‛கேம் ஸ்டார்ட்’.. சபாநாயகர் OR என்டிஏ கன்வீனர் பதவிக்கு குறி.. நிதிஷ் - நாயுடுவால் பாஜக நெருக்கடி
டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சந்திரபாபு நாடு மற்றும் நிதிஷ் குமார் என கூட்டணி கட்சியின் தலைவர்களின் வலியுறுத்தல்கள் பாஜகவுக்கு கூடுதல் டென்ஷனை உருவாக்கியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றிருக்கிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதியும், 94 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக மே 7ம் தேதியும், 96 தொகுதிகளுக்கு 4ம் கட்டமாக மே 13ம் தேதியும், 5ம் கட்டமாக 49 தொகுதிகளுக்கு மே 20ம் தேதியும், 7 மாநிலங்களில், 58 தொகுதிகளில் மே 25ம் தேதி 6ம் கட்டமாகவும், ஜூன் 1ம் தேதி 7 மாநிலங்களில் 57 தொகுதிகளுக்கு 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடந்து முடிந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த முறை மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் நாற்காலியில் அமர்வாரா? அல்லது இந்தியா கூட்டணி வலுவான போட்டி கொடுத்து ஆட்சியை கைப்பற்றுமா? என்கிற எதிர்பார்ப்புகள் தீவிரமடைந்தன. தொடக்கம் முதல் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு கடும் போட்டி நிலவியது.
இறுதியாக பாஜக கூட்டணி 293 தொகுதிகளிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 தொகுதிகளையும் கைப்பற்றியது. பாஜகவை எடுத்துக்கொண்டால் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உதவியின் ஆட்சியமைக்க முடியாது. இந்த இரண்டு கட்சிகளிடம் 17+16 என 33 தொகுதிகள் இருக்கின்றன. இதை கழித்துவிட்டால் பாஜக கூட்டணிக்கு 260 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும். பெரும்பான்மை பெற 272 தொகுதிகள் வேண்டும்.
எனவே சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமாரின் ஆதரவை பாஜக நம்பியிருக்கிறது. இதற்கு கைமாறாக தங்களுக்கு மக்களவை சபாநாயகர் பதவி வேண்டும் அல்லது என்டிஏ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவி வேண்டும் என்று இரு கட்சிகளும் கோர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சபாநாயகர் பதவியை கோருவதற்கு பின்னணியில் வலுவான காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, தங்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாய்வதை தடுக்க சபாநாயகர் பதவியை இக்கட்சிகள் கோருகின்றன.
வரும் 5 ஆண்டுகளில் ஒரு வேளை காங்கிரசுக்கு ஆதரவளிக்க இந்த கட்சிகள் முயலும் பட்சத்தில் சபாநாயகர் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தகுதி நீக்கம் செய்ய வாய்ப்பிருக்கிறது. ஆனால், சபாநாயகர் பதவி தங்களிடம் இருந்தால் இதற்கான வாய்ப்பு இருக்காது. மட்டுமல்லாது சபாநாயகர் பதவி நாடாளுமன்றத்தில் அதிகாரமிக்க பதவி என்பதால் இதற்கான போட்டி தீவிரமடைந்திருக்கிறது.
மறுபுறம் பாஜக, ரயில்வே, உள்துறை, நிதி, பாதுகாப்பு, சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற 6 முக்கிய துறைகளை பகிர்ந்தளிக்க தயாரக இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications