பாஜகவை நம்பி ஓடிப் போன சம்பாய் சோரன், சீதா சோரன்.. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு ரிட்டர்ன்?
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியை நம்பி அக்கட்சியில் இணைந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் அண்ணி சீதா சோரன் உள்ளிட்டோர் மீண்டும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஞ்சியில் நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்தை சீதா சோரன் உள்ளிட்ட சிலர் புறக்கணித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநில பழங்குடிகளிடம் பெரும் செல்வாக்கு பெற்ற கட்சி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா. ஜார்க்கண்ட் தனி மாநிலம் உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தது.

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பாஜக படுதோல்வி அடைந்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடிகளின் 28 தனித் தொகுதிகளில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 27-ல் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4-வது முறையாக ஹேமந்த் சோரன் பதவியேற்றார். இந்த நிலையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இருந்து விலகிய தலைவர்களை மீண்டும் ஒருங்கிணைக்கும் பணிகளை ஆளும் கட்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த பின்னணியில் முன்னாள் முதல்வரும் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்ற மூத்த அரசியல் தலைவர் சம்பாய் சோரன், மீண்டும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இணைய இருக்கிறார். ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்த போது சம்பாய் சோரன், முதல்வராக்கப்பட்டார். ஆனால் ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுதலையான போது சம்பாய் சோரன் முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. இதனால் கோபமடைந்து பாஜகவில் இணைந்தார் சம்பாய் சோரன். தற்போது மீண்டும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு திரும்ப இருக்கிறார்.
இதேபோல ஹேமந்த் சோரனின் அண்ணி சீதா சோரனும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை விட்டு பாஜகவில் இணைந்தார். தற்போது சீதா சோரனும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு திரும்ப இருக்கிறார். ராஞ்சியில் நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்தை சீதா சோரன் புறக்கணித்திருந்தார். இத்தகைய நிகழ்வுகளால் ஜார்க்கண்ட் அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications