பஸ் ஓட்டும் போதே ஜெகஜால வேலை பார்த்த அரசு பஸ் டிரைவர்.. கையும் களவுமாக சிக்கி ஒரே அசிங்கமா போச்சு
டெல்லி: அரசு பேருந்தில் பயணி ஒருவரின் பையில் இருந்த நகைகளை டிரைவர் திருட முயற்சித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. ஒரு கையில் ஸ்டியரிங்கை பிடித்த படி, மற்றொரு கையால் பயணியின் பையில் இருக்கும் நகையை நைசாக திருட முயன்ற டிரைவரின் தில்லாலங்கடி செயலை பயணிகள் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். இந்த சம்பவம் எங்கு நடைபெற்றது? என்பது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பேருந்துகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளிடம் நகை, பொருட்கள் திருடும் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதை கேள்வி பட்டு இருப்போம். பயணியுடன் பயணியாக ஏறி கூட்டத்தை பயன்படுத்தி அசந்த நேரத்தில் பயணிகளிடம் திருடிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.

ஜெகஜால டிரைவர்: சில நேரங்களில் திருடும் போது கையும் களவுமாக மாட்டிக்கொண்டு, பின்னர் பயணிகள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசிடம் ஒப்படைப்பார்கள். இது போன்ற நிகழ்வுகள் பஸ்கள் மட்டும் இன்றி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூட அடிக்கடி நடக்கும் ஒன்றுதான். ஆனால், பேருந்து டிரைவர் ஒருவரே, அதுவும் பஸ்சை ஓட்டிக்கொண்டே பயணியின் பையில் இருந்த தங்க நகையை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்தை ஓட்டிக்கொண்டே டிரைவர் ஒருவர், பயணி வைத்திருந்த பையில் இருந்து தங்க நகையை திருடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பயணிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
பயணியின் பை: தெலுங்கான மாநிலம் நிசாமாபாத்திற்கு அம்மாநில அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. வாரங்கல்லில் இருந்து புறப்பட்ட இந்த பேருந்தை தற்காலிக டிரைவர் ஓட்டிச்சென்றுள்ளார். டிரைவரின் இருக்கை அருகே பயணி ஒருவர் தனது பையை வைத்துள்ளார். டிரைவருக்கு அருகே வைத்தால் பாதுகாப்பாக இருக்கும் என நம்பி அந்த டிரைவர் பையை வைத்ததாக தெரிகிறது.
செல்போனில் பதிவு: பேருந்தை ஓட்டிக்கொண்டு இருந்த டிரைவர் பையில் நகை இருந்ததை கவனித்துள்ளார். யாருக்கும் தெரியாமல் திருட நினைத்த டிரைவர் வண்டியை ஓட்டும் போதே ஒரு கையால் மெதுவாக பையில் இருந்த நகையை எடுக்க முயற்சித்தார். இதைக் கவனித்த பயணி ஒருவர் தனது செல்போனில் இந்தக் காட்சிகளை படம் பிடித்தார். உடனடியாக டிரைவரை கையும் களவுமாக பிடித்தனர்.
A Private Bus driver caught stealing gold from a passenger's bag in Nizamabad.
— Mohammed Baleegh (@MohammedBaleeg2) November 13, 2024
As passengers recorded the act, the driver claimed the gold fell off; he later admitted Taking it out of the bag. #Telangana #TGSRTC #Nizamabad #Goldtheft pic.twitter.com/lXugBIklLS
கையும் களவுமாக சிக்கினார்: அப்போது, பையில் இருந்து கீழே விழுந்த பொருளை எடுத்து உள்ளே வைக்க முயன்றதாகவும் எதையும் எடுக்கவில்லை எனக்கூறி சமாளிக்க பார்த்தார். பயணிகள் வீடியாவை காட்டி சிறைபிடித்த நிலையில், உண்மையை அந்த டிரைவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, தெலுங்கானா மாநில அரசு போக்குவரத்து கழகத்திடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
இணையத்தில் பரவிய வீடியோ: இதையடுத்து புகாருக்கு உள்ளான டிரைவரை உடனடியாக டிஸ்மிஸ் செய்து இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த நிலையில் இந்த வீடியோவை பயணிகள் சமூக வலைத்தளங்களில் பரப்பினர். பஸ்சை ஓட்டிக்கொண்டே அந்த டிரைவர் நகையை திருடும் வீடியோவானது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில், ஒருகையில் ஸ்டியரிங்கை பிடித்துக்கொண்டும், மறு கையில் அருகில் இருந்த பயணியின் பையில் இருந்து நகையை திருடுவது போன்றும், பின்னர் பயணிகள் அந்த டிரைவரை பிடித்து கேள்வி கேட்பது போன்று வீடியோவில் பதிவாகியிருந்தது.












Click it and Unblock the Notifications