கோஹினூர் வைரத்தின் "துரதிர்ஷ்டம்.." பல மன்னர்களை காலி செய்த வைரம்! ஆங்கிலேயர்கள் எஸ்கேப் ஆனது எப்படி
டெல்லி: உலகின் மிக விலை உயர்ந்த வைரமாகக் கருதப்படும் கோஹினூர் வைரத்தை பின் தொடரும் துரதிர்ஷ்டம் இனியாவது மாறுமா என்பது குறித்து இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிரிட்டன் வரலாற்றில் மிக அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் ராணி எலிசபெத். கடந்த 1952இல் ராணியாகப் பொறுப்பேற்ற இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்தார்.
அதைத் தொடர்ந்து இந்தியாவுக்குச் சொந்தமான கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவுக்குக் கொடுக்க வேண்டும் என்று இணையத்தில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

கோஹினூர் வைரம்
அதென்ன கோஹினூர் வைரம். உலகின் விலை மதிப்புமிக்க வைரமாக இருந்தாலும் கோஹினூர் வைரத்தைத் துரதிர்ஷ்டம் தொடர்வதாகச் சொல்லப்படுவது உண்மையா? வாருங்கள் விரிவாகப் பார்க்கலாம். பிரிட்டிஷ் ராஜ குடும்பத்திடம் இருக்கும் 2800 வைர நகைகளில் முக்கியமானது இந்த கோஹினூர் வைரம். மிக முக்கிய அரசு நிகழ்ச்சிகளில் இதை ராணி அணிவார்.

துரதிர்ஷ்டம்
இத்தனை காலம் ராணி எலிசபெத் அணிந்து வந்த இந்த கோஹினூர் வைர கிரீடம் இப்போது ராணி கமிலா வசம் சென்றுள்ளது. இந்தியாவில் கண்டறியப்பட்ட இந்த வைரத்திற்குப் பெரிய துரதிர்ஷ்டம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வைரத்தின் வரலாற்றையும் இந்த துரதிர்ஷ்டத்தில் இருந்து பிரிட்டன் எப்படித் தப்பியது என்பதையும் பார்க்கலாம்.

மன்னர்
இந்த வைரம் எப்படி எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்த தெளிவாகத் தகவல்கள் இல்லை. இருப்பினும், சிலர் ஏசு பிறப்பிற்கு முன்னதாகவே இது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறுகின்றனர் 1306களில் இந்த வைரம் சில மால்வாவின் ராஜாக்களுக்கு சொந்தமானதாக இருந்துள்ளதாக சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அப்போது கோஹினூர் என்று பெயரை இது பெறவில்லை.

மொகலாய ஆட்சியாளர்கள்
1520களில் மொகலாய ஆட்சியாளர் பாபரின் பாபர்நாமாவில் இந்த வைரம் குறித்த முக்கிய கருத்துகள் உள்ளன. டெல்லி சுல்தான்களிடம் இந்த வைரம் இருந்த நிலையில், முதல் பானிபட் போரில் டெல்லி சுல்தான்களின் கடைசி இப்ராகிம் லோடியை தோற்கடித்து வைரத்தைக் கைப்பற்றினார் பாபர். அவரிடம் இருந்து ஷாஜகான், ஔரங்கசீப் மூலம் பாபரின் பேரன் சுல்தான் மகமதுவுக்கு இந்த வைரம் வந்துள்ளது.

பெர்சியா சென்ற வைரம்
பாரசீக ஜெனரல் நாதிர் ஷா 1739 ஆம் ஆண்டில் டெல்லியைக் கைப்பற்றினார். இதன் மூலம் வைரம் அவரிடம் சென்றது. அப்போது தான் இதற்கு கோஹினூர் வைரம் என்ற பெயர் கிடைத்தது. இதை அவர் பெர்சியாவிற்கு எடுத்துச் சென்றார். இருப்பினும், எட்டு ஆண்டுகளில் அவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். 1810களில் அந்த வைரம் பெர்சியாவில் இருந்து பஞ்சாப் எடுத்து வரப்பட்டு, சீக்கியப் பேரரசின் நிறுவனர் மகாராஜா ரஞ்சித் சிங்கிடம் கொடுக்கப்பட்டது.

கடைசி இந்தியர்
சில ஆண்டுகளில் மகாராஜா ரஞ்சித் சிங் உயிரிழந்தார். அதன் பின்னர் அவரது மூன்று மகன்களும் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். அப்போது அவர்களின் அடுத்த வாரிசான 5 வயதான துலீப் சிங்கிடம் வைரம் சென்றது. அவர் தான் இந்த வைரத்தை வைத்திருந்த கடைசி இந்தியர்.

பிரிட்டிஷ் கைகளில்
1849இல் இரண்டாம் ஆங்கிலோ-சீக்கியப் போரில் பிரிட்டிஷ் படை வென்ற போது, அந்த வைரம் இங்கிலாந்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு சில காலம் இது பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இருப்பினும், அப்போது வைர வைரம் பாலிஷ் செய்யப்படாமலேயே இருந்தது. இது விக்டோரியா மகாராணியின் கணவர், இளவரசர் ஆல்பர்ட்டிற்கு பிடிக்கவில்லை. அவரது உத்தரவின்படி கோஹினூர் வைரம் பாலிஷ் செய்யப்பட்டது. 38 நாட்கள் வைரம் பாலிஷ் செய்யப்பட்டது. 186 காரட்டாக இருந்த அந்த வைரம் 105.6 காரட்டாக குறைக்கப்பட்டது.

ஆண்களுக்குத் துரதிர்ஷ்டம்
அன்று முதல் இந்த வைரத்தை முக்கியமான அரசு நிகழ்வுகளில் பிரிட்டிஷ் ராணிகள் அணிகிறார்கள். அதற்கு முன்பு வரை, இந்த வாரம் யாரிடம் இருக்கிறதோ, அந்த ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும். அப்படியில்லை என்றால் அந்த மன்னரோ அவரது சந்ததிக்கோ பாதிப்பு ஏற்படும். அதாவது கோஹினூர் வைரத்தை வைத்திருந்த ஆண்களுக்குத் துரதிர்ஷ்டம் தொடர்ந்தது.

தவிர்த்தது எப்படி
இதன் காரணமாகவே பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு வைரம் சென்றதும், இனி பெண்கள் மட்டுமே இதை அணிய வேண்டும் என்று அவர்கள் விதியை கொண்டு வந்தார்கள். அதன்படி விக்டோரியா மகாராணிக்குப் பின் வந்த ராணிகள் மட்டுமே இந்த வைரத்தை அணிந்தனர். இதன் மூலமே பிரிட்டிஷ் கோஹினூர் வைரத்தை பின் தொடரும் துரதிர்ஷ்டத்தைத் தவிர்த்தாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications