குடியரசுத் தலைவர் தேர்தல்.. திரெளபதி - மோடி சந்திப்பு.. நாளை வேட்பு மனுத்தாக்கல்?
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று சந்தித்துள்ளார்.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. வரும் ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 15ம் தேதி முதல் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய நிலையில், பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக இறங்கினர்.
பிரேமலதாவுக்கு போன் போட்ட பிரதமர் மோடி.. விஜயகாந்த் உடல்நிலை பற்றி விசாரிப்பு.. குணமடைய பிரார்த்தனை!

வேட்பாளர்கள் யார்?
இதையடுத்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹா குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அதேபோல் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டார்.

திரெளபதி முர்முவுக்கு வாழ்த்து
தொடர்ந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள திரௌபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். அதில், திரௌபதி முர்மு தனது வாழ்க்கையை சமூக சேவைக்காகவும், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் கிடைப்பதற்காகவும் அர்ப்பணித்தவர். சிறந்த நிர்வாக அனுபவத்தை கொண்ட அவர், சிறந்த ஆளுநராக பதவி வகித்து உள்ளார். அவர் நம் நாட்டின் சிறந்த குடியரசுத் தலைவராக இருப்பார் என்று நான் நம்புகிறேன் என்று வாழ்த்தினார்.

மோடி - திரெளபதி முர்மு சந்திப்பு
இந்தநிலையில் டெல்லி வந்த பாஜக கூட்டணி குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்புக்கு பின் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரெளபதி முர்முவை தேர்வு செய்ததற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பளித்துள்ளனர். அடிப்படை பிரச்னைக்கான புரிதல் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கான திரெளபதியின் பார்வை சிறப்புக்குரியது என்று பதிவிட்டார்.

நாளை வேட்பு மனுத்தாக்கல்
இதனிடையே சொந்த ஊரில் இருந்து டெல்லி வந்துள்ள திரெளபதி முர்மு, நாளை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்காகவே பிரதமர் நரேந்திர மோடியை திரெளபதி முர்மு சந்தித்துள்ளதாகவும், அப்போது பாஜக கூட்டணியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.