வெட்கமே இல்லையா? மதுரை எய்ம்ஸ் விவாதத்தில் நிர்மலா சீதாராமன் - திமுக எம்பிக்கள் மோதல்.. பரபரப்பு
டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது மதுரை எய்ம்ஸ் தொடர்பாக மத்திய நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது அவருக்கும், திமுக எம்பிகளுக்கும் இடையே வார்த்தை போர் ஏற்பட்டது. அப்போது ‛வெட்கமே இல்லையா?' என நிர்மலா சீதாராமன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடியை பேச வைக்க நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இன்று 3வது நாளாக விவாதம் நடந்து வருகிறது. மாலை 4 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலுரை வழங்க உள்ளார்.

முன்னதாக இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் திட்டங்கள் பற்றி விரிவாக பேசி வந்தார். அப்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது தொடர்பாக திமுக எம்பி டிஆர் பாலு விமர்சனம் செய்தற்கு அவர் பதிலடி கொடுத்தார். மேலும் ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து கடன் வாங்குவது ஏன் என அவர் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு இன்று நிர்மலா சீதாராமன் பதிலளித்தபோது அவருக்கும், திமுக எம்பிக்கள் இடையே வார்த்தை போர் வெடித்தது.
அதாவது நிர்மலா சீதாராமன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி பேசும்போது, ‛‛மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட உள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ரூ.1977 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஜெய்க்காவின் ரூ.1,627 கோடி கடனுதவியுடன் மருத்துவமனை கட்டப்பட உள்ளது. இது மத்திய அரசின் திட்டமாகும். கடன் தொகையை முழுவதையும் மத்திய அரசே ஏற்கும்.
இதில் தமிழக அரசுக்கு எந்த கடனும் இல்லை. அதனால தயவு செய்து மதுரை எய்ம்ஸ் குறித்து தவறான தகவலை பரப்ப வேண்டாம். எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 750 படுக்கைகள் தான் இருக்கும். ஆனால் தமிழ்நாடு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 900 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளது. கூடுதலாக 150 படுக்கைகள் ஏற்படுத்தப்பட உள்ளது. மதுரை மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 50 மாணவர்கள் ஏப்ரல் 2022 முதல் படித்து வருகின்றனர்'' என்றார்.

மேலும் அவர் கூறும்போது, ‛‛எய்ம்ஸ் மருத்துவமனையால் தமிழ்நாட்டுக்கு கடன் இல்லை. அதேநேரத்தில் அதிக படுக்கைகள் கிடைக்கிறது. சுகாதாரம் சார்ந்த விஷயத்தில் நான் ஒன்றை உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். தமிழ்நாடு அரசு இதனை பற்றி எந்த கவலையும் கொள்ள வேண்டாம். இதனை மத்திய அரசு திறமையாக செய்து முடிக்கும்'' என்றார்.
இந்த வேளையில் திமுகவினர் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டப்படும் என்பதை கேட்கும் வகையில் ‛‛எப்போது... எப்போது... எப்போது?'' என கோஷமிட்டனர். அதோடு நிர்மலா சீதாராமன் கடன் பற்றி பேசியபோது ‛வெட்கம்.. வெட்கம்..'' என கோஷமிட்டனர்.
இந்த வேளையில் திடீரென பேச்சை நிறுத்திய நிர்மலா சீதாராமன், ‛‛இப்போது வரை கடன் வாங்குகிறோமோ வெட்கமே இல்லையா? எனக்கூறியவர்கள் தற்போது மதுரை எய்ம்ஸ் எப்போது என கேட்கின்றனர்கள். இந்த அவையில் பொய் பேச வேண்டாம்'' என்றார். இதையடுத்து சில வினாடிகள் எப்போது எப்போது எப்போது என கோஷமிட்ட திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதை பார்த்த நிர்மலா சீதாராமன், ‛‛நான் இன்னும் தமிழ்நாடு பற்றி நிறைய சொல்ல வேண்டி இருக்கு. ஓடாதீங்க. நில்லுங்க.. வெளியே போனாலும் டிவியில் கண்டிப்பாக பாருங்கள்'' என விளாசினார்.












Click it and Unblock the Notifications