தமிழகத்தில் பாரத் நெட் திட்டத்திற்கான ரூ. 1,950 கோடி டென்டர் ரத்து.. மத்திய அரசு
டெல்லி: தமிழகத்தில் பாரத் நெட் எனும் இன்டர்நெட் திட்டத்திற்கான ரூ 1,950 கோடி டெண்டரை மத்திய வர்த்தக துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது.
தமிழகத்தில் பாரத்நெட் திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகள் தொடர்பாக ஒரு சில நிறுவனங்களும் தன்னார்வல அமைப்புகளும் புகார்களை தெரிவித்தன. இதுகுறித்து தமிழக அரசும் விளக்கங்களை அளித்தது. புகார்களுக்கான இந்த விளக்கங்களை மத்திய அரசுக்கும் தமிழக அரசு அனுப்பி வைத்தது.

இந்த விளக்கத்தை ஏற்காத மத்திய அரசு டெண்டரை ரத்து செய்து இன்று உத்தரவிட்டுள்ளது. ரூ 1950 கோடியில் 12,524 கிராமங்களில் அதிவேக இன்டர்நெட் இணைப்பு தர தமிழக அரசால் கொண்டு வரப்பட்டது பாரத் நெட் திட்டம்.
டேன்ஃபிநெட் பெயரில் (தமிழ்நாடு பைபர் நெட் கழக நிறுவனம்) கருவிகள் கொள்முதலுக்கு டெண்டர் விட்டதில் விதிகள் மீறியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கருவிகள் கொள்முதலுக்கான டெண்டரில் குறைகளைக் களைந்து மறுடெண்டர் விடுமாறும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அறப்போர் இயக்கம் ஏற்கெனவே இந்த ஊழல் குறித்து புகார் மனுவை அளித்துள்ளது. புகார்கள் தொடர்பாக ஜூன் 23-ஆம் தேதி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. இதுகுறித்து வருவாய் துறை அமைச்சர் உதயகுமாரை கேட்டபோது மத்திய அரசின் விதிகளுக்குட்பட்டு தமிழக அரசு புதிய டெண்டரை விரைவில் கோரும்.
இந்த திட்டத்தில் 100 சதவீதம் வெளிப்படைத்தன்மை இருந்தது. இதில் மறைக்கும் திட்டமெல்லாம் இல்லை. யாரோ சிலர் அரசியல் ஆதாயத்திற்காக அரசு மீது ஊழல் புகார் கூறியுள்ளனர். விரைவில் ஆலோசனை நடத்தி புதிய டெண்டர் கோரப்படும். மக்கள் யாரும் இந்த தவறான பிரசாரத்தை நம்ப மாட்டார்கள் என்றார். கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு இலவச கணினிகளை அதிமுக அரசு கொடுத்து வருகிறது. இந்த நெட் திட்டத்தின் மூலம் 65 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என்பதே இந்த திட்டத்தின நோக்கமாகும்.












Click it and Unblock the Notifications