தொழிலதிபர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் தள்ளுபடி!அரசு கஜானா யாருக்கு?மத்திய அரசை சாடிய பாஜக எம்பி
டெல்லி: ‛‛5 கிலோ இலவச உணவு தானியத்தை ஏழைகளுக்கு வழங்கிவிட்டு நன்றியை எதிர்பார்க்கும் நாடாளுமன்றத்தில் தான் இந்தியாவில் ரூ.10 லட்சம் கோடி வராக்கடனை ஊழல் தொழில் அதிபர்களுக்கு தள்ளுபடி செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு கஜானாவில் முதல் உரிமை யாருக்கு?'' என மத்திய அரசை விமர்சித்து பாஜகவின் எம்பி வருண் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தின் பிலிபிட் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியாக உள்ளவர் வருண்காந்தி. இவர் இந்திரா காந்தியின் பேரனும், சஞ்சய் காந்தி-மேனகா காந்தியின் மகனும் ஆவார்.
மேனகா காந்தி பாஜகவில் இருக்கும் நிலையில் அவரது மகன் வருண் காந்தியும் அக்கட்சியிலேயே தொடர்ந்து வருகிறார். இருப்பினும் வருண் காந்தி அவ்வப்போது மத்திய அரசை கடுமையாக விமர்சிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

மத்திய அரசுக்கு நன்றி சொல்லணும்
இந்நிலையில் தான் நாடாளுமன்றத்தில் பாஜகவின் எம்பி ஒருவர் பேசும்போது, ‛‛கொரோனா சந்தர்ப்பத்தில் 80 கோடி ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கி உள்ளது. இதனால் மத்திய அரசுக்கு மக்கள் நன்றி கூற வேண்டும்'' என பேசி இருந்தார். தேர்தலில் இலவசங்கள் வழங்குவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் விமர்சனம் செய்த நிலையில் நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி இவ்வாறு பேசி இருந்தார்.

வருண் காந்தி விமர்சம்
இதனை தான் தற்போது வருண் காந்தி எம்பி விமர்சனம் செய்துள்ளார். அதாவது மக்களுக்கு 5 கிலோ தானியங்கள் இலவசமாக வழங்கப்படுவதையும், வராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதையும் ஒப்பிட்டு அவர் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக வருண் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

டுவிட்டரில் கூறியது என்ன?
‛‛ஏழை மக்களுக்கு 5 கிலோ தானியங்கள் இலவசமாக வழங்கியதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என நாடாளுமன்றம் எதிர்பார்க்கிறது. அதேவேளையில் கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் தொழில் அதிபர்களின் ரூ.10 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு கஜானாவில் முதல் உரிமை யாருக்கு? '' என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் வராக்கடன் தள்ளுபடி தொடர்பாக மத்திய அரசு சார்பில் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட விபரங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

வராக்கடன் தள்ளுபடி எவ்வளவு?
அதாவது கடந்த வாரம் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கே காரத் எழுத்துப்பூர்வமாக பதிலளித்து இருந்தார். அதில், ‛‛கடந்த 2017-18ம் நிதியாண்டு முதல் 2021-22 நிதியாண்டு வரை 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ. 9 லட்சத்து 91 ஆயிரத்து 640 கோடி வங்கி வராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது'' என கூறியிருந்தார். அத்துடன் வாங்கிய கடனை செலுத்தத் தவறிய 10 நிறுவனங்கள் பட்டியலை நாடாளுமன்றத்தில் வெளியிட்டதை அவர் பகிர்ந்துள்ளார். இதில் வைர வியாபாரி மெகுல்சோக்சி, ரிஷி அகர்வால் உள்ளிட்ட தொழில் அதிபர்களின் நிறுவனங்களும் அடங்கும். இதனை தான் வருண் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

முந்தைய விமர்சனங்கள் என்ன?
முன்னதாக வருண் காந்தி, மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பை கடுமையாக சாடியிருந்தார். இந்தியாவின் பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியாவிட்டால் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதற்கு ஓய்வூதியம் வேண்டும் என அக்னிபாத் திட்டத்தில் மத்திய அரசை சாடினார். மேலும் ஜிஎஸ்டிி வரி விதிப்பை பொறுத்தமட்டில், பால், தயிர், வெண்ணெய், அரிசி, பருப்பு, ரொட்டி போன்ற பேக் செய்யப்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்துக்கு நடுவே இந்த முடிவு இளைஞர்களை பாதிக்கும். நிவாரணம் கொடுக்க வேண்டிய நிலையில் நாம் காயப்படுத்துகிறோம் என வருத்தத்தை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications