வருண் காந்தியை கழற்றிவிட்ட பாஜக.. லோக்சபா தேர்தலில் சீட் கொடுக்காதது ஏன்? பின்னணி தகவல்
டெல்லி: பாஜக இன்று 5வது கட்டமாக 111 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில், சிட்டிங்க் எம்பி வருண் காந்திக்கு பாஜக போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. பிலிபித் தொகுதியில் மூன்று முறை எம்பியாக இருந்த வருண் காந்திக்கு பதிலாக காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் பாஜகவில் இணைந்த ஜிதின் பிரசதாவிற்கு சீட் வழங்கியுள்ளது பாஜக தலைமை.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கி விட்டதால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அந்த அகையில், மத்தியில் ஆளும் பாஜக இன்று 5-வது கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. 111- தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக இன்று வெளியிட்டது.

தற்போது வெளியான இந்த 5வது வேட்பாளர் பட்டியலில் ஆந்திரா மாநிலத்தில் 6 தொகுதி, பீகார் மாநிலத்தில் 17 தொகுதி, கோவாவின் ஒரு தொகுதி, குஜராத்தின் 6 தொகுதிகளுக்கும், ஹரியானாவில் 4 தொகுதி, இமாச்சல பிரதேசத்தின் 2 தொகுதி, ஜார்கண்ட்டின் 3 தொகுதி, கர்நாடகா, கேரளாவில் தலா 4 தொகுதி, மகாராஷ்டிராவின் 3 தொகுதி, மிசோரமின் ஒரு தொகுதி, ஒடிசாவின் 18 தொகுதி, ராஜஸ்தானில் 7 தொகுதி, சிக்கிமின் ஒரு தொகுதி, தெலுங்கானாவின் 2 தொகுதி, உத்தர பிரதேசத்தின் 13 தொகுதிகள் என மொத்தம் 111 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வெளியான லிஸ்டில் பாஜகவின் சில முக்கிய புள்ளிகளுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய அமைச்சர்களாக இருக்கும் அஸ்வினி குமார் சவுபே மற்றும் விகே சிங் ஆகியோருக்கு சீட் வழங்கப்படவில்லை. அதேபோல், பிலிபித் தொகுதியில் தற்போது எம்பியாக இருக்கும் வருண் காந்திக்கு சீட் மறுக்கப்படவில்லை.
கங்கனா ரனாவத், ராகுலின் சித்தி மேனகா காந்தி போட்டி.. வெளியானது பாஜகவின் 5வது வேட்பாளர் பட்டியல்
பாஜக தலைமை மீது சமீப காலமாக அதிருப்தியில் இருந்த வருண் காந்தி.. அவ்வப்போது பாஜகவை மறைமுகமாக சீண்டும் வகையில் கருத்துக்களை கூறி வந்தார். குறிப்பாக விவசாயிகள் போராட்டம், லகிம்பூர் பிரச்சினை போன்றவற்றில் பாஜகவிற்கு தர்மசங்கடம் ஏற்படும் விதமாக பேசி வந்தார். எனினும், கடந்த டிசம்பர் முதல் பாஜகவை விமர்சிக்காமல் அனுசரனையாகவே இருந்தார்.
எனினும், வருண் காந்திக்கு சீட் கொடுக்க உத்தர பிரதேச பாஜகவில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில், தான் பிலிபித் தொகுதியில் வருண் காந்திக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. வருண் காந்தி போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சுயேட்சையாக போட்டியிடலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. வருண் காந்தியின் தாயாரும் ராகுல் காந்தியின் சித்தியுமான மேனகா காந்திக்கு சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications