அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் காலமானார்!
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் (வயது 85) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அண்மையில் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார் சத்யேந்திர தாஸ்; பின்னர் லக்னோவில் உள்ள SGPGI மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று சத்யேந்திர தாஸ் காலமானார்.
அயோத்தியில் பல நூறாண்டுகளாக இருந்த பாபர் மசூதி 1992-ம் ஆண்டு இந்துத்துவா அமைப்புகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்பது இந்துத்துவா அமைப்பினரின் வாதம். பாபர் மசூதி இடிப்பால் நாட்டின் பல மாநிலங்களில் மதவன்முறைகள் வெடித்தன. இதன் உச்சமாக 1993-ம் ஆண்டு உலகையே அதிரவைத்த மும்பை தொடர் வெடிகுண்டு சம்பவங்கள் நிகழ்ந்தன.

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நீண்டகாலமாக வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தை இந்துக்களிடம் ஒப்படைக்கலாம்; மசூதி கட்டுவதற்கு வேறு இடம் ஒதுக்கலாம் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதனையடுத்து அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டது. இந்த ராமர் கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.
அயோத்தி ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகராக நியமிக்கப்பட்டவர் ஆச்சார்யா சத்தியேந்திர தாஸ். அண்மையில் பெய்த பெருமழையில் அயோத்தி ராமர் கோவிலின் மேற்கூரையில் இருந்து வெள்ள நீர் ஒழுகுவதாக குற்றம்சாட்டி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தார்.
கடந்த சில மாதங்களாக ஆச்சார்யா சத்தியேந்திர தாஸுக்கு உடல்நலன் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு பக்கவாதத்தால் அவர் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனையடுத்து லக்னோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் சத்தியேந்திர தாஸ். ஆனால் சிகிச்சை பலனின்றி சத்தியேந்திர தாஸ் இன்று காலமானதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்
சத்யேந்திர தாஸ் மறைவுக்கு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: ராம ஜென்மபூமி கோயிலின் தலைமை அர்ச்சகர் மஹந்த் சத்யேந்திர தாஸ் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மதச் சடங்குகள் மற்றும் வேதங்களில் நன்கு தேர்ச்சி பெற்ற மஹந்த் ஜி, தனது முழு வாழ்க்கையையும் பகவான் ஸ்ரீ ராமரின் சேவைக்காக அர்ப்பணித்தார். நாட்டின் ஆன்மீகம் மற்றும் சமூக வாழ்க்கைக்கு அவர் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்பு எப்போதும் பயபக்தியுடன் நினைவுகூரப்படும். இந்தத் துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் கடவுள் வலிமை அளிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications