இதெல்லாம் வசதியா மறந்துட்டீங்களா?.. டேட்டாவுடன் எம்பி கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய பாஜக அண்ணாமலை
மக்களவையில் மத்திய அரசை விமர்சித்த திமுக எம்பி கனிமொழிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில்
டெல்லி: வேலைவாய்ப்பின்மை முதல் ரயில்வேக்கு நிதி ஒதுக்கியது வரை புள்ளிவிவரங்களுடன் திமுக எம்பி கனிமொழியிடம் பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: திமுக அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்தை பொய் புகார்களை பரப்பவும், அரைக்குறை உண்மைகளை தெரிவிக்கவும் பயன்படுததிக் கொள்கிறார்கள். நாடாளுமன்றக் கூட்டத்தை ஏதோ கட்சி கூட்டம் போல் கருதுகிறார்கள்.
லோக்சபாவில் நேற்றைய தினம் திமுக எம்பி கனிமொழியும் பொய் கூறுவது என்ற அவர்களுடைய கட்சியின் நீண்ட கால கொள்கையில் இருந்து இன்னமும் மாறாமல் உள்ளார். சமூகநீதி மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்கும் மாடல்களை திமுக எப்படி உருவாக்கியது என்பது குறித்து கனிமொழி பேசியிருந்தார். உண்மையில் திமுக ஆட்சியில் நடந்தது என்ன என்பதை பார்ப்போம்.

1. புதுக்கோட்டை மாவட்டத்தில் வேங்கைவயல் எனும் கிராமத்தில் பட்டியலின சகோதர, சகோதரிகள் குடிக்கும் தண்ணீரில் மனித கழிவுகளை கலந்து விட்ட செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. ஆனால் மாதங்கள் கடந்த போதிலும் குடிநீரில் அது போன்ற மாபாதகத்தை செய்தவர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
2. அண்மையில் திமுக அமைச்சர் ஒருவர் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பஞ்சாயத்து தலைவரை ஜாதியின் பெயரை கூறி அழைத்தார்.
3. சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களின் போது மக்களால் தேர்வு செய்யப்பட்ட கிராம பஞ்சாயத்து தலைவர்கள் தேசிய கொடியேற்ற அனுமதி அளிப்பதில்லை.
4. திமுக லோக்சபா எம்பி ராசா பட்டியலின சகோதரர், சகோதரிகள் குறித்து அவதூறாக பேசியிருந்தது தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
5. திமுக லோக்சபா எம்பி டி.ஆர்.பாலு இந்து கோயில்களை உடைப்பதை பெருமையாக பேசுகிறார். தயாநிதி மாறனோ தீண்டதகாதவர்களாக நடத்தப்பட்டதாக கூறி கலகம் செய்தார்.
6. அண்மையில் சேலம் திமுக நிர்வாகி பட்டியலின இளைஞர் ஒருவரை கடுமையான வார்த்தைகளால் பேசி கோயில்களுக்குள் நுழைய அனுமதி மறுத்தார்.
சமூகநீதி மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற பெயரில் இது போன்ற சாதனைகளைத்தான் கடந்த 20 மாதங்களாக திமுக செய்தது. இவற்றை கொண்டு செய்தித் தாள்களில் 20 பக்கங்களை கூட நிரப்பலாம்.
அடுத்ததாக ஆளுநர் 20 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்ற புகாரை கூறியிருந்தார். கடந்த வாரம் வரை 15 ஆக இருந்த எண்ணிக்கையை அவரது சகோததரான தமிழக முதல்வர் தற்போது 20 என உயர்த்தியிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. தமிழக பாஜக ஏற்கெனவே ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்து தெளிவுப்படுத்தியிருந்தது.
அந்த 15 மசோதாக்கள் என்னவென பார்க்கலாம்.
1. தமிழக முதல்வர் தன்னைத்தானே பல்கலைக்கழக வேந்தராக நியமித்த 12 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.
2. அரசாங்கத்திற்கு தேவையற்ற அதிகாரங்களை வழங்கும் கூட்டுறவு சங்கங்களின் விதிகளின் திருத்தம் தொடர்பான ஒரு மசோதா நிலுவையில் உள்ளது.
3. எந்தவொரு தனியார் கல்லூரிகளையும் கையகப்படுத்த விரும்பும் தமிழர அரசின் விதியை திருத்தும் ஒரு மசோதா.
4. ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பான ஒரு மசோதா
எனவே திமுக எம்பிக்களை நாங்கள் கேட்டுக் கொள்வது ஒன்றுதான் அதாவது முரசொலியை மட்டும் படிக்காமல் , கடந்த காலங்களில் உண்மை சம்பவங்களை வெளியிட்ட மற்ற நாளிதழ்களையும் படிக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பாஜக ஏன் திருக்குறளை சொல்ல மறந்துவிட்டது என கனிமொழி எம்பி கேட்டிருந்தார். அவரிடம் சிலவற்றை சொல்ல விரும்புகிறேன்.

