"ஹசீனாவுக்கு நோ.." பிரிட்டன் முடிவால் அதிர்ந்த Ex வங்கதேச பிரதமர்.. அப்போ அடுத்து பிளான் B என்ன
டெல்லி: வங்கதேசத்தில் இருந்து வெளியேறிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தற்காலிகமாக டெல்லியில் இருக்கும் நிலையில், அவர் பிரிட்டனில் அடைக்கலம் கோருவார் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், அவருக்குப் பிரிட்டன் அடைக்கலம் தராது என்றே கூறப்படுகிறது. இது ஹசீனாவுக்கு புதிய தலைவலியைக் கொடுப்பதாகவே இருக்கிறது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
வங்கதேசத்தில் இருந்து வெளியேறிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இப்போது காசியாபாத் அருகே இருக்கிறார். அவர் பிரிட்டன் நாட்டில் புகலிடம் கோரத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. அவர் இன்றைய தினமே இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், அவரது இந்தத் திட்டத்தில் சில சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் மேலும் சில நாட்கள் இந்தியாவில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பிரச்சினை என்ன: இது தொடர்பாகப் பிரிட்டன் குடியேற்ற அதிகாரிகள் கூறுகையில், "எப்போதும் பாதுகாப்பு தேவைப்படும் நபர்களுக்கு இங்கிலாந்து அடைக்கலம் வழங்கி வந்து இருக்கிறது. இருப்பினும், நேரடியாகப் புகலிடம் பெற மட்டுமே ஒருவர் இங்கிலாந்துக்கு வர அனுமதிக்கும் வகையில் குடிவரவு சட்டத்தில் எந்தவொரு விதிகளும் இல்லை" என்று கூறுகிறார்கள்.
அதேநேரம், சர்வதேச அளவில் பாதுகாப்பு தேவைப்படுவோர் தங்களால் எந்த நாட்டை அடைய முடிகிறதோ அங்கேயே அடைக்கலம் கோரலாம் என்கிறார்கள் பிரிட்டன் அதிகாரிகள். அதாவது ஹசீனா இப்போது இந்தியாவில் இருக்கும் நிலையில், இங்கேயே அவர் அடைக்கலம் கோரலாம்.. அடைக்கலம் கோருவதற்காக மட்டுமே அவரை பிரிட்டனில் அனுமதிக்க முடியாது என்பது அவர்கள் கருத்து. அதேநேரம் வழக்கமான விசா கோரி ஹசீனா விண்ணப்பித்து இருக்கிறாரா என்ற கேள்விக்குப் பிரிட்டன் குடியுரிமை அதிகாரிகள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.
"ஒரே ஒரு போன் கால்.." மனம் மாறிய ஹசீனா.. 45 நிமிடங்களில் எல்லாம் ஓவர்.. வங்கதேசத்தில் என்ன நடந்தது?
பிரிட்டன்: முன்னாள் வங்கதேச பிரதமர் ஹசீனா காசியாபாத்தில் தரையிறங்கிய கொஞ்ச நேரத்திலேயே பிரிட்டன் செல்ல அனுமதி கோரியிருந்தார். அனுமதி கிடைத்தவுடன் இந்தியா வந்தே அதே வங்கதேச விமானப்படை விமானத்தில் லண்டனுக்குச் செல்ல அவர் திட்டமிட்டிருந்தார். ஹசீனாவின் மூத்த சகோதரியான ஷேக் ரெஹானாவிடம் வங்கதேசம் மற்றும் பிரிட்டன் என இரு நாட்டுக் குடியுரிமையை வைத்துள்ளார். இதனால் எளிதாக அனுமதி கிடைக்கும் என்றே அவர் நினைத்தார்.
இருப்பினும், நேற்று மாலை வங்கதேச நிலைமை குறித்து பிரிட்டன் வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ஹசீனா குறித்தோ அல்லது அவரது கோரிக்கை குறித்தோ எந்தவொரு வார்த்தையும் இல்லை. அதேநேரம் கடந்த சில வாரங்களாக வங்கதேசத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும் என்று மட்டும் கூறப்பட்டு இருந்தது. அதாவது ஹசீனாவின் சர்வாதிகார போக்கு அணுகுமுறையைப் பிரிட்டன் சாடியிருக்கிறது. இதனால் ஹசீனாவுக்கு பிரிட்டன் அனுமதி தருவது கஷ்டம் என்றே சொல்லப்படுகிறது.
அடுத்த பிளான்: பிரிட்டன் அனுமதி தராதபட்சத்தில் ஹசீனா அடுத்த கட்டமாகப் பின்லாந்து அல்லது அமெரிக்காவில் அடைக்கலம் கோர யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஹசீனாவின் சகோதரி ரெஹானாவின் மகன் ரத்வான் முஜிப் சித்திக் பின்லாந்தில் தான் வசித்து வருகிறார். அவர் பின்லாந்து நாட்டை சேர்ந்த ஒருவரையே திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். எனவே, பின்லாந்து செல்வது குறித்து அவர் ஆலோசித்து வருகிறார்.
அப்படியில்லை என்றால் அமெரிக்கா செல்ல முடிவு செய்துள்ளார். ஏனென்றால் அமெரிக்காவில் தான் ஹசீனாவின் மகன் சஜீப் வசேத் வசித்து வருகிறார். இவரது மனைவி அமெரிக்காவில் வழக்கறிஞராக இருக்கிறார். இது தவிர ஐக்கிய அமீரகத்தில் அடைக்கலம் கோருவது குறித்தும் அவர் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.. எனவே, அடுத்த சில நாட்களில் அமெரிக்கா அல்லது பின்லாந்து நாட்டில் ஹசீனா அடைக்கலம் கோருவார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications