ஓ.பி.சி (OBC) பட்டியலை மாநிலங்களே முடிவு செய்யலாம்- லோக்சபாவில் மசோதா தாக்கல்-எதிர்க்கட்சிகள் ஆதரவு
டெல்லி: இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் (ஓபிசி) எந்தெந்த ஜாதிகளை சேர்ப்பது, நீக்குவது தொடர்பான அதிகாரங்களை மீண்டும் மாநிலங்களுக்கே வழங்க வகை செய்யும் அரசியல் சாசன திருத்த மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் விரேந்திரசிங்க் இந்த மசோதாவைத் தாக்கல் செய்தார். அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
மகாராஷ்டிராவில் மராத்தா ஜாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பில், மராத்தா ஜாதியினருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. மாநில அரசுகள் இடஒதுக்கீடு வழங்க முடியாது. மேலும் 2018-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த 102-வது அரசியல் சாசன திருத்தத்தின் படி, சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காணும் அதிகாரம் மத்திய அரசுக்குதான் இருக்கிறது; மாநில அரசுகளுக்கு இல்லை என்றது.
இது மாநிலங்களை கடும் அதிர்ச்சி அடைய செய்தது. ஓபிசி வகுப்பினரை அடையாளம் காணும் அதிகாரம் மீண்டும் மாநிலங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதனடிப்படையில் இன்று லோக்சபாவில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காணும் அதிகாரங்களை மாநிலங்களுக்கு வழங்க வகை செய்யும் 127-வது அரசியல் சாசன திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் விரேந்திரசிங் இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தார்.

எப்படியானது திருத்தம்?
அரசியல் சாசனத்தின் 342வது பிரிவுக்குட்பட்ட A1,2 ஆகிய சரத்துகள், 338B, 366 ஆகிய பிரிவுகளில் இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டு அது 342 A(3) சரத்து என வகைப்படுத்தப்படும். இந்த புதிய சரத்தானது ஓபிசி பட்டியல் தொடர்பான மத்திய, மாநில அரசுகளின் அதிகாரத்தை விவரிக்கும். ஓபிசி பட்டியலில் ஜாதிகளை சேர்ப்பது, நீக்குவது என்பது மாநிலங்களுக்கான அதிகரம் என்பதையும் இந்த ஷரத்து உறுதி செய்யும். இந்த மசோதாவுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒட்டுமொத்தமான ஆதரவை தெரிவித்துள்ளன.

அனைத்து கட்சிகளும் ஆதரவு
இன்று முன்னதாக மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் 15 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திமுக, ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. இது மாநில அதிகாரங்களை உறுதி செய்யும் மசோதா; இதர பிற்படுத்தப்பட்டோரின் நலன் சார்ந்தது; ஆகையால் மத்திய அரசின் இந்த மசோதாவை அனைவரும் ஆதரிப்போம் என தீர்மானிக்கப்பட்டது. லோக்சபாவில் இன்று பேசிய காங்கிரஸ் கட்சியின் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தின் மீது காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை உள்ளது. ஆகையால் இந்த ஓபிசி மசோதாவை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது என்றார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு- திமுக
இந்த விவாதத்தின் போது திமுகவின் டி.ஆர்.பாலு, ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். பகுஜன் சமாஜ் கட்சியும் இந்த கோரிக்கையை ஆதரித்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே பேசுகையில், மகாராஷ்டிராவில் மராத்தா ஜாதியினருக்கான இடஒதுக்கீட்டை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஓபிசிக்கு 27% இடம்
அண்மையில்தான் மத்திய அரசு, அகில இந்திய மருத்துவப் படிப்பு இடங்களில் திடீரென இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தது. கடந்த பல ஆண்டுகளாக இந்த இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை. இதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளும் நீதிமன்றத்துக்குப் போயின. அதில்தான் சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவ படிப்புக்கான அகில இந்தியா கோட்டாவில் 27% இடஒதுக்கீட்டை பின்பற்ற உத்தரவிட்டது. ஆனாலும் இந்த உத்தரவைக் கூட மத்திய அரசு செயல்படுத்த மறுத்தது. இதனால் நாடு முழுவதும் பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டனர். இதனையடுத்து மத்திய பாஜக அரசு மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில்தான் திடீரென 27% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவோம் என ஒப்புதல் தந்தது மத்திய அரசு.

தேர்தல் செய்யும் மாயம்
இதனைத் தொடர்ந்து தற்போது இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை முடிவு செய்யும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்க வகை செய்யும் மசோதாவை தாக்கல் செய்துள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இம்மசோதாவை ஆதரிப்பதால் இது எளிதாக நிறைவேறிவிடும் என்பது யதார்த்தம்தான். ஆனால் மத்திய பாஜக அரசு திடீரென ஓபிசி பிரிவினர் மீது அதிக கரிசனம் காட்டுவது என்பதே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தல்களுக்காகத்தான். அடுத்த ஆண்டு உ.பி., பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிகமாக இருப்பது உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான். ஆனால் உ.பி.யில் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியின் வாக்கு வங்கியாக இருக்கின்றன. இந்த வாக்கு வங்கிக்கு குறிவைத்துதான் இப்படி அடுத்தடுத்த ஓபிசி சார்பு நிலைப்பாடுகளை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.












Click it and Unblock the Notifications