"இனி கஷ்டம் தான்!" அதுவும் வடமாநிலங்களில் கூட.. அதிர வைத்த ரிப்போர்ட்.. பிளான் பி உடன் இறங்கும் பாஜக
டெல்லி: அதிருப்தி அதிகமாக உள்ளதால் வரும் காலத்தில் தேர்தல் நடைபெறும் 4 மாநிலங்களில் பாஜக வெல்வது கடினம் என்று சொல்லப்படுகிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக தனிப்பெரும்பான்மை உடன் வென்று ஆட்சியைப் பிடித்தது. 2019 தேர்தலிலும் இது தொடர்ந்தது.
5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்த பின்னர், பாஜக இப்படி அடுத்த மக்களவை தேர்தலிலும் வென்று ஆட்சியை அமைப்பது இதுவே முதல்முறையாகும்.

காங்கிரஸ்
மக்களவை தேர்தல் மட்டுமின்றி சட்டசபைத் தேர்தல்களிலும் பாஜக தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்று வருகிறது. காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற முழக்கத்தையே பாஜக முன்னெடுத்து உள்ளது. காங்கிரஸ் வலுவாக இருந்த பல்வேறு மாநிலங்களிலும், அதை வீழ்த்தி பாஜக ஆட்சியை அமைத்து உள்ளது. இதனால் தேசிய அளவில் காங்கிரஸின் இருப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே இருக்கிறது.

கூட்டணி அரசுகளும்
மத்தியப் பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் எம்எல்ஏக்களே பாஜகவில் சென்று ஐக்கியமாகினார். இதனால் கூட்டணி அரசு காங்கிரஸ் கட்சியாலேயே கவிழும் சூழல் உருவானது. சமீபத்தில் மகாராஷ்டிராவில் நடந்தது கூட அனைவரும் நினைவில் இருக்கும். சிவசேனா எம்எல்ஏக்கள் அப்படியே காங்கிரஸ்- என்சிபி கூட்டணியைக் கைவிட்டுவிட்டு பாஜக உடன் கூட்டணி அமைத்தனர்.

ஆலோசனை
இப்படி தொடர்ச்சியாகச் சட்டசபைகளிலும் கூட பாஜக வெற்றியையே பெற்று வருகிறது. 2024 மக்களவை தேர்தல் சமயத்தில் அதிகபட்ச இடங்களில் பாஜக ஆளும் கட்சியாக இருக்க வேண்டும் என விரும்புகிறது. இது மக்களவை தேர்தல் பிரசாரத்தை எளிதாக்கும் என நினைக்கிறது. இந்தச் சூழலில் வரும் காலத்தில் நடைபெறும் சட்டசபைத் தேர்தல் குறித்து பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சமீபத்தில் டெல்லியில் ஆலோசனை நடத்தினர்.

அதிருப்தி
அதில் வரும் காலங்களில் தேர்தல் நடைபெற உள்ள பாஜக ஆளும் மாநிலங்களில் மக்களிடையே அதிருப்தி அதிகரித்து உள்ளதாக ரிப்போர்ட்கள் சமர்ப்பிக்கப்பட்டன. ஊழல், உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளால் அம்மாநில மக்கள் ஆளும் மாநில பாஜக அரசுகள் மீது கடும் கோபத்தில் உள்ளனராம். அந்தந்த மாநிலங்களில் முதல்வராக உள்ளவர்கள் மீதும் அதிருப்தியில் உள்ளனராம்.

நடவடிக்கை
அந்த மாநில தலைவர்களுக்கு மக்களிடையே போதிய செல்வாக்கு இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சட்டசபைத் தேர்தல் சமயத்தில் வெல்லக் கடுமையாகப் போராட வேண்டி இருக்கும் என்றும் அதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. உத்தரகண்ட் முதல்வர் மாற்றப்பட்டுத் தேர்தலை பாஜக எதிர்கொண்டதோ அப்படி முதல்வர்களை மாற்றலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கடைசி நேரத்தில் முதல்வர் மாற்றுவது சிக்கலையும் தர வாய்ப்புள்ளதால் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பிளான் பி
மாநில பாஜக அரசு மீது தான் மக்களிடையே அதிருப்தி இருப்பதால், பிரதமர் மோடியை முன்னிறுத்தி அந்த மாநிலங்களில் பிரசாரத்தை முன்னெடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதை பிளான் பி ஆக வைத்துள்ளனர். இருப்பினும், எதிர்க்கட்சிகள் மிகவும் வலுவாக உள்ள மாநிலங்களில் பிரதமர் மோடியை முன்னிறுத்துவது மட்டும் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வெற்றியைப் பெற்றுத் தராது என்பது பாஜகவுக்குத் தெரியும். இதனால் வரும் காலங்களில் அந்த மாநிலங்களில் சில அதிரடி மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications