அமலாக்கத்துறை இயக்குநர் பதவியை நீட்டிக்க கோரும் மத்திய அரசு- உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
டெல்லி: அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா (எஸ்கே மிஸ்ரா) பதவி நீட்டிப்பு சட்டவிரோதம்; ஜூலை 31 வரை மட்டுமே பதவியில் நீடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மத்திய அரசு புதிய மனுத் தாக்கல் செய்துள்ளது. இம்மனு மீது உச்சநீதிமன்றம் நாளை விசாரணை நடத்த உள்ளது.
மத்திய பாஜக அரசில் மிக கடுமையான விமர்சனங்களை பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டிருப்பது அமலாக்கத்துறை. இதன் தற்போதைய இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா (சஞ்சய் மிஸ்ரா) (எஸ்கே மிஸ்ரா). இவருக்கு மத்திய அரசு 3 முறை பணி நீட்டிப்பு வழங்கியது.

சஞ்சய் மிஸ்ராவுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-வது பணி நீட்டிப்பை மத்திய அரசு வழங்கியது கடுமையாக விமர்சனங்களை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன. காங்கிரஸின் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா, ஜெயா தாக்கூர், திரிணாமுல் காங்கிரஸின் மஹூவா மொய்த்ரா உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில், சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவி நீட்டிப்புக்கு எதிராக வழக்குகளைத் தொடர்ந்தனர்.
அண்மையில் இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், சஞ்சய் மிஸ்ராவுக்கு மத்திய அரசு பதவி நீட்டிப்பு கொடுத்தது சட்டவிரோதம். 2021-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரான. ஜூலை 31-ந் தேதி வரை மட்டுமே சஞ்சய் குமார் மிஸ்ரா, அமலாக்கத்துறை இயக்குநராக இருக்க வேண்டும். அதற்கு மேல் அவர் அப்பதவியில் நீடிக்கவே கூடாது என கறாராக உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் மத்திய அரசு இன்று உச்சநீதிமன்றத்தில், சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு தருவது தொடரபாக புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இப்புதிய மனு மீது உச்சநீதிமன்றம் நாளை விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.
அமலாக்கத்துறை இயக்குநர் பதவியே சட்டவிரோதம் என்கிற போது அவர் பதவி காலத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நிலை என்ன? என பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். தற்போது அமலாக்கத்துறை இயக்குநர் தொடர்பான வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications