தேர்தல் ஜனநாயகம் நசுக்கப்படுவதை தடுக்க.. உச்சபட்ச அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளோம்- தலைமை நீதிபதி
டெல்லி: சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறியுள்ள உச்சநீதிமன்றம், ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்திருக்கிறது. இந்த தீர்ப்பின் போது தலைமை நீதிபதி கூறிய வார்த்தைகள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி சண்டிகர் மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்தது. இப்படி இருக்கையில், இந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த அதிர்ச்சி குறைவதற்குள், தேர்தல் அதிகாரி வாக்குள் சீட்டில் கிறுக்குவதை போன்ற மற்றொரு வீடியோ வெளியாகி அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து உச்சநீதிமன்றத்தை நாடிய ஆம் ஆத்மி, தேர்தலில் முறைக்கேடு நடந்திருப்பதக கூறியது. இதனையடுத்து, வழக்கை விசாரித்து வந்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிப்பெற்றதாக கூறியுள்ளது. இந்த தீர்ப்பின்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறிய வார்த்தைகள் பெரும் கவனம் பெற்றிருக்கின்றன.
இன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் வாக்கு பெட்டியை பார்க்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கேட்டார். அவரிடம் பெட்டி கொடுக்கப்பட்ட நிலையில், அதிலிருந்த வாக்கு சீட்டுகளை சரிபார்த்தார். பின்னர் அந்த சீட்டுக்களை தேர்தல் அதிகாரி அனில் மாசிஹ் முன்பு காண்பித்து, "நேற்றைய வழக்கு விசாரணையின்போது, வாக்கு சீட்டுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதால்தான் அதில் பேனாவால் எழுதினேன் என்று கூறியிருந்தீர்கள். இப்போது என் கையில் இருக்கும் வாக்கு சீட்டுக்களை பார்த்து சொல்லுங்கள் அவை எங்கே சேதப்படுத்தப்பட்டுள்ளது?" என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது ஆம் ஆத்மி தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், "எந்த வாக்குச்சீட்டுகளும் சேதமடையவில்லை. அனில் மசிஹ் நீதிமன்றத்திலேயே பொய் கூறியுள்ளார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். இதனையடுத்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டார். மேலும், செல்லாததாக அறிவிக்கப்பட்ட 8 வாக்குகளும் செல்லும் என்றும் அவற்றை மறு வாக்கு எண்ணிக்கையின்போது கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதனையடுத்து நீதிமன்றத்தில் தேர்தல் குளறுபடி தொடர்பான வீடியோ காட்சிகள் திரையிடப்பட்டன. அப்போது, "அனைவரும் இந்த வீடியோவை பாருங்கள். சிறிய பொழுதுபோக்கு அனைவருக்கும் நல்லது" என்று தலைமை நீதிபதி கூறினார். நீதிமன்றத்தில் லேசான சிரிப்பலை எழுந்தது.
வழக்கின் போக்கு இப்படி போய்க்கொண்டிருக்கையில், மீண்டும் தேர்தல் நடத்தப்படுமா? என்று கேள்வி எழுந்தது. இறுதியாக தீர்ப்பளித்த தலைமை நீதிபதி சந்திரசூட், "வாக்கு எண்ணிக்கையில் மட்டுமே குறைபாடு இருப்பதால் ஒட்டுமொத்த தேர்தலையும் நாம் புறக்கணித்துவிட முடியாது. தேர்தல் ஜனநாயகம் நசுக்கப்படுவதை தடுக்க உச்சபட்ச அதிகாரத்தை பயன்படுத்துகிறோம். இந்த வழக்கில் அரசியலமைப்பின் 142 வது பிரிவின் கீழ் நீதிமன்றம் அதன் அதிகாரங்களை பயன்படுத்தியுள்ளது" என்று கூறி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி + காங்கிரஸின் கூட்டணி வேட்பாளரான குல்தீப் குமார் வெற்றிபெற்றதாக அறிவித்தார்.
தேர்தல் ஜனநாயகத்தை பாதுகாக்க உச்சநீதிமன்றம் உட்சபட்ச அதிகாரத்தை பயன்படுத்தியிருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications