரம்பித்தார். அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் நிர்வாகிகளை மாவட்டம் தோறும் அறிவித்து வருகிறார். வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகளில் விஜய் தீவிரமாக உள்ளார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் தேர்தல் பிரசார பயணம் செய்ய திட்டமிட்டிருக்கிறார். கடந்த முறை திமுகவிற்கு பணியாற்றி பிரபல தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோரிடம், நடிகர் விஜய் இந்த முறை ஆலோசனைகளை பெற்று வருகிறார்.

Vijay Annamalai TVK

இந்த நிலையில் நடிகர் விஜய், தமிழ்நாடு முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அவருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என்று மத்திய உளவுப் பிரிவு போலீசாருக்கு தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மத்திய உளவுப்பிரிவு போலீசார் அறிக்கை ஒன்றை தயாரித்து உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதனடிப்படையில் விஜய்க்கு துப்பாக்கி ஏந்திய 'ஒய்' பிரிவு போலீஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது.

'ஒய்' பிரிவு விஜய்க்கு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருப்பதால், மத்திய, மாநில போலீசார் 11 பேர் இணைந்து சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிப்பார்கள். சென்னை நீலாங்கரையில் உள்ள அவருடைய வீட்டில் துப்பாக்கி ஏந்திய 2 போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

விஜய் கட்சி நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது 'கான்வாய்' வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப். வீரர்கள் 3 பேர் உள்பட 8 போலீசார் உடன் பயணிப்பார்கள். நடிகர் விஜய் மற்ற மாநிலங்களுக்கு செல்லும் போதும் 2 போலீசார் உடன் இருப்பார்கள். இந்த பாதுகாப்பு விஜய்க்கு ஓரிரு நாளில் அளிக்கப்பட இருக்கிறது. தற்போதைய நிலையில் நடிகர் விஜய் பிரபலமான நடிகர் என்கிற அடிப்படையிலும், அவர் அரசியல் கட்சி தலைவர் என்கிற அடிப்படையிலும், நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு செல்லும் சாலையின் இரண்டு பக்கமும் காவலர்கள் பாதுகாப்பிற்கு உள்ளார்கள். பேரிகார்டர் வைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஓய் பிரிவு பாதுகாப்பு என்பது முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்களுக்கு கடந்த 60 ஆண்டுகளாகவே வழங்கப்பட்டு வருகிற நடைமுறை. தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலைக்கு ஆரம்பத்தில் 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் அவருடைய பாதுகாப்பு 'இசட்' பிரிவாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

இதனிடையே விஜய்க்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்கியதை அரசியல் ரீதியாக விமர்சித்து சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன. பாஜக விஜய்யின் தவெகவை தன் கூட்டணியில் இணைக்க இப்படி செய்திருக்கலாம் என அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி சந்தேகம் தெரிவித்துள்ளார்.

"ஒரு கட்சியின் தலைவராகவும், நடிகராகவும் இருக்கக்கூடிய விஜய், செல்லும் இடத்தில் கூட்டம் சேரலாம் என்கிற அடிப்படையில் அவருக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு பெருந்தன்மையாக கொடுத்திருந்தால் மகிழ்ச்சி தான். ஆனால் அரசியல் ரீதியாக சுயநலத்தோடு விஜய்யை, தங்கள் கூட்டணி பக்கம் இழுப்பதற்கான முயற்சியாக, அவரை சந்தோஷப்படுத்துவதற்காக மத்திய அரசு கொடுத்திருந்தால் பா.ஜனதாவின் வரலாறு எது? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்" என்று கே.பி.முனுசாமி கூறினார்.

இந்நிலையில் கோவை குண்டுவெடிப்பு நினைவு தினத்தை முன்னிட்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அஞ்சலி நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அண்ணாமலையிடம் விஜய்க்கு அறிவிக்கப்பட்ட ஒய் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அண்ணாமலை பதில் அளிக்கையில். "தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு மத்திய அரசு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு கொடுத்திருக்கிறது. இதற்கு முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்த போது, அவர்களுக்கும் இந்த 'ஒய்' பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசை பொறுத்தவரை கூட்டணியில் இருக்கிறார்கள்.. இவர்கள் இல்லை என்று எல்லாம் பார்ப்பது இல்லை. அவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறதா? எனப் பார்த்து மத்திய அரசு பாதுகாப்பு கொடுத்து வருகிறது. ஆனால், தவெக தலைவர் விஜய்க்கு அச்சுறுத்தல் இருக்கிறது எனத் தெரிந்தும், மாநில அரசு (தமிழக அரசு) பாதுகாப்பு வழங்கவில்லை." என்றார்.

அதிமுக குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, "அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றி நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. திமுக கொடுக்கும் வாக்குறுதிகளை மக்கள் ஏற்க மாட்டார்கள். பிரதமரின் வாக்குறுதியைத்தான் மக்கள் நம்புவார்கள். மக்களுக்கு உதவித் தொகை கொடுப்பதால், மக்கள் அடிமையாக இருப்பார்கள் என நினைத்தால் அது தவறு என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+