BJP Manifesto: 4 தூண்களை மையமாக வைத்து பாஜக தேர்தல் அறிக்கை .. பிரதமர் மோடி சொன்ன விஷயம்!
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்குடனான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டத் தேர்தலில் தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மொத்தமாக வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்தவகையில், பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்காக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான 27 பேர் கொண்ட குழுவை பாஜக தலைமை அமைத்திருந்தது. அந்தக் குழு இந்த அறிக்கையை உருவாக்கியுள்ளது. 'மோடியின் உத்தரவாதம்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் 14 தலைப்புகளில் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பயனாளிகள் கைகளில் தேர்தல் அறிக்கை: பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் பயனடைந்தவருக்கு, முதல் தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசின் திட்டங்களில் பயனடைந்த பயனாளிகளுக்கு தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திட்டத்திலும் பயனடைந்த தலா ஒரு பயனாளிக்கு தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது. உஜ்வாலா, ஜல் ஜீவன், விவசாய காப்பீடு என ஒவ்வொரு திட்ட பயனாளிகளுக்கும் தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது.
மோடி பேச்சு: தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்குடனான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். இந்த தேர்தல் அறிக்கையை தயாரிக்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பாராட்டுகள். பாஜக மீது லட்சக்கணக்கான மக்கள் நம்பிக்கை வைத்து கருத்துகளைத் தெரிவித்தனர். கடந்த கால தேர்தல் வாக்குறுதிகளை கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.
4 தூண்கள்: ஒட்டுமொத்த நாட்டு மக்களும் இந்த 'சங்கல்ப் பத்ரா' என்ற பாஜகவின் இந்த தேர்தல் அறிக்கைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகிய 4 தூண்களை மையமாக வைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் கனவை நனவாக்குவோம்." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய பிரதமர் மோடி, "குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) நடைமுறைப்படுத்துவதற்கான வரலாற்று நடவடிக்கையை நாங்கள் எடுத்துள்ளோம். இதன் மூலம், தகுதியானவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். பாஜக அரசு மருந்து பொருட்களுக்கு 80% தள்ளுபடி அளித்து வருகிறோம்.
தீர்வுகளை பற்றி மட்டுமே பேசுகிறோம்: மானிய விலையில் கேஸ் சிலிண்டர் கொடுத்து வருகிறோம், அடுத்த கட்டமாக அனைத்து கிராமங்களுக்கும் பைப் லைன் மூலம் கேஸ் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். புதிய மின் உற்பத்தி மூலம் அனைத்து குடும்பங்களுக்கும் மின்சாரம் விநியோகிக்க உள்ளோம்.
25 கோடி ஏழைகளை ஏழ்மையிலிருந்து எனது தலைமையிலான அரசு மீட்டெடுத்திருக்கிறது. இலவச ரேஷன் திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடரும். இளைஞர்களின் கனவை நனவாக்க பணியாற்றுகிறோம். தீர்வுகளை பற்றி மட்டுமே நாங்கள் பேசுகிறோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications