இந்தியை விடுங்க.. CBSE பள்ளிகளில் உள்ளே வரும் சமஸ்கிருதம்.. மொழி கொள்கையால் வரும் முக்கிய மாற்றம்
டெல்லி: சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகளில் 2026-27 கல்வியாண்டு முதல் மும்மொழி கொள்கை அமலுக்கு வருகிறது. ஏற்கனவே புதுச்சேரி உள்ளிட்ட சில இடங்களில் இதற்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையே இந்த மும்மொழி கொள்கை ரூல்ஸ் காரணமாகச் சமஸ்கிருத மொழிக்கு அதிக முக்கியத்துவம் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்தியக் கல்வித் துறையில் அவ்வப்போது மாற்றங்கள் நடப்பது வழக்கம் தான். இருப்பினும், அது குறிப்பிட்ட மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் போது அது விவாதமாகும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. சிபிஎஸ்இ கொண்டு வந்துள்ள 2026-27 திருத்தப்பட்ட பாடத்திட்டக் கட்டமைப்பு, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒரு புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

மும்மொழி கொள்கை
குறிப்பாக, ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் பல பள்ளிகளின் தேர்வாகச் சமஸ்கிருதம் மாறியிருப்பதுதான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அதாவது நம்ம ஊரில் பெரும்பாலான சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆங்கிலம்- தமிழ் - இந்தி ஆகியவை தேர்வாக உள்ள நிலையில், பெரும்பாலான வட மாநிலங்களில் ஆங்கிலம்- இந்தி- சமஸ்கிருதம் என நிலைமை மாறியுள்ளது.
ஏன் சமஸ்கிருதம்?
பல்வேறு மொழிகள் இருந்தாலும், பெரும்பாலான ஆங்கில வழி சிபிஎஸ்இ பள்ளிகள் சமஸ்கிருதத்தையே மூன்றாவது மொழியாகத் தேர்வு செய்கின்றன. இதற்குப் பின்னால் மொழியியல் காரணங்களை விட, நிர்வாக வசதி என்ற காரணமே முக்கியமாக இருக்கிறது.
பல பள்ளிகளில் ஏற்கனவே 6 முதல் 8-ம் வகுப்பு வரை சமஸ்கிருதம் ஒரு பாடமாக இருந்துள்ளது. அதாவது கட்டாயம் இல்லை என்றாலும் அதை ஒரு ஆப்ஷனாக வைத்திருந்தனர். இப்போது 3வது மொழி கட்டாயம் என வந்தவுடன் சமஸ்கிருதமே அவர்கள் முதல் தேர்வாக இருக்கிறது. இதனால், புதிய ஆசிரியர்களை வேலைக்கு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
சிக்கல் இல்லை
தமிழ், பெங்காலி, மராத்தி அல்லது பஞ்சாபி போன்ற மொழிகளைக் கற்பிக்கப் புதிய ஆசிரியர்களைத் தேடிப் பிடிப்பது பள்ளிகளுக்குப் பெரிய தலைவலியாக இருக்கிறது. ஆனால், இந்தி ஆசிரியர்களே சமஸ்கிருதத்தையும் கையாள முடிவதால், பள்ளிகளுக்கு இது லாபகரமான முடிவாகிவிட்டது. என்சிஇஆர்டியின் 'தீபகம்' போன்ற பாடப்புத்தகங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் இருப்பதால், புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதில் சிரமம் இல்லை.
இதுவரை சிபிஎஸ்இ பள்ளிகளில் பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் போன்ற மொழிகள் அதிகம் படிக்கப்பட்டு வந்தன. ஆனால், புதிய விதிகளின்படி இவை பாடத்திட்டத்தின் பிரதானப் பகுதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதனால் இனி இந்த வெளிநாட்டு மொழிகள் கூடுதல் பாடங்களாக மட்டுமே இருக்கும். அதாவது, அந்த மொழிகளுக்குத் தனி கிளாஸ்கள் அல்லது மதிப்பெண்கள் பழைய அளவுக்கு இருக்காது. சர்வதேச வேலைவாய்ப்புகளுக்காகத் தங்கள் பிள்ளைகளைத் தயார் செய்ய நினைத்த பெற்றோருக்கு இது ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
குழப்பம்
இந்தத் திடீர் மாற்றம் மாணவர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுப்பியுள்ளது.. சிலர் சமஸ்கிருதத்தை ஏற்றாலும் கூட பலரும், "இதுவரை விருப்பப் பாடமாக இருந்த ஒன்று இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது சற்று குழப்பத்தைத் தருகிறது" என்கிறார்கள் சில மாணவர்கள். "புதிய மொழிகளைக் கற்பது நல்லதுதான். ஆனால், மாணவர்களுக்குத் தேவையான மொழியாக இருந்தால் நல்லது" என்பதே பெற்றோர்களின் முக்கிய கவலையாக இருக்கிறது.
இந்தக் கொள்கை உடனடியாக அமலுக்கு வரும் நிலையில், இதில் ஒரு மிகப் பெரிய சிக்கல் இருக்கவே செய்கிறது. அதாவது பெரிய தனியார் பள்ளிகள் தங்களிடம் உள்ள வசதிகளை வைத்து டைம் டேபிளை மாற்றியமைத்துச் சமாளித்துவிடுகின்றன. ஆனால், போதிய நிதி வசதி இல்லாத பள்ளிகள் ஆசிரியர்களை நியமிக்க முடியாமல் திணறி வருகின்றன.
பன்மொழி அறிவு என்பது ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு மிக அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்தத் தேர்வு மாணவர்களின் விருப்பத்தைச் சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர, பள்ளிகளின் நிர்வாக வசதிக்காக இருக்கக் கூடாது.












Click it and Unblock the Notifications