அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு! 3 மாத அரியர்ஸ் கூட சேர்ந்து கிடைக்குமாம்!
டெல்லி: நீண்ட நாட்களாகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அரசு இன்று அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும்.. பொதுவாக ஆண்டின் முதல் அகவிலைப்படி குறித்த அறிவிப்பு மார்ச் மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும்.. ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாதிக்கு மேல் ஆகியும் அறிவிப்பு வெளியாகாததால் அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர்.

அகவிலைப்படி உயர்வு!
இந்தச் சூழலில் தான் இன்று (ஏப்ரல் 18) கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 2% அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான இந்த அகவிலைப்படி உயர்வு வந்துள்ளது. அதாவது ஒட்டுமொத்த அகவிலைப்படி தற்போதுள்ள 58 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அரியர்ஸ் கிடைக்கும்
இந்த 2% உயர்வு, ஜனவரி 1, 2026 முதல் முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி 1ம் தேதி முதலான சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களுக்கும் சேர்த்தே இவை வழங்கப்படுமாம். இதன் மூலம் சுமார் 1 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். கடந்த சில மாதங்களாக நிலுவையில் இருந்ததால், ஜனவரி முதல் மார்ச் வரையிலான நிலுவைத் தொகையையும் ஊழியர்கள் சேர்த்துப் பெறுவார்கள்.
எவ்வளவு கிடைக்கும்?
இந்த 2% உயர்வால் மாதச் சம்பளம் எவ்வளவு உயரும் என்பதை ஒரு உதாரணத்தின் மூலம் பார்க்கலாம்.. ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ.30,000 என்றால்.. பழைய அகவிலைப்படி கணக்கீடு படி 17,400 ரூபாய் கிடைக்கும். இப்போது அது உயர்த்தப்பட்டுள்ள நிலையில், 60% ஆக புதிய அகவிலைப்படி ரூ.18,000 ஆக உயரும். அதாவது, 30,000 ரூபாய் அடிப்படை ஊதியம் பெறுபவர்களுக்கு மாதம் 600 ரூபாய் கூடுதலாகக் கிடைக்கும். இது சிறிய தொகையாகத் தெரிந்தாலும், லட்சக்கணக்கான ஊழியர்களின் குடும்ப பட்ஜெட்டில் இது ஒரு முக்கியப் பங்கினை வகிக்கும்.
ஊதிய குழு
இந்த 2% உயர்வு ஒருபுறம் இருக்க, மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் 8-வது ஊதியக் குழுவை விரைவில் அமைக்க வேண்டும் எனத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன. இது தொடர்பாக அவர்கள் மத்திய அரசுக்கும் கோரிக்கை மனுவை சமர்ப்பித்துள்ளனர். அதில் குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை தற்போதுள்ள ரூ.18,000-ல் இருந்து ரூ.69,000ஆக உயர்த்த வேண்டும் என ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 'பிட்மென்ட் ஃபேக்டரை' (Fitment Factor) 3.83 ஆக உயர்த்தினால் மட்டுமே இது சாத்தியமாகும். இது அமலுக்கு வந்தால், மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய கட்டமைப்பு மொத்தமாக மாற்றி அமைக்கப்படும்.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வழங்கப்படும் இந்த அகவிலைப்படி உயர்வு, தற்போதைய பணவீக்கச் சூழலில் ஊழியர்களுக்கு ஒரு சிறிய நிம்மதியைத் தந்துள்ளதே தவிர, முழுமையான தீர்வாக அமையவில்லை. எட்டாவது ஊதியக் குழு அமைக்கப்பட்டால் மட்டுமே ஊழியர்களின் நீண்டகாலப் பொருளாதாரக் கோரிக்கைகள் நிறைவேறும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications