திருமணத்தின் போது சினிமா பாடல்களை போட்டால் அபராதமா? மத்திய அரசிடம் இருந்து வந்த முக்கிய விளக்கம்
டெல்லி: பொதுவாகத் திருமண நிகழ்வுகளில் இப்போது பாடல்கள் ஒலிபரப்பப்படுவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. இதற்கிடையே காப்பிரைட் சட்டம் என்ன சொல்கிறது.. இது விதிமீறலா இல்லையா என்பது குறித்து மத்திய அரசு முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது.
திருமணம் என்றாலே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். திருமணத்தில் என்னவெல்லாம் செய்ய வேண்டும்.. தங்கள் திருமணம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பல மாதங்களாக பிளான் செய்பவர்களும் இங்கே இருக்கிறார்கள்.

இப்போது நடக்கும் திருமண நிகழ்வில் பாடல்களைப் போடுவதும் டான்ஸ் ஆடுவதும் நிச்சயமாக இருக்கும். இருப்பினும், இப்படி திருமண நிகழ்வுகளில் டிஜே போடும் பாடல்கள் குறித்த குழப்பம் நீண்ட காலமாகவே இருந்து வந்தது.
திருமண நிகழ்வு: நீண்ட காலமாகவே இது குறித்து ஒரு குழப்பம் நிலவி வந்தது. திருமண நிகழ்வுகளில் உரிய அனுமதியில்லாமல் பாடல்களைப் போடுவது காப்பி ரைட் விதிமீறல் என்று ஒரு தரப்பினர் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் இவன்ட் பிளானர்கள் பெரும் பிரச்சினையை எதிர்கொண்டு வந்தனர். பாடல்களுக்கு உரிமை வைத்துள்ள நிறுவனங்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவதும் இதற்கு அவர்கள் ஃபைன் கட்டுவதும் தொடர்ந்து கொண்டே இருந்தது.
இது பல காலமாகத் தொடரும் பிரச்சினையாக இருக்கும் நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு ஒரு வழியாக விளக்கம் கொடுத்துள்ளது. 1957ஆம் ஆண்டின் காப்பி ரைட் சட்டம், ஏற்கனவே இதுபோன்ற நிகழ்வுகளில் சினிமா பாடல்களைப் போடுவதை சட்டப்பூர்வமாக அனுமதிக்கிறது. இருந்த போதிலும், குறிப்பிட்ட நிறுவனங்கள் இதிலும் காப்பி ரைட் சட்டம் பொருந்தும் என்று கூறி நஷ்டஈடு கேட்டு வந்தன. இதன் காரணமாகவே இரு தரப்பிற்கும் இடையே மோதல் இருந்தது.
விளக்கம்: இந்த விவகாரத்தில் விளக்கமளிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். இதற்கிடையே DPIIT- Department of promotion of industry and internal trade எனப்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை கடந்த வாரம் இது குறித்து தெளிவுபடுத்தியுள்ளது.
காப்பி ரைட் சட்டம் பிரிவு 52 (1) இன் படி, இசைப் படைப்புகளை மத நிகழ்வுகள், மத்திய/மாநில அரசு அல்லது எந்த உள்ளூர் அமைப்புகளின் நிகழ்வுகளில் ஒலிபரப்புவது காப்பிரைட் மீறலாகாது. இதில் திருமண ஊர்வலங்கள் மற்றும் திருமணங்களுடன் தொடர்புடைய விழாக்கள் ஆகியவையும் அடங்கும் அவை இந்த பிரிவின் கீழ் மத விழாக்களாகக் கருதப்படுகின்றன. விதி இப்படி இருக்கும் காப்பி ரைட் சட்டம் எனக் கூறி முரணான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிம்மதி: எனவே, இதுபோன்ற நிகழ்வுகளில் ஒலிபரப்பப்படும் பாடல்களுக்குக் காப்பி ரைட் மீறல் என்று கூறி யாராவது தொடர்பு கொண்டால் அவர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் சினிமா பாடல்கள் போட்டதால் திருமண ஏற்பாட்டாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், இனிமேல் அது தொடராது என்பது சற்றே நிம்மதி
இது குறித்து புனே ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அமித் ஷர்மா கூறுகையில், "மத்திய அரசு ஒரு வழியாக இந்த விவகாரத்தில் தெளிவான விளக்கத்தைக் கொடுத்துவிட்டனர். இனிமேல், திருமணங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விழாக்களில் பாடல்களைப் போடுவதற்கு யாரிடமும் இருந்து அனுமதி பெறத் தேவையில்லை. இதன் மூலம் நீண்ட காலம் இருந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. பொதுமக்களுக்கு இது நல்ல செய்தி தான்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications