ஓவர் வேலையால் உயிரிழந்த கேரள பெண்.. சக ஊழியர்கள் இறுதி சடங்கிற்கு எட்டி கூட பார்க்கவில்லையாம்
டெல்லி: இந்திய நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்த சி.ஏ தேர்வு பாஸ் செய்த ஒரு இளம்பெண், வெறும் நான்கே மாதங்களில் அதீத வேலையால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதில் கொடுமை என்னவென்றால் அந்த பெண் வேலை செய்த நிறுவனத்தில் இருந்து ஒருவர் கூட இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ளவில்லையாம்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த பெண், வெறும் 4 மாதங்களில் உயிரிழந்துள்ளார். ஓவர் வேலை காரணமாகவே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடிதம்: இது தொடர்பாக உயிரிழந்த பெண் அன்னா செபாஸ்டியன் பேராயிலின் தாயார் அனிதா அகஸ்டின் எழுதிய கடிதத்தில், "எனது மகள் இறந்த செய்தியைக் கேட்டு இதயம் நொறுங்கிவிட்டது. ஆனால் வேறு எந்த குடும்பமும் இந்த துயரத்திற்கு ஆளாகக்கூடாது என்பதாகவே இந்த கடிதத்தை எழுதுகிறேன். கடந்த ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி அண்ணா தனது சி.ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து அவர் மார்ச் 19ஆம் தேதி உங்கள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இதுதான் அவரது முதல் வேலை.
ஆனால் வேலைக்குச் சேர்ந்த நான்கு மாதங்களில் அவர் இறந்துவிட்டதாகச் சொன்னார்கள். அவருக்கு வயது வெறும் 26. இது உயிரிழக்கும் வயதா.. அன்னாவை கல்வியில் சிறந்து விளங்கினார். பள்ளி மற்றும் கல்லூரிகளில் முதலிடம் பெற்ற அவர் சி.ஏ. தேர்விலும் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார்.
அதீத வேலை: புனேவில் உள்ள உங்கள் நிறுவனத்தில் அந்த குறிப்பிட்ட டீமில் அதீத வேலை அழுத்தம் காரணமாகப் பலர் ராஜினாமா செய்துள்ளனர். அவர் முடிந்த வரை வேலை செய்தார். இருப்பினும், பணிச்சுமை, புதிய சூழல் மற்றும் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஆகியவை அவளை மன ரீதியாகப் பாதித்தது. கவலை, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் ஏற்படத் தொடங்கியது. இருப்பினும், அவர் தொடர்ந்து தன்னால் முடிந்ததைச் செய்தாள்.
கடந்த ஜூலை 6 மாதம் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள நாங்களும் சென்றோம். அப்போது அவருக்கு நெஞ்சு வலி தொடர்ந்து இருப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து நாங்கள் புனேவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அவர் சரியான நேரத்திற்குச் சாப்பிடுவது இல்லை.. போதுமான அளவு தூங்குவதில்லை என மருத்துவர்கள் கூறினர். இதனால் தூக்க மாத்திரையையும் கொடுத்தனர்.
அனைவருக்கும் தெரியும்: இருப்பினும், நாங்கள் கொச்சியில் இருந்து வந்திருந்ததால் உடனடியாக திரும்ப வேண்டி இருந்தது. அதுதான் நாங்கள் எங்கள் மகளுடன் செலவிட்ட கடைசி நாட்கள்.. இருப்பினும், அதுவும் கூட மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இல்லை. அவல் வீட்டிலிருந்து வேலை செய்தாள்.. இதனால் பட்டமளிப்பு விழாவுக்குக் கூட தாமதமாகவே செல்ல வேண்டி இருந்தது. அந்தளவுக்கு வேலை அழுத்தம் அதிகமாக இருந்தது. அவர் வேலை செய்த குறிப்பிட்ட டீமில் வேலை அழுத்தம் ஓவராக இருக்கும். இது அங்கிருந்த அனைவருக்குமே தெரியும். ஆனாலும், யாரும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆபீஸ் வேலைகளைத் தாண்டியும் பல வேலைகளை வாய்மொழியாகக் கொடுத்துள்ளார் அவரது மேனேஜர்.. அதைச் செய்ய மறுத்தாலும் மேனேஜர் அழுத்தம் கொடுத்துள்ளார். இதனால் ஒவ்வொரு நாளும், வார இறுதி நாட்களில் கூட, வேலை செய்ய வேண்டி இருந்துள்ளது. ஒரு முறை திடீரென நள்ளிரவில் போன் செய்து காலைக்குள் ஒரு ரிப்போர்ட் தேவை எனச் சொல்லியுள்ளார்கள். இதனால் இரவு முழுக்க அவர் தூங்காமல் வேலை செய்து கொடுத்துள்ளார். இது ஏதோ ஒரு முறை மட்டும் நடந்த நிகழ்வு இல்லை. எப்போதும் இதேபோலத் தான் இருக்கும்.
உடை மாற்றக் கூட முடியாது: ஒவ்வொரு நாளும் அவர் சோர்வுடன் தான் ரூமுக்கு வருவார். உடைகளை மாற்றக் கூட தெம்பு இல்லாமல் மயங்கிவிடுவார். இவ்வளவு வேலை இருந்ததால் நாங்கள் வேலையை ராஜினாமா செய்யச் சொன்னோம். ஆனால், எனது மகள் விடாப்பிடியாக இருந்தார். இதன் மூலம் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்றார். இதுவே அவரது உயிரைப் பறித்துவிட்டது.
எனது மகள் தனது மேனேஜர் குறித்து எப்போதும் குறை சொன்னதே இல்லை.. ஆனால், ஆனால் என்னால் அமைதியாக இருக்க முடியாது. இதுபோல எல்லா நாளும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட இரவும் பகலும் வேலை செய்ய வைப்பது எந்த நியாயமும் இல்லை... இதை ஏற்கவே முடியாது. அங்கு ஓர்க் கல்சர் எந்தளவுக்கு மோசமாக இருந்தது என்பதையே இது காட்டுகிறது. ஊழியர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டியது நிறுவனத்தின் பொறுப்பு அதை இந்த நிறுவனம் செய்யத் தவறிவிட்டதாகவே தெரிகிறது.
ஒருவரும் வரவில்லை: இதில் கொடுமை என்னவென்றால் எந்த நிறுவனத்திற்காக அவர் இவ்வளவு தூரம் உழைத்தாரோ அந்த நிறுவனத்தில் இருந்து ஒருவர் கூட இறுதிச்சடங்கிற்கு வரவில்லை. இது எங்களை மிகவும் புண்படுத்தியது. தங்களுடன் வேலை செய்யும் பெண் ஒருவர் உயிரிழந்தது கூட அவர்களுக்குக் கவலையைத் தரவில்லை என்பதையே இது காட்டுகிறது. இறுதிச் சடங்கிற்குப் பிறகு நாங்கள் அவரது மேனேஜரை தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால், அதற்குக் கூட அவர் பதிலளிக்கவில்லை.
அங்கு யாரும் ஒரு தாயின் உணர்வுகளைப் புரிந்து கொள்வார்கள் என எனக்குத் தோன்றவில்லை. எனது மகள் போய்விட்டாள்.. இனி என்ன நடந்தாலும் அவரை உயிருடன் கொண்டு வர முடியாது என்பது தெரியும். ஆனால், அவருக்கு நடந்தது மீண்டும் யாருக்கும் நடக்கவே கூடாது என்பதற்காகவே இதை நான் பொதுவெளியில் பகிர்கிறேன். வேறு எந்தவொரு அம்மாவுக்கும் எனக்கு ஏற்பட்ட நிலை ஏற்பட்டுவிடக்கூடாது" என்று கூறியுள்ளார்.
விளக்கம்: அன்னாவின் தாயாரின் இந்த கடிதம் இணையத்தில் டிரெண்டானது. பலரும் குறிப்பிட்ட அந்த நிறுவனத்தைக் கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து அந்த நிறுவனம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. அன்னாவின் இழப்பிற்கு வருந்துவதாகத் தெரிவித்த அந்த நிறுவனம், அன்னாவின் தாயார் கூறிய கருத்துகளை மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டு விசாரித்து தேவையான நடவடிக்கை எடுப்போம் எனக் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications