எல்லையில் 5 கிமீ ஆக்கிரமித்த வங்கதேசம்? பிஎஸ்எஃப் கொடுத்த பதிலடி.. மேற்குவங்கத்தில் என்ன நடந்தது?
டெல்லி: நம் நாட்டுடன் வங்கதேசம் மோதலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தான் மேற்கு வங்கத்தில் உள்ள இருநாடுகளின் எல்லையில் நம் நாட்டுக்கு சொந்தமான 5 கிலோமீட்டர் நிலத்தை வங்கதேசம் ஆக்கிரமித்துள்ளதாக கொக்கரிப்பு செய்கிறது. இதற்கு எல்லை பாதுகாப்பு படை உரிய பதிலடி கொடுத்துள்ளது. இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
அண்டை நாடான வங்கதேசம் நம் நாட்டுடன் மோதலை தொடங்கி உள்ளது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமாவை தொடர்ந்து அங்கு இடைக்கால அரசு நடக்கிறது. இந்த இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஷ் உள்ளார். இவரது தலைமையிலான ஆலோசனை குழுவினர் தான் நம் நாட்டுடன் மோதலை தொடங்கி உள்ளனர்.

எல்லையில் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். துருக்கி நாட்டு ட்ரோன்களை பறக்கவிட்டு நம் நாட்டை வங்கதேசம் கண்காணிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதையடுத்து நம் நாடும் எல்லையில் ட்ரோன்களை பறக்கவிட்டு பதிலடி கொடுத்தது.
இதன் அடுத்தக்கட்டமாக தற்போது நம் நாட்டின் 5 கிலோமீட்டர் பகுதியை வங்கதேசம் கைப்பற்றி உள்ளதாக கொக்கரித்துள்ளது. அதாவது வங்கதேசம் நம் நாட்டுடன் தான் அதிக எல்லைகளை பகிர்ந்து வருகிறது. புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் வங்கதேசத்தை சுற்றிய எல்லையில் நம் நாட்டின் பகுதிகள் தான் 94 சதவீதம் வரை உள்ளன. இந்தியா - வங்கதேசம் இடையே மொத்தம் 4,096 கிலோமீட்டர் தூரத்துக்கு எல்லை பகுதி விரிந்துள்ளது. இதில் அதிகபட்சமாக மேற்கு வங்கத்துடன் 2,217 கிலோமீட்டர் எல்லையை வங்கதேசம் பகிர்ந்துள்ளது. இதுதவிர வடகிழக்கு மாநிலங்களுடன் வங்கதேசத்தின் எல்லை உள்ளது. அதாவது அசாம், திரிபுரா, மிசோரம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களுடன் வங்கதேசம் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.
இந்நிலையில் தான் வங்கதேச பத்திரிகைகள் ஒரு செய்தி வெளியிட்டுள்ளன. அதில் இந்தியா - வங்கதேச எல்லையில் மேற்கு வங்க மாநிலம் நார்த் 24 பர்கனாஸ் மாவட்டத்தின் பாக்தா பிளாக்கில் கொடாலியா ஆற்று பகுதியில் 5 கிலோமீட்டர் நிலத்தை வங்கதேசம் கைப்பற்றி உள்ளது. இந்த பகுதியில் வங்கதேசம் மோட்டார் படகு மற்றும் ஏடிவி எனும் All Terrain Vehicles மூலம் டிசம்பர் 19ம் தேதி முதல் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது என்று செய்தி வெளியிட்டுள்ளது. அதோடு வங்கதேச எல்லை கண்காணிப்பு படையில்(Border Guard Bangladesh or BGB) 58வது பிஜிபி பிரிவு புதிய கமாண்டங் ஆபிசர் லெப்டினன்ட் கர்னல் ரபிக் இஸ்லாம் தான் இதனை உறுதி செய்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தான் வங்கதேசத்தின் இந்த கொக்கரிப்பை நம் நாட்டின் பிஎஸ்எஃப் எனும் எல்லை பாதுகாப்பு படை முற்றிலுமாக மறுத்துள்ளது. இந்த எல்லை பாதுகாப்பு படையினர் தான் வங்கதேசம் - இந்தியா எல்லையில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக எல்லை பாதுகாப்பு படையினர் தெற்கு பெங்கால் ப்ரண்டையர் (Frontier) சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛வங்கதேசம் கைப்பற்றியதாக கூறப்படும் இடம் மேற்கு வங்க மாநிலம் நார்த்த 24 பர்கனாஸ் மாவட்டத்தின் பாக்தா பிளக்காில் ரான்காட் கிராமத்தில் உள்ளது. இங்கு கோடாலியா ஆறு உள்ளது. இந்த ஆறு தான் இருநாடுகளின் எல்லையாக உள்ளது. இங்கு இருநாடுகளின் எல்லைகள் நன்கு வரையறுக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. நம்நாட்டின் எல்லை பாதுகாப்பு படை மற்றும் ஐபி பணியில் இங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொடர்ந்து கண்காணிப்பு பணி என்பது நடத்தப்பட்டு வருகிறது.
இதனால் வங்கதேசம் வெளியிட்டுள்ள செய்தி என்பது அடிப்படை ஆதாரமற்றது. அந்த செய்திக்கான உண்மை ஆதாரங்கள் எதுவும் இல்லை. இது முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்ட செய்தி. நம் நாட்டின் ஒரு இன்ச் நிலத்தை கூட எதிரி நாட்டால் எடுக்க முடியாது. எடுக்கவும் இல்லை. எல்லையில் எல்லை பாதுகாப்பு படை மற்றும் வங்கதேச எல்லை கண்காணிப்பு படையின் கண்காணிப்பு என்பது தங்களின் எல்லைகளில் அமைதியாக நடந்து வருகிறது’’ என்று கூறியுள்ளது.
இதன்மூலம் இந்தியா - வங்கதேச எல்லையில் 5 கிலோமீட்டர் தொலைவை ஆக்கிரமிப்பு செய்ததாக வங்கதேசம் கூறும் தகவலை பொய் என்று கூறி நம் நாட்டின் எல்லை பாதுகாப்பு படை விளக்கம் அளித்துள்ளது. அதோடு நம் நாட்டுக்கு சொந்தமான 5 கிலோமீட்டர் நிலத்தை வங்கதேசம் கைப்பற்றியதாக பரவும் தகவலில் உண்மை இல்லை என்பதை எல்லை பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications