விஸ்வரூபம் எடுக்கும் புல்லி பாய் செயலி.. பின்னணியில் விஐபிக்கள்?..நீரஜ் பிஷ்னோய் தற்கொலைக்கு முயற்சி
டெல்லி: புல்லி பாய் செயலியை உருவாக்கிய நீரஜ் பிஷ்னோயிடம் போலீஸார் விசாரணை நடத்திய போது இரு முறை தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
புல்லி பாய் எனும் செயலியில் பெண் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், முஸ்லீம் பெண் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோரின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, அவர்களை ஏலம் விடுவதாக அந்த செயலியில் கடந்த 1ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்த நிலையில் இந்த செயலி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

10 மணி நேரம் விசாரணை
இந்த புல்லி பாய் செயலியின் பின்னணியில் பெங்களூருவை சேர்ந்த பொறியியல் மாணவர் விஷால் ஜா என்பவர் இருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து பெங்களூர் விரைந்த மும்பை போலீஸார் விஷால் ஜாவை கைது செய்தனர். அவரிடம் 10 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினார்.

யார் இந்த விஷால் ஜா
இதில் விஷால் ஜா இந்துத்துவா ஆதரவாளர் என தெரியவந்தது. தன்னுடன் அரசியல் ரீதியாக முரணுள்ள பெண்களை ஏலம் விடுவதாக அறிவித்ததை ஒப்புக் கொண்டார். இந்த செயலியை தொடங்குவதற்கு மாஸ்டர் மைண்டாக இருந்த மேலும் இருவரை மும்பை இணைய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

18 வயது பெண்ணும் கைது
அவர்களில் ஒருவர் 18 வயது இளம்பெண், இவர் உத்தரகண்ட் மாநிலத்தின் உதம் சிங் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என சொல்லப்படுகிறது. இந்த வழக்கில் மூன்றாவது நபராக உத்தரகண்டை சேர்ந்த 21 வயது மாணவர் மயங்க் ராவல் கைது செய்யப்பட்டார். நேபாளத்தை சேர்ந்த அவரின் நண்பர் ஒருவர் கொடுத்த அறிவுறுத்தலின் பெயரில் இதை செய்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அந்த நேபாள நண்பர் கியூ என அழைக்கப்படுகிறாராம். அவரை பிடிக்க தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றன.

21 வயது இளைஞர்
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இந்த செயலியை உருவாக்கி 21 வயது நீரஜ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டார். அஸ்ஸாமில் பதுங்கியிருந்த இவரை டெல்லி சிறப்பு படை போலீஸார் கைது செய்தனர். இவருடன் சேர்த்து இதுவரை இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். நீரஜ் தனது சிறு வயது முதலே தனிமையை விரும்புவார் என அவரது பெற்றோர் தெரிவிக்கிறார்கள். நீரஜுக்கு நிறைய நண்பர்களும் கிடையாது. அஸ்ஸாம் அரசு கொடுத்த இலவச லேப்டாப்புடன்தான் எப்போதும் இருப்பாராம். கடந்த 15-ஆவது வயது முதல் நீரஜ், பல்வேறு இணையதளங்களை ஹேக் செய்துள்ளார்.

தற்கொலைக்கு முயன்ற நீரஜ்
இவர் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள பல பள்ளிகள், பல்கலைக்கழகங்களின் இணையதளங்களை ஹேக் செய்துள்ளார். இந்த நிலையில் நீரஜுடம் டெல்லி சிறப்பு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதில் தனக்கு நிறைய ட்விட்டர் கணக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அது போல் மும்பை போலீஸாரால் கைது செய்யப்பட்ட நபர்களுடன் தனக்கு தொடர்பிருப்பதையும் அவர் ஒப்புக் கொண்டார். இந்த நிலையில் டெல்லி போலீஸ் காவலில் உள்ள நீரஜ் இரு முறை தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கைகளில் நரம்பை அறுத்துக் கொண்டும் தூக்கில் தொங்க முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்குள்படுத்தப்பட்ட நீரஜ் தற்போது நலமுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த புல்லி பாய் செயலியில் முக்கிய பிரமுகர்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர்களை அடையாளம் கூறிவிடக் கூடாது என்பதற்காக நீரஜ் தற்கொலைக்கு முயற்சிக்கிறாரா இல்லை தன்னால் பெற்றோருக்கு நேர்ந்த அவமானத்தால் இப்படி செய்தாரா என தெரியவில்லை. போலீஸார் அவரது பாதுகாப்பு உறுதி செய்வதில் தீவிரமாக உள்ளதாக தகவல்கள் தெரிகிறது.












Click it and Unblock the Notifications