7 நாளுக்கு முன்பே வார்னிங்.. 3 முறை எச்சரித்தும் நிலச்சரிவை தடுக்க தவறிய கேரளா அரசு - அமித்ஷா கவலை
டெல்லி: கேரளா வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 185 பேர் பலியாகி உள்ளனர். மேலும் ஏராளமானவர்கள் மாயமாகி உள்ளனர். இந்நிலையில் தான் மத்திய அரசு முன்கூட்டியே வார்னிங் செய்தும் கேரளா அரசு அலட்சியம் காட்டியது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான முக்கிய தகவலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய கிராமங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் தான் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டித்தீர்த்தது. இத்தகைய சூழலில் தான் நேற்று நள்ளிரவில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது.

சூரல்மலை, முண்டக்கை மற்றும் மேப்பாடி கிராமங்கள் நிலச்சரிவில் சிக்கின. அதோடு கனமழையின் காரணமாக மழைநீரும் கிராமத்துக்குள் புகுந்தது. இதனால் வீடுகள் தண்ணீரில் மூழ்கியதோடு, பொதுமக்கள் அடித்து செல்லப்பட்டன. மொத்தம் 1000 பேர் வசித்த வந்த நிலையில் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இன்று மதியம் 3 மணி நிலவரப்படி பலியானவர்களின் எண்ணிக்கை என்பது 185யை கடந்துள்ளது. இன்னும் ஏராளமானவர்கள் மாயமாகி உள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை என்பது உயரும் என அஞ்சப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் நிலச்சரிவு தொடர்பாக மத்திய அரசு கேரளாவுக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை. இதனால் தான் இந்த பேரிடர் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் தான் கேரளா நிலச்சரிவு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் இன்று பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பேரிடர் குறித்து முன்கூட்டியே வார்னிங் தரும் அமைப்பு பற்றி அனைவரும் கேள்வி கேட்கின்றனர். இந்த அமைப்புக்கு மத்திய அரசு 2 ஆயிரம் கோடியை செலவிட்டுள்ளது. அதோடு நிலச்சரிவு தொடர்பாக கேரளாவுக்கு முன்கூட்டியே மத்திய அரசு அலர்ட் செய்திருந்தது.
நிலச்சரிவு குறித்து 7 நாட்களுக்கு முன்பாக அதாவது ஜூலை 23ம் தேதியே கேரளா அரசுக்கு வார்னிங் வழங்கப்பட்டது. அதன்பிறகு ஜூலை 24, 25 ஆகிய தேதிகளிலும் அடுத்தடுத்து வார்னிங் செய்யப்பட்டது. இந்த வார்னிங்கின்போது 20 சென்டி மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யும் , நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
3 முறை எச்சரிக்கை செய்தும் கேரளா அரசு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விஷயத்தில் அரசியல் எதுவும் இருக்கக்கூடாது என விரும்புகிறேன். இந்த துயரத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவம், பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணி நடந்து வருகிறது'' என்றார்.












Click it and Unblock the Notifications