அசுர பலம் வந்துவிட்டது.. லோக்சபா தேர்தலில் எப்படி ஜெயிக்கிறோம் பாருங்கள்.. அமித் ஷா சூளுரை
டெல்லி: குஜராத் சட்டமன்றத் தேர்தல் பாஜகவுக்கு ஒரு அசுர பலத்தை தந்திருப்பதாகவும், இந்த பலத்துடன் எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலை பாஜக துவம்சம் செய்ய காத்திருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
இனி எத்தனை கட்சிகள் வந்தாலும் குஜராத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் யாரும் பாஜகவை வீழ்த்த முடியாது என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத் சட்டமன்றத் தேர்தலில் சூரத் மாவட்டத்தில் இருந்து தேர்வான பாஜக எம்எல்ஏக்களுக்கான பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அமித் ஷா பேசியதாவது:

"பாஜகவின் பிம்பமே மாறிவிட்டது"
நடந்து முடிந்த குஜராத் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளை பாஜக கைப்பற்றி இருக்கிறது. இது சாதாரணமான வெற்றி அல்ல. குஜராத் தேர்தல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத சாதனையை பாஜக செய்திருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளையே எடுத்துக் கொண்டாலும் கூட, தொடர்ந்து 27 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சிக்கு மீண்டும் இப்படி ஒரு வெற்றி கிடைத்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், குஜராத் தேர்தலானது பாஜகவின் பிம்பத்தையே மாற்றிவிட்டது. ஏற்கனவே பெரிதாக இருந்த பாஜகவின் பிம்பத்தை இது மேலும் பிரம்மாண்டமாக மாற்றிவிட்டது.

பாஜகவை அசைக்க முடியாது
குஜராத் தேர்தலில் எத்தனையோ கட்சிகள் புதிதாக களத்தில் இறங்கின. அந்தக் கட்சிக்கு இவ்வளவு கூட்டம் கூடுகிறது. இந்தக் கட்சிக்கு இவ்வளவு கூட்டம் கூடுகிறது என ஊடகங்களும் அந்தக் கட்சிகளை தூக்கிப் பிடித்தன. குஜராத் அரியணையில் பாஜக அமர்வது இதுவே கடைசி முறை பல பத்திரிகைகள் கட்டுரைகளை எழுதின. ஆனால், இவை அனைத்தையும் பொய்யாக்கி, மீண்டும் குஜராத்தின் அரியாசனத்தை மக்கள், பாஜகவுக்கு பரிசாக அளித்துள்ளனர். இதனால் குஜராத் இன்றைக்கு அல்ல.. என்றைக்குமே பாஜகவின் கோட்டை என மக்கள் கூறிவிட்டனர்.

"மக்களவைத் தேர்தலில் துவம்சம்"
குஜராத் சட்டமன்றத் தேர்தல் வெற்றி பாஜகவுக்கும், அதன் தொண்டர்களுக்கும் ஒரு அசுர பலத்தை கொடுத்திருக்கிறது. இந்த உத்வேகத்துடன், அவர்கள் 2024 மக்களவைத் தேர்தலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் இப்போது முதலாகவே மக்களவைத் தேர்தலுக்கான களப்பணிகளில் ஈடுபட தொடங்கிவிட்டனர். குஜராத் வெற்றி மக்களவைத் தேர்தலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் 2024 மக்களவைத் தேர்தலை பாஜக துவம்சம் செய்யப் போகிறது.

அதிகரிக்கும் மோடியின் செல்வாக்கு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது முதலாக, நாடு வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இத்தனை ஆண்டு ஆட்சியில் ஒரு ஊழல் புகார் கூட பாஜக அரசு மீது இல்லை. ஆனால் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தொட்டதுக்கெல்லாம் ஊழல் நடைபெற்று வந்தது. இவை அனைத்தையும் மக்கள் பார்த்து வருவதால், மோடியின் செல்வாக்கு வெகுவாக அதிகரித்துள்ளது. இதுதான் பாஜகவுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. இவ்வாறு அமித் ஷா பேசினார்.












Click it and Unblock the Notifications