1. அண்மையில் நமது பாரத பிரதமர் தமிழ் மொழியை புகழ்ந்து பேசியதை கனிமொழி நினைவில் வைத்திருப்பார் என விரும்புகிறோம்.
2. காசி தமிழ் சங்கமத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி 13 மொழிகளில் திருக்குறளை வெளியிட்டார். இதனிடையே திருவள்ளுவர் சிலையை விட ஒரு அடி உயரத்தில் பேனா சிலையை ஏன் அவரது கட்சி அமைக்க விரும்புகிறது என்பதை கனிமொழி விளக்குவாரா
திமுக எப்போதுமே சொந்த மண்ணை விட்டுவிட்டு மேற்கு நாடுகள் என்ன சொல்கிறதா அதைத்தான் நம்பும். அது போல் அயர்லாந்து மற்றும் ஜெர்மனியில் உள்ள என்ஜிஓக்களால் வெளியிடப்பட்ட உலக பசி குறியீட்டின் மீது கனிமொழி நம்பிக்கை வைத்துள்ளார். அந்த என்ஜிஓக்கள் சரியான தரவுகளை அளிக்காது, நம் அரசின் உணவு பாதுகாப்பு விஷயத்தை கருத்தில் கொள்ளாது, வெறும் 3000 பேரிடம் மட்டுமே கருத்தை கேட்கும்.
கொரோனா காலகட்டத்தின் போது வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்கும் வகையில் இந்தியாவின் உணவு பாதுகாப்பு திட்டம் இருந்ததாக ஐஎம்எஃப் பாராட்டியிருந்ததை திமுக எம்பிக்கள் வசதியாக மறந்துவிட்டனர்.
பொய் மற்றும் அரைகுறை உண்மைகளை சொல்லும் போது திமுக எம்பி கனிமொழி வேலையின்மை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
1. டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர்களின் முடிவுகளை அறிவிக்க திமுக போராடி வருகிறது.
2. ஆண்டுதோறும் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என திமுக அளித்த வாக்குறுதியை மறந்துவிட்டது.
3. 5.5 லட்சம் அரசு வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு உருவாக்குவோம் என திமுக வாக்குறுதி அளித்திருந்ததே அது குறித்து எந்த செய்தியும் காணவில்லை.
கடந்த ஜூன் 2022 ஆம் ஆண்டு மத்திய அரசாங்கத்தில் இளைஞர்களுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என பிரதமர் உறுதியளித்திருந்தார். ஏற்கெனவே 2.17 லட்சம் பேருக்கு பணிநியமன ஆணைகள் அளிக்கப்பட்டுவிட்டன.
நம் நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்தியாவின் பழங்குடியினத்தை சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர் ஆவார். இதை ஏற்காத கனிமொழி பழங்குடியினரின் நலனில் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை என்கிறார்.

பழங்குடியினர் நலனுக்கான பட்ஜெட்:
2013- 14- ரூ 4,295.94 கோடி
2022-2023- ரூ.12,461.88 கோடி
2006 முதல் 2016 ஆம் ஆண்டு வரை 8 ஆண்டுகளில் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒதுக்கிய தொகை ரூ 675.36 கோடியாகம். இதே தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ 75.05 கோடியாகும். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக அங்கம் வகித்த போது இந்த தொகை பாரபட்சத்துடன் ஒதுக்கப்பட்டது. இதுகுறித்து தமிழக மக்களுக்கு திமுக விளக்க வேண்டும்.
திமுக எம்பி கனிமொழி, 2023-24 ஆம் ஆண்டில் தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களில் குறைவான ஒதுக்கீடு என்று புகார் கூறியிருக்கிறார். ஆனால், 2023-24 ஆண்டில், தமிழகத்திற்கான ரயில்வே பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக் காலத்தில் ஒதுக்கப்பட்ட சராசரியை விட, ஏழு மடங்கு அதிகம். தமிழகத்தில் தற்போது ரூ.30,961 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, பட்டியலின சகோதர, சகோதரிகளின் நலனுக்காக, 13 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஏன் தமிழக அரசு செலவிடவில்லை என்பது குறித்து தமிழக பாஜக சார்பில் கேள்வி எழுப்பியிருந்தோம். தமிழக அரசிடம் இருந்து, இன்னும் எங்களுக்குப் பதில் வரவில்லை. கனிமொழி, தகுந்த பதிலை கண்டுபிடித்து அளிப்பார் என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications