"மெகா ட்விஸ்ட்.." டெல்லி முதல்வராகும் கெஜ்ரிவால் மனைவி சுனிதா? ஆஹா.. இதை யாருமே எதிர்பார்க்கல
டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில், அவருக்குப் பதிலாக அவரது மனைவி சுனிதா முதல்வராகப் பதவியேற்கலாம் என்று தகவல் பரவி வருகிறது. ஏன் இப்படி தகவல் பரவுகிறது. அவரது மனைவி முதல்வராக வாய்ப்பு இருக்கா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த 2021-22இல் டெல்லியில் கொண்டு வரப்பட்ட மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. இந்த விவகாரத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெஜ்ரிவால்: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருக்கும் நிலையில், அவரது மனைவி சுனிதா இரண்டு நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கெஜ்ரிவால் சிறையில் இருந்து அனுப்பிய மெசேஜ்ஜை வாசித்துக் காட்டினார். கெஜ்ரிவால் இத்தனை காலம் எந்த சேரில் அமர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தாரோ அதே சேரில் தான் சுனிதா அமர்ந்தார். அவரது பின்னணியில் மூவர்ணக் கொடியுடன் பகத் சிங் மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இருந்ததையும் யாரும் கவனிக்கத் தவறவில்லை.
இந்த வீடியோ வெளியானது முதலே இதுவே சுனிதா கெஜ்ரிவாலின் அரசியல் பிரவேசம் என்று நெட்டிசன்கள் பலரும் பதிவிடத் தொடங்கினர். லாலு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கில் சிறையில் இருந்த போது 1997இல் பீகார் முதல்வராக அவரது மனைவி ராப்ரி தேவி பொறுப்பேற்று இருப்பார். அதேபோல கெஜ்ரிவால் மனைவி முதல்வராகப் பதவிக்கு வருவார் என்ற தகவல் பரவி வருகிறது.
சுனிதா கெஜ்ரிவால்: கெஜ்ரிவாலை போலவே அவரது மனைவி சுனிதாவும் இதற்கு முன்பு ஐஆர்எஸ் அதிகாரியாக இருந்தார். கெஜ்ரிவால் அரசியலுக்கு வந்த பிறகு சுனிதா பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்தார். 20 ஆண்டுகளுக்கு மேல் வருவாய்த் துறையில் பணியாற்றிய 1993 பேட்ச் ஐஆர்எஸ் அதிகாரியான சுனிதா கெஜ்ரிவால் 2016இல் விருப்ப ஓய்வு பெற்றார்.
கெஜ்ரிவால் தனது ஐஆர்எஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஊழல் ஒழிப்பு போராட்டங்களில் ஈடுபட்டார். தொடர்ந்து அரசியலில் குதித்த அவர் 2013இல் டெல்லி முதல்வராக முதலில் பொறுப்பேற்றார். இருப்பினும் அப்போதும் சுனிதா கெஜ்ரிவால் தனது அரசுப் பணியைத் தொடர்ந்தார். சுமார் 3 ஆண்டுகள் கழித்து 2016இல் தான் அவர் ராஜினாமா செய்தார்.
"கெஜ்ரிவால் கைது ஏன்.." வந்து விழுந்த கேள்வி.. 2 நொடி கேப் விட்டு அன்னா ஹசாரே சொன்ன பதில் இதுதான்!
பிரச்சாரம்: சுனிதா கெஜ்ரிவால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது இல்லை. அப்படிக் கலந்து கொண்ட சில நிகழ்ச்சிகள் என்றால் கெஜ்ரிவாலின் பிரச்சாரமாகத் தான் இருக்கும். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் சமயத்திலும் அவர் பகவந்த் மானுக்காகவும் பிரச்சாரம் செய்தார். இருப்பினும், சுனிதா கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லை. இந்தச் சூழலில் திடீரென அவர் வந்து கெஜ்ரிவால் மெசேஜை படித்தது தான் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாஜக: இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலரும் பல வித கருத்துகளைத் தெரிவித்தனர். குறிப்பாக பாஜக தலைவர்கள் கெஜ்ரிவாலுக்கு பிறகு அவரது மனைவியை முதல்வராக்கத் திட்டம் போட்டுள்ளதாக விமர்சித்துள்ளது. குடும்ப அரசியலை விமர்சித்த நபர் தான் இப்போது தனது மனைவியை முதல்வராக்கத் திட்டமிட்டுள்ளதாக பாஜக தலைவர்கள் சாடினர். கெஜ்ரிவால் சேரில் அமர்ந்து சுனிதா அந்த மெசேஜை வாசித்தது இரு விதமான கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பரவியது.
விளக்கம்: பாஜக வலதுசாரி ஆதரவாளர்கள் குடும்ப அரசியல் என்றே சாடுகின்றனர். அதேநேரம் மற்றொரு தரப்பினர் இது கெஜ்ரிவாலின் மெசேஜ் என்பதைக் காட்டவே சுனிதா அந்த குறிப்பிட்ட சேரில் அமர்ந்து மெசேஜை வாசித்ததாகத் தெரிவிக்கின்றனர். மேலும், டெல்லி முதல்வர் அல்லது ஆம் ஆத்மி தலைவரின் அதிகாரப்பூர்வ நாற்காலி எல்லாம் இல்லை.. அப்படி இருக்கும் போது யார் வேண்டுமானாலும் அமரலாம் என்பதே அவர்களின் வாதம்
ஆம் ஆத்மி தலைவர்கள் இந்த விவகாரத்திற்குப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. சுனிதா கெஜ்ரிவாலின் அரசியல் வருகை குறித்து கேள்விகளுக்கும் அவர்கள் பதிலளிப்பதில்லை. மாறாக கெஜ்ரிவால் மீது எந்த தவறும் நிரூபிக்கப்படவில்லை. அவர் விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் என்பதை மட்டுமே பதிலாகத் தருகிறார்கள். இதனால் ஆம் ஆத்மி பிளான் என்ன என்பதில் சஸ்பென்ஸ் தொடர்ந்து வருகிறது.












Click it and Unblock the Notifications