மவுசு குறையாத மோடி! மீண்டும் பிரதமராக 49% பேர் ஆதரவு! ராகுலுக்கு சறுக்கல்! பரபர கருத்து கணிப்பு
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பாஜக 9 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி தான் வேண்டும் என அதிகமானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக சி வோட்டர் கருத்து கணிப்பு முடிவு தெரிவித்துள்ளது. இந்த கருத்து கணிப்பில் ராகுல் காந்தி பின்தங்கி உள்ளார்.
இந்தியாவில் கடந்த 2014ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடித்தது. இதன்மூலம் கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் நடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்தது.

இதையடுத்து 2014ல் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்று 5 ஆண்டு நிறைவு செய்தார். அதன்பிறகு 2019 ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றது. இதையடுத்து மத்தியில் 2வது முறையாக பாஜக ஆட்சியை பிடித்தது. மீண்டும் பிரதமராக மோடி பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.
கடந்த 2014 முதல் தற்போது வரை மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 9 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது. இன்னும் ஓராண்டு ஆட்சி பாக்கி உள்ளது. இதையடுத்து அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு தற்போது இருந்தே பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக உள்பட பிற மாநிலங்களில் செயல்படும் மாநில கட்சிகளும் பணிகளை தொடங்கிவிட்டன.
மத்தியில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சி மாபெரும் கூட்டணியை அமைக்க திட்டமிட்டு வருகிறது. ஆனால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலங்கனாா முதல்வர் சந்திரசேகரராவ் உள்ளிட்டவர்கள் பிடி கொடுக்காமல் விலகி வருகின்றர். இவர்கள் தனியாக பாஜக, காங்கிரஸ் இல்லாத புதிய அணியை உருவாக்க முயன்று வருகின்றனர்.
இந்நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தலையொட்டி சிவோட்டர் சார்பில் புதிய கருத்து கணிப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதாவது அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் யார் பிரதமராக வரவேண்டும்? என ஏபிபி செய்தி நிறுவனம் மற்றும் சி வோட்டர் இணைந்து நாடு முழுவதும் கருத்து கணிப்பு நடத்தியது. இந்த கருத்து கணிப்பின் முடிவு தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி கருத்து கணிப்பில் பங்கேற்றவர்களில் 49 சதவீதம் பேர் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில் ராகுல் காந்தி பின்தங்கி உள்ளார். அதாவது 18 சதவீதம் பேர் ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்கள் 2 பேர் தவிர உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு 6 சதவீதம் பேரும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 சதவீதம் பேரும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 2 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் மத்தியில் 9 ஆண்டுகளாக நரேந்திர மோடி பிரதமராக செயல்பட்டாலும் கூட இன்னும் மக்கள் மத்தியில் அவர் செல்வாக்குடன் உள்ளார். அவரது புகழ் இன்னும் மங்கவில்லை என்பது இந்த கருத்து கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த கருத்து கணிப்பு பாஜகவுக்கு உற்சாகம் கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications