மாநில தலைவர்கள் ஓரம் போ.. 'மோடி'யை முன்னிறுத்தும் பாஜக வியூகத்துக்கு எடுத்த எடுப்பிலேயே அடி?
டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல்களில் மத்தியில் ஆளும் பாஜக அரசு முன்னெடுக்கும் ஒவ்வொரு வியூகமுமே மாநிலங்களின் முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள், சீனியர்களை ஓரம் கட்டுகிற அல்லது திடீரென வேட்பாளர்களாக அறிவிக்கிற 'அதிர்ச்சி' ரகமாக இருப்பதால் இது நல்லதா? கெட்டதா? என திக்கு தெரியாத காட்டுக்குள் விழிபிதுங்கி கிடக்கின்றனர் பாஜகவினர்.
லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.. இதற்கு முன்னதாக அரை இறுதி ஆட்டம் போல தற்போது தெலுங்கானா, சத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தான் மற்றும் மிசோரம் சட்டசபை தேர்தல்கள் நடைபெறுகின்றன. லோக்சபா தேர்தல் மற்றும் இந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களுக்கான இடைவெளி என்பது சில மாதங்கள்தான் இருக்கின்றன. இந்த குறுகிய கால இடைவெளியில் மிரட்டுகிற "இந்தியா" கூட்டணியின் விஸ்வரூபம் பாஜகவை ரொம்பவே பாடாய் படுத்தி பதற வைத்திருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இந்தியா கூட்டணியால் பதற்றம்?: "இந்தியா" கூட்டணியின் திடீர் விஸ்வரூபத்தால் லோக்சபா தேர்தலுக்கான பிரசார வியூகங்களை கையில் எடுத்து அதை நோக்கி பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வேகமெடுத்து பேசத் தொடங்கினர். உதாரணமாக சனாதன தர்மம் ஒழிப்பு விவகாரத்தில் லோக்சபா தேர்தலை கவனத்தில் வைத்தே ஒட்டுமொத்த பாஜகவின் குரலும் ஒரே மாதிரியாக ஒலித்தது. ஆனால் திடீரென 5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது பாஜகவுக்கு இயல்பாகவே பதற்றமும் குழப்பமும் ஏற்பட்டுவிட்டதை அதன் நடவடிக்கைகளே காட்டி கொடுத்துவிட்டன.
பாஜகவின் குழப்பமான வியூகம்: பொதுவாக மாநில சட்டசபை தேர்தல்களில் மாநில பாஜக தலைவர்கள், மாநிலங்களின் பிரச்சனைகள், மாநில முதல்வர்கள் சாதனைகள், மாநிலங்களில் பாஜக அளிக்க போகிற வாக்குறுதிகள், வேட்பாளர்களாக கட்சியின் மாநில சீனியர்கள், செல்வாக்கானவர்கள் என அத்தனை சக்கரமும் "மாநிலம்" சார்ந்த ஒன்றாகவே இருப்பது வழக்கம். ஆனால் பாஜகவோ இம்முறை "பிரதமர் மோடியை" முன்னிறுத்தி பார்த்தது. மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் தொடக்கத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பெயரை கூட சொல்லாமல்தான் பிரதமர் மோடி இருந்தார். அதேபோல ராஜஸ்தானில் வசுந்தரராஜே அண்ட் கோவை தொடக்கத்தில் ஒட்டுமொத்தமாக தூக்கி பரணில் வீசி எறிந்தது பாஜக. மேலும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனைகள், பிரதமர் மோடியின் சாதனைகளே போதும் மாநிலங்களில் வெல்வதற்கு என்கிற வியூகத்தை பின்பற்றியது பாஜக.
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தந்த டெல்லி: இதன் ஒரு பகுதியாக 5 மாநில தேர்தல்களின் வேட்பாளர்கள் தேர்வில் பெரும் மர்மமும் பூடகமும் இருந்து வந்தது. லோக்சபா எம்பிக்கள், மத்திய அமைச்சர்கள் என பதவியில் அமர்ந்து கொண்டு மாநில தேர்தலை வேடிக்கை பார்க்க நினைத்த 'தலைகளை' திடுதிப்பென எந்த ஒரு முன்னறிவித்தலும் இல்லாமல் சட்டசபை தேர்தல் களத்தில் வேட்பாளர் என அறிவிக்க திக்கி திணறிப் போய் கிடக்கின்றனர் அவர்கள். பட்டியல் வெளியாவதற்கு முன்னர் கூட ஒருவார்த்தை உங்களை வேட்பாளராக அறிவிக்கப் போகிறோம் என்கிற 'ரகசிய' தகவல் கூட எம்பிக்கள் பலருக்கு சொல்லப்படவில்லை. அப்படி என்கிற போது மாநில தலைமைகளை பற்றி சொல்லவா வேண்டும்.
காங்கிரஸ் பாணி?: காங்கிரஸ் உச்சாணிக் கொம்பில் இருந்த போது இந்த மாதிரியான 'டெல்லி' திணிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டது. இதன் விளைவு இருந்த இடமே இல்லாமல் பல மாநிலங்களில் காங்கிரஸ் அழிந்தது என்பதுதான் வரலாற்றில் இருக்கும் எச்ச சொச்சம். 5 மாநில தேர்தல்களின் தொடக்கத்தில் இப்படியான ஒரு நிலைப்பாட்டை மேற்கொண்ட பாஜக திடுதிப்பென மாநிலங்களின் தலைவர்களை முன்னிலைப்படுத்த தொடங்கிவிட்டது.
திடீரென மாற்றம்: மத்திய பிரதேசத்தில் போட்டியிடவே சீட் கிடைக்குமா? கிடைக்காதா? என ஒதுக்கப்பட்ட சிட்டிங் சிஎம் சிவராஜ்சிங் சவுகானின் பெயரை இப்போது மூச்சுக்கு முன்னூறு முறை பிரதமர் மோடி உள்ளிட்டோர் உச்சரிக்கின்றனர். ராஜஸ்தானில் யாருடைய அத்தியாயத்துக்கு முடிவுரை எழுதப்பட்டதாக பாஜக தோற்றத்தை உருவாக்கியதோ அதே வசுந்தரராஜே சிந்தியாவின் ஆதரவாளர்கள் பலருக்கும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இடம் கொடுக்கப்பட்டது. நேற்று இல்லாத மாற்றம் இன்று என்னவாம்? என்கிற கேள்வியை இது இயல்பாகவே எழுப்பி நிற்கிறது. பாஜகவின் இத்தகைய தலைகீழ் தடாலடி மாற்றங்களின் பின்னணியில் , கருத்து கணிப்பு அல்லது சொந்த கட்சிக்குள் நடத்தப்பட்ட சர்வேக்களின் முடிவுகள் காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
மாஸாக வெளியேறும் 2-ம் கட்ட தலைவர்கள்: இன்னொன்றையும் பாஜக கவனித்திருக்கலாம் அல்லது பாஜக அந்த மாஸ் முடிவுகளை கண்டு அச்சமடைந்திருக்கலாம். பாஜக டெல்லி மேலிடத்தின் "திணிப்பு" நடவடிக்கைகள் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இரண்டாம் நிலை தலைவர்கள் பலரையும் 'கட்சி' தாவ வைத்திருக்கிறது அல்லது கட்சியை விட்டே ஓடவைத்திருக்கிறது. இது பாஜவுக்கு பேரச்சத்தையும் அதிர்ச்சியையும் தந்திருக்கவும் கூடும் எனவும் கூறப்படுகிறது.
டிஜிட்டல் இந்தியா திட்டமா?: சட்டசபை தேர்தல்கள் என்பது மாநிலங்களின் மக்களின் உணர்வுகளுடன் நெருங்கிய உறவைக் கொண்டது; மாநில பிரச்சனைகளுடன் இணைந்த ஒன்றை, ஆனால் ஏதோ டிஜிட்டல் இந்தியா திட்டம் போல மேதாவித்தனமாக போக்கை பாஜக மேலிடம் கையாண்டதன் விளைவு இப்போதும் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் பெரும் குழப்பங்களுக்கு நங்கூரம் பாய்ச்சி விட்டிருக்கிறது என்பதும் மிகையல்ல என்கின்றனர அரசியல் பார்வையாளர்கள்
நெகட்டிவ் ரிசல்ட்டுகள்: ஏற்கனவே 2 அல்லது 3 முறை ராஜ்யசபா எம்பியாக இருப்பவர்கள் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டாக வேண்டும் என ஒரு வியூகத்தை கையில் வைத்திருக்கிறது பாஜக. லோக்சபா தேர்தலுக்கான இந்த வியூகமே எப்படி ஒர்க் அவுட் ஆகப் போகிறது என்பது தெரியவில்லை. இந்தியா கூட்டணியின் விஸ்வரூபம் அல்லது உட்கட்சியினர் எடுத்த சர்வே முடிவுகள், 5 மாநிலங்களில் இயல்பாகவே தெலுங்கானா, மிசோரவில் பாஜக சீனில் இல்லை; எஞ்சிய சத்தீஸ்கரில் ஆட்சி அமைக்க சாத்தியமில்லை; ராஜஸ்தானில் மட்டும்தான் காங்கிரஸை வீழ்த்த முடியும்; மபியிலும் ஆட்சியை இழக்கும் நிலை என்பதான 'நெகட்டிவ்' ரிசல்ட்டுகளோ பாஜக மேலிடத்தை "நிலைதடுமாற' வைத்து ஒட்டுமொத்த கட்சியையும் மாநிலங்களிலும் காலி செய்து கொண்டிருக்கிறது என்பதை தாமதாகவேனும் பாஜக மேலிடம் புரிந்து கொண்டிருந்தாலும் பாதிப்பு கனமானதுதான் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications