செக்யூரிட்டி! இவரை வெளியேற்றுங்க.. நீட் விசாரணையின் போது.. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கோபம்
டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் இன்று நீட் தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, வாதத்தின் போது குறுக்கிட்ட வழக்கறிஞர் ஒருவரை தலைமை நீதிபதி கடிந்து கொண்டார். பாதுகாவலரை அழைத்து இவரை உடனே வெளியேற்றுங்கள் என தலைமை நீதிபதி காட்டமாக கூறினார்.
உச்ச நீதிமன்றத்தில் இன்று நீட் வழக்குகள் மீதான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் தொடர்ந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் நரேந்திர் ஹூடா வாதாடிக் கொண்டு இருந்தார். அப்போது, வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பரா வாதத்திற்கு இடையூறு செய்தார்.

மேத்யூஸ் நெடும்பரா: அவரும் நீட் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மனுதாரர் ஒருவருக்காக ஆஜராகியிருந்தார். நீட் வழக்கில் காரசாரமாக ஹூடா வாதாடிக்கொண்டு இருக்கும் போது நான் ஒன்றை சொல்ல வேண்டியுள்ளது என நெடும்பரா கூறினார். இதனைப் பார்த்த உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட், ஹூடாவின் வாதம் முடிந்த பிறகு உங்கள் கருத்தை தெரிவியுங்கள் என்றார்.
இவரை வெளியேற்றுங்கள்: ஆனால், இதை ஏற்க மறுத்த நெடும்பரா, நான் தான் இங்கு மூத்த வழக்கறிஞர் என்றார். அவர் இப்படி சொன்னதும் தலைமை நீதிபதி கோபம் அடைந்தார். தலைமை நீதிபதி கூறுகையில், "உங்களை நான் எச்சரிக்கிக்றேன். நீங்கள் கேலரியில் இருந்து பேசவில்லை. இந்த நீதிமன்றத்திற்கு நான் தான் பொறுப்பு. பாதுகாவலரை கூப்பிடுங்கள்.. இவரை வெளியேற்றுங்கள்" என்று கோபத்துடன் கூறினார். உடனே வழக்கறிஞர் நெடும்பராவும், 'நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.. கிளம்புகிறேன்' எனக் கூறினார்.
இப்படியே நடந்துகொண்டால்: உடனே குறுக்கிட்ட தலைமை நீதிபதி, "இதை நீங்கள் சொல்ல தேவையில்லை. நீங்கள் கிளம்பலாம். கடந்த 24 ஆண்டுகளாக நான் நீதித்துறையை பார்த்து வருகிறேன். வழக்கறிஞர்கள் அதிகார தோரணையில் பேச அனுமதிக்க மாட்டேன்" என்றார். உடனே குறுக்கிட்ட நெடும்பரா, 'நான் 1979 முதல் இதை பார்த்து வருகிறேன்' என்றார். இதையடுத்து, வழக்கறிஞர் நெடும்பராவை எச்சரித்த தலைமை நீதிபதி, 'நெடும்பரா இப்படியே நடந்து கொண்டால் நான் உத்தரவிட நேரிடும்' எனக் கோபத்துடன் கூறினார்.
இது முதல் முறை அல்ல: அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேதாவும், நெடும்பராவின் செயல் அவமதிப்பு என்று கூறினார். வழக்கறிஞர் நெடும்பராவின் இந்த செயல்பாடுகளால் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கறிஞர் நெடும்பரா இப்படி நடந்து கொள்வது இது முதல் முறையல்ல. தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்த போதும், விசாரணையின் போது நெடும்பரா குறுக்கிட்டார்.
3 மாதங்கள் சிறை: தலைமை நீதிபதி எச்சரித்தும் வழக்கறிஞர் நெடும்பரா குறுக்கிட்டார். இதனால், அதிருப்தி அடைந்த நீதிபதி, சத்தம் போட வேண்டாம்.. இது ஒன்றும் திறந்தவெளி கூட்டம் இல்லை. நீங்கள் நீதிமன்றத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் மனு செய்ய விரும்பினால் அதனை தாக்கல் செய்யுங்கள். அதுதான் விதிமுறை" என்றார். அதேபோல கடந்த 2019 ஆம் ஆண்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 3 மாதங்கள் சிறை தண்டனையும் நெடும்பராவிற்கு எதிராக விதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications