வந்தே பாரத் என.. பெரு நாட்டு ரயில் வீடியோவை ஷேர் செய்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!
டெல்லி: சுற்றுலா தினத்தையொட்டி மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வந்தே பாரத் ரயில் வீடியோவை பகிர்ந்திருந்தார். ஆனால், அதில் 'பெரு' நாட்டின் ரயில் இருந்திருந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சுற்றுலா தினம் ஆண்டுதோறும் செப்.27ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலும் இந்த கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன. நாட்டின் பிரபலமான சுற்றுலா தலங்களுக்கு வருகை தந்திருந்த வெளிநாட்டினர் கவுரவிக்கப்பட்டிருந்தனர். அதேபோல சுற்றுலா தினத்தையொட்டி நேற்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், தனது x தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்த வீடியோதான் தற்போது பஞ்சாயத்தை கூட்டியிருக்கிறது.

அதாவது, வீடியோவில் வந்தே பாரத், அமிருத பாரத் மற்றும் நமோ பாரத் என குறிப்பிட்டிருந்தார். ஆனால் வீடியோவில் இருந்தது பெரு நாட்டின் ரயில். இதைபார்த்த நெட்டிசன்கள், இன்னைக்கு கண்டென்ட் இதுதான் என்று ட்ரோல் செய்ய தொடங்கிவிட்டனர். அஸ்வினி வைஷ்ணவ் இந்திய ரயில்வே துறையின் அமைச்சரா? அல்லது பெரு நாட்டின் ரயில்வே துறை அமைச்சரா? என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பியிருந்தனர்.
வேறு சிலரோ, வந்தே பாரத் ரயில் வெக்கேஷனுக்காக பெரு நாட்டுக்கு சென்றிருப்பதாக கலாய்த்திருக்கின்றனர். இதனையடுத்து இந்த விடியோவை அஸ்வினி வைஷ்ணவ் தனது x பக்கத்தலிருந்து டெலிட் செய்திருக்கிறார். ஆனால் அதற்கு முன்னதாகவே வீடியோ டவுன்லோடு செய்யப்பட்டடு சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டுவிட்டது.
உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் 'இந்தியன் ரயில்வே' முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இது 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கி வருகிறது. ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. ஒவ்வொரு நாளும் ரயில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் போதுமான ரயில்கள், ரயில்வே ஊழியர்கள் இல்லையென்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
Old video of Peru Rail Train to Machu Picchu shared as Vande Bharat by Railway Minister @AshwiniVaishnaw 😎 pic.twitter.com/P9pv7Lt822
— Mohammed Zubair (@zoo_bear) September 28, 2024
ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக சுமார் 50 ரயில்வே ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர். அவர்களுக்கு பதிலாக புதிய ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த பணிகள் மந்த கதியில் நடைபெற்று வந்ததாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. ரயில்வே பாதுகாப்பு துறையில் மட்டும் சுமார் 1.72 லட்சம் ஊழியர்களை உடனடியாக நிரப்ப வேண்டிய தேவை இருக்கிறது. தண்டவாள பராமரிப்பு பணிக்கு 87 ஆயிரம் பேரும், ஸ்டேஷன் மாஸ்டர் 64 ஆயிரம் பேர், டிரைவர்கள் 10 ஆயிரம், சிக்னல் பராமரிப்பு பணிக்கு 15 ஆயிரம் பேர் உடனடியாக தேவைப்படுகிறார்கள் என்று புள்ளி விவரங்களை அடுக்கி வருகின்றனர்.
இப்படியான காலிப்பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படாமல் இருப்பதால், ரயில் விபத்துக்கள் அடிக்கடி நடப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக ஒடிசா ரயில் விபத்தில் 296 பேர் பலியாகியிருந்த சம்பவம், ஆந்திராவில் பலாசா பயணிகள் ரயில் விபத்தில் 13 பேர் உயிரிழந்தது, ஹைதராபாத் சென்ற சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் நம்பள்ளி ரயில் நிலையத்தில் தடம்புரண்டு விபத்தில் சிக்கியது, இது தவிர ஆங்காங்கே சரக்கு ரயில்கள் தொடர்ந்து விபத்தில் சிக்குவது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
இந்த விவாதங்களுக்கு மத்தியில், ரயில்வே துறை அமைச்சர் பெரு நாட்டின் ரயில் வீடியோவை, வந்தே பாரத் ரயில் என பகிர்ந்திருப்பது, அவர் மீதான அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications