குஜராத், மகாராஷ்டிராவில் இந்தி திணிப்பின் கோர முகம்! தென்னிந்தியாவுக்கு பேராபத்து- அதிர்ச்சி Data
டெல்லி: இந்தி பேசாத தென்னிந்திய மாநிலங்களில் தாய்மொழியைத் தொடர்ந்து 2-வது மொழியாக ஆங்கிலம் பேசுகிறவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது; ஆனால் இந்தி பேசாத மேற்கு, கிழக்கு மாநிலங்களில் இந்தி திணிப்பால் தாய்மொழியைவிட இந்தி மொழி பேசுகிறவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டே இருப்பதாக அதிர்ச்சி தரும் புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன.
1991 மற்றும் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தி பேசாத பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், புதிய மொழிகளை கற்பதில் ஆர்வமாக உள்ளனர். ஆனால் பல மொழிகளைக் கற்றுக் கொள்வதில் இந்தி பேசும் மாநில மக்களுக்கு ஆர்வம் மிக குறைவாக இருக்கிறது.

இருமொழி பேசுவோர் எண்ணிக்கை என்ன?
உதாரணமாக 1991-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் இரு மொழிகளைப் பேசுகிற தமிழர்கள் எண்ணிக்கை 84.%; இது 2011-ல் சற்று குறைந்து 78% ஆக இருக்கிறது. இதேபோல ஒடிஷா மாநிலத்தில்
ஒடியாவை தாய்மொழியாகக் கொண்டவர்களில் இரு மொழி பேசுவோர்கள் எண்ணிக்கை 1991-ல் 86% ஆகவும் 2011-ல் 74.5% ஆகவும் குறைந்துள்ளது
இந்தி பேசாத மகாராஷ்டிரா (மராத்தி), பஞ்சாப் (பஞ்சாபி), குஜராத் (குஜராத்தி), ஆந்திரா (தெலுங்கு) மாநில மக்களும் படிப்படியாக இருமொழி கொள்கைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்தி ஒற்றை மொழியை பிடித்து தொங்கும் இந்தி பெல்ட் மாநிலங்கள்
சரி.. இந்தி பேசுகிற மாநிலங்களின் நிலைமை என்ன? 1991-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒருங்கிணைந்த- அதாவது தனி மாநிலங்களாகப் பிரிக்கப்படாத பீகார் மாநிலத்தில் இந்தி என்கிற ஒரே ஒரு மொழியை மட்டும் பேசுகிறவர்கள் எண்ணிக்கை 90.2%. 2011-ம் ஆண்டு பீகார் மாநில பிரிவினைக்குப் பின்னரும் இது 95.2% ஆக அதிகரித்திருப்பது அப்பட்டமான உண்மை; இந்தி பேசாத மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் அதி உச்சமான முரண் இது.
ராஜஸ்தானிலும் இதே நிலைமைதான். இந்தி பேசுகிறவர்கள், இந்தி மொழியை மட்டுமே பேசக் கூடியவர்களாக 1991-ல்; 93% ஆகவும் 2011-ல் 94.3% ஆகவும் உள்ளனர். இதே நிலைமைதான் இந்தி பேசக் கூடிய உத்தரப்பிரதேசம், இமாச்சல பிரதேச மாநிலங்களிலும் காணப்படுகின்றனர்.
இந்த தரவுகள் சொல்ல வருவது என்னவெனில், இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், புதிய மொழிகளைக் கற்பதில் பேரார்வத்துடன் இருக்கின்றனர்; இந்தி பேசுகிற மாநில மக்கள் இத்தகைய ஆர்வமற்றவர்களாகவே இருக்கின்றனர் என்பதுதான்.
இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலத்தின் நிலைமை என்ன?
1991-ம் ஆண்டு தமிழ்நாடு மக்கள் தொகையில் தமிழைப் பேசக் கூடிய தமிழர்களில் 13.5% பேர் ஆங்கிலத்தையும் பேசக் கூடியவர்கள்; இது 2011-ல் 18.5% ஆகவும் அதிகரித்திருக்கிறது. ஆனால் இந்தி பேசுகிற ஹரியானா மாநிலத்தில் 1991-ல் ஆங்கிலம் பேசக் கூடியவர்கள் எண்ணிக்கை 17.5% ஆக இருந்தது; இது 2011-ல் 14.6% ஆகவும் குறைந்து போய்விட்டது. இந்தி பேசுகிற மாநிலங்களில் பொதுவாக ஆங்கில மொழித்திறன் குறைவாகவே இருந்து வருகிறது. ஆனால் இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கில மொழித்திறன் பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.
இந்தி திணிப்பின் கோரத்தாண்டவம் இதுதான்!
1991-ம் ஆண்டு மக்கள் தொகையில் தமிழ்நாட்டில் வெறும் 0.5% பேர்தான் இந்தி மொழி பேசக் கூடியவர்கள்; இது 2011-ல் 1.3% ஆக அதிகரித்தது. கர்நாடகாவில் கன்னட மொழியை பேசக் கூடிய கன்னடர்களில் இந்தி மொழியை பேசுகிறவர்கள் எண்ணிக்கை 1991, 2011-ல் சராசரியாக 8.5% ஆக உள்ளது.
இதற்கு முரணாக, குஜராத்தி மொழி பேசக் கூடியவர்களில் இந்தி மொழி பேசுகிறவர்கள் எண்ணிக்கை 1991-ல் 21.6% ஆகவும் 2011-ல் 39% ஆகவும் அதிகரித்திருக்கிறது; மகாராஷ்டிராவிலும் மராத்தி மொழி பேசக் கூடியவர்களில் இந்தி மொழி பேசுகிறவர்கள் எண்ணிக்கை 35.7-ல் இருந்து 43.5% ஆக அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்தி பேசாத தென்னிந்திய மாநிலங்களில் ஆங்கிலம் பேசுகிறவர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் இந்தி பேசாத மேற்கு, கிழக்கு மாநிலங்களில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை அதிகமாகவும் உயர்ந்து வருவது கவனத்துக்குரியது. இந்தி மொழித் திணிப்பின் நடவடிக்கையால் இப்படியான பேராபத்து தென்னிந்திய மாநிலங்களையும் சூழ்ந்து நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications